ஏ ரிவர் ரன்ஸ் த்ரூ இட் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 5706
நார்மனின் கோணத்தில் படத்தின் காட்சிகள் விவரிக்கப்படுகின்றன.
படத்தில் இடம் பெறும் வீடு, அது அமைந்திருக்கும் இடம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படும் புல்வெளிகள்… மரங்கள்… செடிகள்… கொடிகள்… மலர்கள், ‘சல சல’வென ஓசை எழுப்பி பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஆறு, அது உண்டாக்கும் இரைச்சல், ஆற்றின் அருகில் பலவகை இனிய ஓசைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் பறவைகள், குருவிகள்…
படம் முழுக்க இவற்றுடன்தான் நாம் பயணம் செய்து கொண்டிருப்போம்.
தந்தை தன் மகன்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது, அவர்களுடன் நீந்தி மகிழ்வது, வீட்டில் பாடம் சொல்லித் தருவது… என்று வரும் காட்சிகளைப் பார்க்கும்போது, இப்படியொரு தந்தை நமக்கு கிடைக்க மாட்டாரா என்று நம் மனம் ஏங்கும். தன் செல்ல மகன்களின் வளர்ச்சியில்தான் அந்த அன்பு தந்தைக்கு எவ்வளவு பெரிய அக்கறை!
சிறுவர்களாக இருந்த தன் மகன்கள் கட்டிளங் காளைகளாக திரும்பி வந்து ஆற்று நீரில் நீந்துவதையும், ஆர்வத்துடன் மீன் பிடிப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தந்தையின் கண்களிலும், முகத்தின் பிரகாசத்திலும் நம்முடைய ஒவ்வொரு தந்தையையும் நாம் பார்ப்போம்.
என்னதான் அறிவுரை கூறி வளர்த்தாலும், பிறக்கும் மகன்கள் எல்லோருமே ஒரே பாதையில் நடந்து போய் விடுவார்களா என்ன? மூத்த மகன் ‘இப்படித்தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்’ என்று மனதிற்குள் திட்டம் போட்டு, அதற்கேற்றபடி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதில் நடைபோட, இளைய மகன் மட்டும் தாறுமாறான பாதைகளில் நடந்து, வாழ்க்கையின் சந்தோஷத்தைக் கெடுத்துக் கொண்டதற்கு யாரைக் குற்றம் சுமத்துவது?
இந்த படத்தைப் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்னும் உணர்வே நமக்கு உண்டாகாது. மாறாக, ஏதோ நம் குடும்பத்தின் கதையையே நாம் இதில் பார்க்கிறோமோ என்னும் எண்ணம்தான் நமக்கு உண்டாகும்.
Norman ஆக Craig sheffer நடிக்க, இளையமகன் Paul ஆக Brad Pitt வாழ்ந்திருக்கிறார். என்ன அழகு! என்ன உடலமைப்பு! என்ன துள்ளல்! என்ன இளமையின் துடிப்பு! ‘சின்ன மகன்’ பால் கதாபாத்திரத்திற்கு Brad Pitt உயிர் தந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
தந்தையாக நடித்திருப்பவர் Tom Skerritt. பாசமான தந்தை என்றால் இப்படித்தான் இருப்பார் என்று தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் நம் இதய சிம்மாசனங்களில் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பதிலிருந்தே இவரின் திறமையை நாம் புரிந்து கொள்ளலாம்.
1993ஆம் வருடத்திற்கான சிறந்த ஒளிப்பதிவிற்கான Academy விருது (ஒளிப்பதிவாளர் : Philippe Rousselot) இப்படத்திற்கு கிடைத்தது.
‘A River Runs Through it’ வர்த்தக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் எல்லா வயதுகளைக் கொண்டவர்களும் இந்தப் படத்தைப் பார்த்தார்கள். ‘உணர்ச்சிகரமான காட்சிகளைக் கொண்ட மிகச் சிறந்த ஒரு குடும்பக் கதை’ என்று அனைத்துத் தரப்பு மக்களும் கூறினார்கள்.
பத்திரிகைகள் இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த விமர்சனங்கள் எழுதின.
Brad Pitt இன் கலைப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக இப்படம் அமைந்தது.
படத்தில் வரும் மற்ற நடிகர்களை விட, Brad Pitt ஒரு தனி இடத்தை நம் உள்ளங்களில் இந்தப் படத்தின் மூலம் பிடித்தார் என்பதிலிருந்தே எந்த அளவிற்கு அவர் சிறப்பாக நடித்து, முத்திரை பதித்திருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
நான் இந்த படத்தைப் பார்த்து எவ்வளவோ வருடங்கள் ஆகி விட்டன. எனினும், இப்போது கூட அந்த வீடும், அதில் வசிக்கும் கதாபாத்திரங்களும், இயற்கை அழகு தவழும் இடங்களும், நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியும், அதில் தங்களின் தந்தையுடன் சேர்ந்து மீன் பிடிக்கும் மகன்களும் என் மனத் திரையில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
‘A River Runs Through it’ படத்தைப் பார்த்த பிறகு, நான் Brad Pitt இன் ரசிகனாகவே ஆகி விட்டேன் என்பதே உண்மை.
நல்ல கதையம்சம் கொண்ட கவித்துவமான படத்தைப் பார்க்க ஆசைப்படும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் இது.