தி ஜப்பனீஸ் ஒய்ஃப்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3897
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி ஜப்பனீஸ் ஒய்ஃப்
(இந்திய ஆங்கில திரைப்படம்)
கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான காதல் கதை. படத்தின் இயக்குநர் : அபர்ணா சென். ஆங்கிலப் படமாக இருந்தாலும், வங்காள மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், வங்காள மொழியிலேயே இதில் பேசுவார்கள். ஜப்பான் மொழி உரையாடல்களும் இருக்கின்றன.
2010ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது இப்படம். ‘The Japanese Wife’ என்ற பெயரில் வங்காள எழுத்தாளரான குணால் பாசு எழுதிய கதையே இந்தப் படத்திற்கு அடிப்படை.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து பள்ளிக்கூட ஆசிரியருக்கும், ஜப்பானைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்குமிடையே அரும்பும் ஆழமான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.
ஸ்நேஹ்மாய் சட்டர்ஜி ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். வங்காளத்தின் ஒரு சிறிய கிராமத்தில் அந்த இளைஞன் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். ஜப்பானைச் சேர்ந்த மியாகி என்ற இளம் பெண் அவனுக்கு ‘பென் ஃப்ரண்ட்’ ஆக அறிமுகமாகிறாள். இந்தியாவின் பல விஷயங்களைப் பற்றி அவன் அவளுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்துகிறான். புகைப் படங்கள் அனுப்பி வைக்கிறான். அவள் ஜப்பானைப் பற்றிய பல தகவல்களை அவனுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்துகிறாள். பல கை வினைப் பொருட்களை அவனுக்கு அவள் அஞ்சல் வழியே அனுப்பி வைக்கிறாள். இருவருக்குமிடையே உண்டான நட்பு ஆழமாக வளர்ந்து, காலப் போக்கில் காதலாக மாறுகிறது.
வருடக் கணக்கில் அவர்களுக்கிடையே அந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் செல்ஃபோன்கள் இல்லாத காலகட்டம் அது. நீண்ட தூரத்திற்கு நடந்து சென்று, பொது தொலைபேசியில் எஸ்.டி.டி. மூலம் பேச வேண்டும். அவன் அப்படித்தான் அவளுடன் பேசுவான். எப்போதாவது ஒரு முறைதான் அப்படி பேச முடியும். அவ்வாறு பேசும்போது, சில நேரங்களில் பாதியிலேயே தொலைத் தொடர்பு ‘கட்’ ஆகிவிடும். அதற்குப் பிறகு பேசுவது எப்போதோ?
ஸ்நேஹ்மாயை பார்க்க வேண்டும் என்று ஜப்பானிய இளம் பெண் மியாகி ஆசைப்படுகிறாள். ஆனால், சாதாரண பொருளாதார நிலையைக் கொண்ட தன்னுடைய குடும்பத்தின் நிலைமையைக் கூறி, ஜப்பானுக்கு வருவது என்பது தன்னால் நி்னைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்று அவன் கூறுகிறான். பதிலுக்கு அவளை இந்தியாவிற்கு வரும்படி அவன் கேட்டுக் கொள்கிறான். படுத்த படுக்கையாக… நோயின் பிடியில் சிக்கி படுத்துக் கிடக்கும் தன்னுடைய வயதான தாயை விட்டு, தன்னால் வர முடியாது என்று அவள் கூறுகிறாள்.
அவர்கள் கடிதங்களின் மூலம் தாங்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டு விட்டதாக எழுதிக் கொள்கின்றனர். ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலேயே அவர்களுடைய ஆழமான நட்பிற்கு பதினைந்து வயது ஆகி விடுகிறது.
அந்தச் சூழ்நிலையில் ஸ்நேஹ்மாய்க்கு உறவினரான சந்தியா என்ற இளம் விதவை தன் எட்டு வயது மகனுடன் வந்து, அவன் வீட்டில் தங்குகிறாள். அவன் வீட்டில் இருப்பவர்கள் எடுத்த முடிவு அது. சிறு வயதிலிருந்தே அவனுக்கு சந்தியாவைத் தெரியும். எனினும், ஜப்பானிய பெண் மீது கொண்ட காதலால், அவளை அவன் தன் மனதில் சிறிதும் நினைக்கவில்லை. ஆனால், காலம் அவளை அவனுக்கு அருகில் கொண்டு வந்து சேர்க்கிறது.
சந்தியாவின் மகன் ‘போல்ட்டு’ ஸ்நேஹ்மாயுடன் ஒட்டிக் கொள்கிறான். பையனின் மீது பள்ளிக்கூட ஆசிரியருக்கும் ஒரு ஆழமான ஈடுபாடு உண்டாகிறது. ஒரு தந்தையின் பாசம் என்பது அந்தச் சிறுவனுக்கு எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்பதையும் அவன் சிந்திக்கிறான். அதைத் தொடர்ந்து, வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு ஒரு உறவு அவனுக்கும் சந்தியாவிற்குமிடையே உண்டாகிறது. எனினும், தான் இதுவரை கண்களால் பார்க்காத ஜப்பானிய பெண் மியாகிக்கு மிகவும் நேர்மையானவனாகவே இருக்கிறான் ஸ்நேஹ்மாய்.
இதற்கிடையில் மியாகி புற்று நோயால் பாதிக்கப்படுகிறாள். தன் பள்ளிக் கூடத்தில் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்த ஸ்நேஹ்மாய், அவளுடைய நோயை குணப்படுத்துவதற்காக மருந்து தேடி அலைகிறான். இந்திய மருத்துவத்தால் அவளை குணப்படுத்தி விட முடியுமா என்று பார்க்கிறான். ஆனால், நோயாளியை அருகில் இருந்து பார்க்காமல், குணப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று மருத்துவர் கூறி விடுகிறார்.
நீண்ட அலைச்சல்களுக்குப் பிறகு அவன் திரும்பி வரும்போது, பலமான சூறாவளி உண்டாகிறது. அதைத் தொடர்ந்து பேய் காற்றும்… விடாத மழையும். அதில் நனைந்த ஸ்நேஹ்மாய் ‘நிமோனியா’ நோயால் பாதிக்கப்படுகிறான். தொடர்ந்து காற்றும், மழையும் இருந்ததால் கிராமத்தில் உள்ளவர்கள் கல்கத்தாவிற்குச் சென்று, நோய்க்கான மருந்துகளை வாங்கி வர முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். அதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் ஸ்நேஹ்மாய் மரணத்தைத் தழுவுகிறான்.
கடல் மீண்டும் அமைதி ஆகிறது. தலையை மொட்டை அடித்துக் கொண்ட ஒரு ஜப்பானியப் பெண் விதவைக்கே உரிய வெள்ளை புடவை அணிந்து படகில் அந்த கிராமத்தைத் தேடி வருகிறாள். மியாகிதான் அவள். ‘நிமோனியா’வில் இறந்து விட்ட… தான் இதுவரை கண்களால் பார்க்காத… தன் கணவன் ஸ்நேஹ்மாயின் வீட்டைப் பார்ப்பதற்காக அவள் வந்திருக்கிறாள்.
கிராமத்திற்கு வந்திருக்கும் ஜப்பானிய இளம் பெண்ணை ஊரே வியந்து பார்க்கிறது. ஸ்நேஹ்மாயின் வீட்டில் இருப்பவர்கள், சந்தியா, அவளுடைய எட்டு வயது மகன் – அனைவரும் அவளையே மரியாதையுடன்… வைத்த கண் எடுக்காமல் பார்க்கின்றனர். ஸ்நேஹ்மாய் அவளுடன் கொண்டிருந்த ஆழமான நட்பு… காதல்… அனைத்தும் அவர்கள் எல்லோருக்கும் தெரியும்.
மியாகி முன்பு ஸ்நேஹ்மாய்க்கு அனுப்பி வைத்த பரிசு பொருட்கள் அனைத்தும் ஒரு அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதை அலங்கரித்து வைத்தவள் சந்தியா.
ஸ்நேஹ்மாய் வசித்த வீடு, நடமாடிய இடங்கள், துயின்று கொண்டிருக்கும் இடம் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்த அந்த ஜப்பானிய இளம் பெண் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு, மீண்டும் படகில் தன் திரும்பிச் செல்லும் பயணத்தை ஆரம்பிக்கிறாள்.
படகில் விதவைக் கோலத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் அந்த ஜப்பானிய இளம் வெண் புறாவை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த வங்காளத்தின் சிறிய கிராமம்.
பள்ளிக்கூட ஆசிரியர் ஸ்நேஹ்மாயாக – ராகுல் போஸ்…
ஐப்பானிய இளம் பெண் மியாகியாக – ஜப்பானைச் சேர்ந்த Chigusa Takaku… (கண்களுக்குள்ளேயே இப்போதும் நின்று கொண்டிருக்கின்றன அந்தப் பெண்ணின் தோற்றமும், நடிப்பும்!)
இளம் விதவை சந்தியாவாக ரைமா சென்… (இந்திய பெண்ணுக்கே உரிய வெட்கத்தையும், அடக்கத்தையும், கூச்சத்தையும், தயக்கத்தையும் வாய்விட்டு பேசாமலேயே என்ன அருமையாக தன் அமைதியான நடிப்பின் மூலம் இவர் காட்டியிருக்கிறார்!)
பல திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு விருதுகளை வென்றிருக்கும் ‘The Japanese Wife’ திரைப்படம் – அபர்ணா சென்னுக்கு இன்னொரு வைர கிரீடம்!