லைஃப், அன்ட் நத்திங் மோர்… - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 5973
தந்தையும் மகனும் பூகம்பத்தால் சின்னாபின்னமாகிக் கிடக்கும் கிராமத்தைச் சுற்றி பார்க்கிறார்கள். பிழைத்திருப்பவர்களிடம் அவர்களின் துயரக் கதைகளைக் கேட்கிறார்கள். அப்படி சந்தித்தவர்களின் ஒரு இளம் திருமண ஜோடியும் இருக்கிறது. அவர்கள் தங்களின் உறவினர்கள் அனைவரையும் பூகம்பத்தில் இறந்து விட்டார்கள். இறந்து போனவர்களுக்கு தாங்கள் இறந்து விடுவோம் என்ற விஷயம் தெரியாது என்றும், அதனால் தாங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்று தீர்மானித்து விட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
மீண்டும் பயணம் தொடர்கிறது. வழியில் முன்பு படமாக்கப்பட்ட படத்தில் நடித்த ஒரு சிறுவனை அவர்கள் பார்க்கிறார்கள். அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு, அந்த கிராமத்தில் தங்களின் சொந்த வீடுகளை இழந்து, கூடாரங்களில் தங்கியிருக்கும் நூற்றுக் கணக்கான மக்களை அவர்கள் போய் பார்க்கிறார்கள்… அவர்கள் பூகம்ப அனுபவங்களையும், அதனால் அவர்களின் வாழ்க்கையில் உண்டான பாதிப்புகளையும் கேட்கிறார்கள்.
இயக்குநரின் மகன் உலகக் கோப்பையை வெல்வதற்காக நடைபெறும் இறுதி கால்பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் தான் பார்க்க விரும்புவதாக கூறுகிறான். அதனால், அவனை அந்த ஊரின் சிறுவர்கள் மத்தியில் இருக்கும்படி விட்டு விட்டு, தான் திரும்பி வரும்போது அவனை வந்து அழைத்துக் கொள்வதாக இயக்குநர் கூறுகிறார்.
பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதையும், அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையில் இருப்பதையும் பார்த்து இயக்குநருக்கு உண்மையிலேயே ஆச்சரியம் உண்டாகிறது.
இதற்கிடையில் ‘Where is my friend’s Home?’ படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனுக்கு பூகம்பத்தால் பாதிப்பு இல்லை, அவன் உயிருடன் நலமாக இருக்கிறான் என்ற தகவல் இயக்குநருக்கு கிடைக்கிறது. எனினும், அவனை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் இயக்குநர்.
அந்தச் சிறுவன் இருக்கும் ஊரை அடைய வேண்டுமென்றால், ஒரு உயரமான மலையைக் கடந்து செல்ல வேண்டும். இயக்குநரின் பழைய கார் மலையின் மீது ஏறுகிறது. வளைந்து வளைந்து செல்லும் பாதையில் பயணிக்கும் கார், இப்போது செங்குத்தான மலைப் பாதையில் ஏற வேண்டிய நிலை. அந்தக் கார் மேலே ஏற சிரமப்பட்டு, பின்னாலேயே வருகிறது. இயக்குநர் எவ்வளவு முயன்றும், கார் முன்னோக்கி நகர்வதாக இல்லை.
அதே நேரத்தில் ஒரு கிராமத்து மனிதன் தன் தலையில் சுமையை வைத்துக் கொண்டு மேல் நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். காரின் இயந்திரம் வெப்பமாகி, கார் நின்று விடுகிறது. இயந்திரத்தை மீண்டும் ‘ஸ்டார்ட்’ பண்ணுவதற்கு சுமையுடன் இருக்கும் மனிதன் உதவுகிறான். தொடர்ந்து அவன் எந்தவித சிரமமும் இல்லாமல் மேல் நோக்கி நடந்து போய்க் கொண்டே இருக்கிறான்.
அந்த மனிதனின் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், இலக்கை அடைய வேண்டும் என்ற வேட்கையும் இயக்குநருக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. வண்டி நின்று போய், அனேகமாக இனி மலை மேல் ஏறுவது சாத்தியமே இல்லாத ஒன்று என்று நம்பிக்கையற்றிருந்த இயக்குநருக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. இவ்வளவு தூரம் பயணித்து வந்து விட்டோம் – படத்தில் நடித்த அந்தச் சிறுவனின் ஊருக்குச் சென்று, அவனைப் பார்க்காமல் திரும்ப கூடாது என்ற முடிவுக்கு அவர் வருகிறார். கார் மேலே செல்வதும், கீழே மீண்டும் திரும்பி வருவதுமாக இருக்கிறது.
இப்போது- Extreme Long shot.
தூரத்தில் மலையும், மலைப் பாதையும் தெரிகிறது. இயக்குநரின் கார் மெதுவாக திணறியபடி மலைப் பாதையில் மேல் நோக்கி ஏறுகிறது. சிறிது சிறிதாக ஏறி… மலையின் உச்சியை நோக்கி கார் பயணித்துக் கொண்டிருக்கிறது! ‘இனி பிரச்னையில்லை…. கார் எப்படியும் மலையின் உச்சியை அடைந்து, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து விடும்’ என்ற நம்பிக்கை நம் மனதில் உண்டாகிறது. படத்தில் நடித்த சிறுவனை இயக்குநர் மிக விரைவில் சந்திக்கப் போகிறார் என்னும் எண்ணமும் நம் மனதின் அடித்தளத்தில் ஆழமாக உண்டாகிறது.
அத்துடன் படம் முடிவடைகிறது.
கதை… கதை… என்று இங்கிருக்கும் இயக்குநர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்களே… இதெல்லாம் கதை இல்லையா என்று நமக்கு கூறாமல் கூறுகிறார் Abbas Kiarostami.
இப்படியெல்லாம் கூட படம் எடுக்கலாம் என்பதை உலகிற்கு காட்டுகிறார் அப்பாஸ்.
படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை, ஒரு நிமிடம் கூட சோர்வு உண்டாகாத அளவிற்கு ஒரு படத்தை இயக்குவது எவ்வளவு பெரிய விஷயம்! அதில் மிகப் பெரிய பெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குநர்!
ஒரு கார் பயணத்தையே முழு நீள படமாக எடுப்பது என்பது எத்தகைய புதுமையான முயற்சி! அத்துடன் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஈரானின் கிராமங்களையும், மக்களையும், அவர்களின் துயரம் நிறைந்த வாழ்க்கைகளையும்…
இதற்காகவே Abbas Kiarostami ஐ நாம் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.
இன்று உலக திரைப்பட ரசிகர்களால் அவர் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதை அவரின் இத்தகைய படங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.