Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4006
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
நாட் ஒன் லெஸ்
(சீன திரைப்படம்)
என் மனதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான திரைப்படம்.
சீனாவிலிருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடம், அதில் படிக்கும் மாணவர்கள், அங்கு வாழும் சாதாரண மக்கள், அவர்களின் வாழ்க்கைகள் - இவைதான் இப்படத்தின் மைய அம்சங்கள். இவற்றை வைத்துக் கொண்டு ஒரு உலகத் தரம் வாய்ந்த படமாக இதை இயக்கியிருக்கும் புகழ் பெற்ற சீன திரைப்பட இயக்குநரான Zhang Yimou வை நாம் உயரத்தில் வைத்து கட்டாயம் கொண்டாட வேண்டும்.
அந்த கிராமத்திலிருக்கும் பழமையான அந்த பள்ளிக்கூடத்திற்கு ஒரே ஒரு ஆசிரியர்தான். விவசாயம் செய்து கொண்டு, கூலி வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் அந்த ஊர் மக்களுக்கு கல்வி விஷயத்தில் அப்படியொன்றும் பெரிய நாட்டமில்லை. பள்ளிக்கூடம் பக்கம் அவர்கள் மழைக்குக் கூட ஒதுங்கியதில்லை.
அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக் கூடத்திற்கு எப்படி அனுப்பி வைப்பார்கள்? பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைப்பதை விட, ஏதாவது கூலி வேலைக்கு அனுப்பினால், செலவுக்காவது பணம் வரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அங்கு வேலை செய்யும் ஆசிரியரின் முயற்சியாலும், வற்புறுத்தலாலும்தான் குறிப்பிட்ட அளவிலாவது மாணவர்கள் பள்ளிக் கூடத்திற்கே வருகிறார்கள். அப்படியே வந்தாலும், ஆசிரியர் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கும் போது, பக்கவாட்டில் இருக்கும் வழியே யாருக்கும் தெரியாமல் மாணவர்கள் ஒடி விடுவது என்பது தினமும் நடக்கக் கூடிய ஒரு செயலாக இருக்கிறது.
இதற்கிடையில் சில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்கிறார் ஆசிரியர். அப்போது மாணவர்களுக்கு யார் பாடம் சொல்லித் தருவது? அதே ஊரில் ஆரம்ப பள்ளிக் கல்வி மட்டும் கற்றிருக்கும் ஒரு 13 வயது சிறுமி இருக்கிறாள். அவள் பெயர் வெய் மின்ஸி. தான் வரும் வரை மாணவர்களுக்கு ஆசிரியையாக இருந்து பாடம் சொல்லித் தரும்படியும், அதற்கு தான் வந்தவுடன் சம்பளம் தருவதாகவும் அவர் கூறுகிறர். இதற்கு முன்பு அந்த மாதிரியான அனுபவம் இல்லாத வெய், ஆரம்பத்தில் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள தயங்குகிறாள். எனினும், ஆசிரியரின் தொடர் வற்புறுத்தலைத் தொடர்ந்து, அதற்கு அவள் சம்மதிக்கிறாள்.
இப்போது இருக்கும் மாணவர்களில் ஒருவர் கூட குறையக் கூடாது... தான் திரும்பி வரும்போது எல்லா மாணவர்களும் அப்படியே பள்ளிக் கூடத்தில் இருக்க வேண்டும். அப்படி அவள் பார்த்துக் கொண்டால், தான் திரும்பி வந்தவுடன் போனஸ் ஆகவும் ஏதாவது தருவதாக அவர் கூறுகிறார்.
ஆசிரியர் அங்கிருந்து கிளம்பி விட. பள்ளிக் கூடத்தின் ஆசிரியையாக ஆகிறாள் அந்த 13 வயது சிறுமி. அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி ஆசிரியையாக இருக்க, அவளுக்கு நன்கு தெரிந்த சிறுவர்களும் , சிறுமிகளும் அவள் கூறுவதை எப்படி கேட்பார்கள்?. வகுப்பறையில் ஒரே கேலியும், கிண்டலும்தான். எல்லாவற்றையும் கடந்து, அவள் ஒரு பொறுப்பான இளம் ஆசிரியையாக இருக்கிறாள். மாணவர்களுக்கு தனக்கு தெரிந்ததை கற்றுத் தருகிறாள்.
திடீரென்று வகுப்பறையிலிருந்த ஸாங்க் ஹுய்க் என்ற மாணவன் அவனுடைய தாயால், நகரத்திற்கு ஏதாவது வேலை தேடி அனுப்பப்பட்டு விடுகிறான். அவ்வளவுதான்- ஆடிப் போகிறாள் வெய். ‘ஒரு மாணவன் கூட குறையக் கூடாது’ என்று ஆசிரியர் கூறியிருக்கும் வேளையில் ஒரு மாணவன் குறைந்துவிட்டால்...?
அவனைத் தேடி நகரத்திற்கு புறப்படுகிறாள் வெய். பழக்கமே இல்லாத, ஆரவாரம் நிறைந்த JianjJiakou என்ற அந்த நகரத்தின் சாலைகளிலும், தெருக்களிலும் அலைந்து, சிறுவனை வெய் தேடுகிறாள். அந்த கிராமத்துச் சிறுமிக்கு, பரபரப்பான நகரம் புதுமையாகவும், பயமாகவும் இருக்கிறது. எனினும், தன் முயற்சியை கைவிடாமல் அவள் தேடுகிறாள்.
அவள் சிறுவனைத் தேடிக் கொண்டிருக்க, சிறுவன் பசியுடனும், தாகத்துடனும் தெருத் தெருவாக அலைந்து கொண்டிருக்கிறான். எங்கும் வேலை கிடைப்பதாக இல்லை. தெரு கடைகளையும், சாலையோர உணவு கடைகளையும் ஏக்கத்துடன் பார்த்து நடந்து கொண்டிருக்கிறான். வேறு வழியில்லாமல், கை நீட்டி இரந்து, வாங்கி சாப்பிட்டு... தூங்குகிறான்.
எங்கும் சிறுவனை சிறுமி வெய்யால் பார்க்க முடியவில்லை. தாளில் பேனாவில் எழுதி, நோட்டீஸ் ஒட்டுகிறாள்- ‘சிறுவன் காணவில்லை’ என்று, தொடர்ந்து அங்குள்ள தொலைக்காட்சி நிலையத்திற்கு முன்னால் வருகிறாள்.
உள்ளே நுழைய முயற்சிக்கிறாள். யாரும் விடுவதாக இல்லை. இரவு வந்து விடுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் அந்த கட்டிடத்திற்கு வெளியிலேயே கவலையுடன் அமர்ந்திருக்கிறாள். உள்ளே.. மாடியிலிருந்து பார்த்த அதிகாரி அவளை உள்ளே அழைத்து வரச் செய்கிறார். அவளுடைய முழு கதையையும் கேட்கிறார். ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் பேட்டியாக அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
வறுமை சூழ்ந்த தன்னுடைய கிராமம், அங்கு வாழும் சாதாரண மக்களின் சிரமங்கள் நிறைந்த வாழ்க்கைகள், பள்ளிக் கூடத்தின் அவல நிலை, சிறுவர்கள் பள்ளிக் கூடத்திற்கு வராமல் கூலி வேலைகளுக்குச் செல்வது, தான் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றுவது, சிறுவன் நகரத்திற்கு ஓடி வந்தது, அவனைத் தான் தேடிக் கொண்டிருப்பது... எல்லாவற்றையும் அவள் கூறுகிறாள்.
அதை ஒரு இடத்தில் சிறிதும் எதிர்ப்பார்க்காமல் பார்க்கிறான் ஸாங்க் ஹுய்க் என்ற அந்தச் சிறுவன்.
பிறகென்ன?
சிறுவன் , ஆசிரியை ‘வெய்’ யுடன் சேர்கிறான். அவனை அழைத்துக் கொண்டு வெய் மலர்ந்த முகத்துடன்... ஏதோ பெரிதாக சாதித்த மன நிறைவுடன் தன் கிராமத்தை நோக்கி பயணிக்கிறாள். அவர்கள் மட்டும் பயணிக்கவில்லை. அவர்களுடன் சேர்ந்து தொலைக் காட்சியின் மொத்த படப்பிடிப்பு குழுவே தங்களின் வாகனத்துடன் கிராமத்தை நோக்கி விரைகிறது.
அந்த கிராமம், கிராமத்து மக்கள், பள்ளிக் கூடம், அதன் மோசமான நிலை, வெய், அவளுடைய மாணவ-மாணவிகள், கிராமத்தின் வறுமை- அனைத்தும் தொலைக்காட்சி முலம் ஒளிபரப்பாகிறது.
அதைத் தொடர்ந்து அரசாங்கம், மிகப் பெரிய நிறுவனங்கள், சமூக அமைப்புகள் என்று பலவற்றிலிருந்தும் பள்ளிக் கூடத்தை நோக்கி உதவிக் கரங்கள் நீளுகின்றன. சீனாவே அந்தச் சிறிய கிராமத்தை நோக்கி திரும்புகிறது. எல்லோருடைய கவனமும் அந்த கிராமத்தின் மீதுதான்...
பல அதிகாரிகளும், வசதி படைத்தவர்களும் அந்த ஊருக்குள் நுழைகிறார்கள்... ஊரையே மாற்றுகிறார்கள்... பள்ளிக் கூடத்தின் அமைப்பே மாற்றப் படுகிறது... புதிய கட்டிடங்கள்... மாணவ - மாணவிகள் கனவில் கூட சிறிதும் நினைத்திராத வசதிகள் அவர்களைத் தேடி வருகின்றன.
ஒரு 13 வயது சிறுமியால்... அவளின் தீவிர முயற்சியால்... ஒரு வறுமை சூழ்ந்த கிராமத்திற்கு விடிவு உண்டாகிறது. அங்கிருக்கும் மக்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் புதிய வாழ்வு கிடைக்கிறது.
இதில் நடித்திருப்பவர்கள் யாரும் தொழில் முறை நடிகர் - நடிகைகள் அல்ல. சிறுமி வெய் மின்ஸி, சிறுவன் ஸாங்க் ஹுய்க் - இருவருமே அந்த ஊரை சேர்ந்த சிறுவன், சிறுமிகளே . மற்றவர்களும்தான்.
பின் குறிப்பு : நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இப்படிப்பட்ட ஒரு ‘ஆக்கபூர்வமான’ படத்தை எப்போது எடுப்பார்கள்?