Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஒரே கடல்

Ore Kadal

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஒரே கடல்

(மலையாள திரைப்படம்)

ஷ்யாம பிரசாத் இயக்கும் படம் என்றாலே, மிகவும் மாறுபட்ட கதைக் கரு கொண்ட படமாகத்தான் இருக்கும் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரியும். 2007இல் திரைக்கு வந்த ‘ஒரே கடல்’ அத்தகைய ஒரு படம்தான். கயிறு மீது நடப்பதைப் போன்ற ஒரு நுணுக்கமான விஷயத்தை எடுத்து, அதை கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு வித்தியாசமான படமாக எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கும் ஷ்யாம பிரசாத்தை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

படத்தின் கதாநாயகன் மம்மூட்டி. கதாநாயகி – மீரா ஜாஸ்மின்.

டாக்டர் நாதன் என்ற பொருளாதார ஆராய்ச்சியாளரையும், தீப்தி என்ற நடுத்தர குடும்பத்துப் பெண்ணையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.

டாக்டர் எஸ்.ஆர். நாதன் புகழ் பெற்ற ஒரு பொருளாதார ஆராய்ச்சியாளர். நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எழுதுபவர் அவர். வெளிநாடுகளில் இருக்கும் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று, அவ்வப்போது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட சொற்பொழிவுகளையும் அவர் நடத்துவார். நடுத்தர வயதைத் தாண்டியும், திருமணம் செய்து கொள்ளாமல் தான் மட்டும் தனியே ஒரு ஃபளாட்டில் அவர் தங்கி,  எழுதுவதும் படிப்பதுமாக இருக்கிறார். மீதி நேரங்களில் அவர் இன்பம் காண்பது மதுவிலும், மங்கைகளிலும். இறுக்கமாக இருக்கும் மனதை மென்மைப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு இந்த விஷயங்கள் உதவுகின்றன.

அவர் இருக்கும் அந்த ஃப்ளாட்டின் இன்னொரு தளத்தில் வாடகைக்கு குடியிருப்பவள் தீப்தி. தன் கணவன் ஜெயனுடன், குழந்தையுடனும் அவள் அங்கு குடியிருக்கிறாள். வேலை தேடி அவளுடைய கணவன் பெங்களூர் சென்றிருக்க, நோய் வாய்ப்பட்டிருக்கும் தன் குழந்தைக்கு மருந்து வாங்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாள் தீப்தி. வழியில் அவளுடைய நிலையைப் பார்க்கும் டாக்டர் நாதன் அவளுக்கு மருந்து வாங்க பணம் தந்து உதவுகிறார்.

அதற்குப் பிறகுதான் அவருக்கே தெரிகிறது – தான் தங்கியிருக்கும் ஃப்ளாட்டில்தான் அவளும் குடியிருக்கிறாள் என்பதே. இன்னும் வேலை கிடைக்காத நிலையில் தீப்தியின் கணவன் ஜெயன் வீடு திரும்புகிறான். அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படும் தீப்தி, நாதனின் வீட்டிற்கு வந்து தான் இன்னும் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்றும், வாடகைக்கான பணத்தைத் தந்து உதவினால், தன் கணவனுக்கு வேலை கிடைத்ததும் பணத்தைத் திருப்பி தந்து விடுவதாகவும் கூறுகிறாள். நாதன் அவள் கேட்ட பணத்தைத் தருகிறார் (அப்போது அவளிடம் இந்தியாவில் எத்தனை இலட்சம் பேர் வேலையில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தான் செய்திருக்கும் ஆய்வைக் கூறுகிறார்).

அதைத் தொடர்ந்து தீப்தி, நாதனை நோக்கி காந்தமென ஈர்க்கப்படுகிறாள். அது அவளை அவருடைய படுக்கை வரை கொண்டு போய் சேர்க்கிறது. பெண்ணுடன் உறவு கொள்வது என்பது டாக்டர் நாதனுக்கு புதிய விஷயமில்லை. அவருக்கு அது நன்கு பழகிப் போன ஒன்று. இன்னும் சொல்லப் போனால் – அவருக்கு அது ஒரு சாதாரண விஷயம். ஆனால், தீப்திக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. அவளுடைய வாழ்க்கையில், நாதனுடன் அவள் கொண்ட உறவு ஒரு புதிய அத்தியாயமாக இருக்கிறது. நாதனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிற அளவிற்கு ஆகி விடுகிறாள் தீப்தி. அவள் கூறி, அவளுடைய கணவன் ஜெயனுக்கு நல்ல ஒரு வேலையையும் நாதன் வாங்கித் தருகிறார்.

அதனால், அவள் நாதனிடம் மேலும் கடன் பட்டவளாக ஆகிறாள். அவளும், டாக்டர் நாதனும் பல முறை மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அவருடைய நினைவாகவே அவள் எப்போதும் இருக்கிறாள். ஆனால், டாக்டர் நாதனோ ‘காதல்… அது… இது… என்று எதுவும் மனதில் நினைத்துக் கொண்டிருக்காதே. காதல், திருமணம், கற்பு… இவை போன்ற விஷயங்களிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. நான் பெண்களுடன் பழகுவது, என் மனதின் கனத்தைக் குறைப்பதற்காக மட்டுமே. பல பெண்கள் அவ்வப்போது என்னைத் தேடி வருவதையும், போவதையும் நீயே பார்த்திருப்பாய்!’ என்கிறார் அவளிடம்.

அவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியாத நிலை உண்டாகி, குழம்பிப் போய் நிற்கிறாள். சில நாட்களிலேயே அவள் கர்ப்பம் தரிக்கிறாள். டாக்டர் நாதனின் குழந்தைதான் தன் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவரிடம் அவள் வந்து கூற, ‘உலகத்தில் ஒவ்வொரு நிமிடத்திலும் 7200 குழந்தைகள் பிறக்கின்றன’ என்ற தன்னுடைய கண்டுபிடிப்பை அவளிடம் அவர் கூறுகிறார். அதற்கு மேல் அவளிடம் எதையும் காது கொடுத்து கேட்க, நாதன் தயாராக இல்லை. அது நாளடைவில் அவளுடைய மனதை மிகவும் பாதித்து விடுகிறது.

தான் செய்த காரியத்தை தவறு என்று மனதில் சிறிதளவு கூட எண்ணாமல், தன்னுடைய வேலைகளில் மட்டுமே முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் டாக்டர் நாதன். தன்னுடைய அருமையான கணவனுக்கு துரோகம் செய்து விட்டோமே என்பதையும், காதல் திருமணம்… பொறுப்பு… புனிதம் என்ற எந்த வகையான சிந்தனையும் இல்லாத ஒரு மனிதரிடம் தன்னை இழந்து ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறோமே என்பதையும் நினைத்து நிலை குலைந்து போகிறாள் தீப்தி. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மன நோயாளியாக அவள் ஆகி விடுகிறாள்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது? டாக்டர் நாதன் – தீப்தி உறவு, தீப்தியின் கணவன் ஜெயனுக்குத் தெரிந்ததா? குழந்தை பிறந்ததா இல்லையா? நாதனுக்கும் தீப்திக்குமிடையே உண்டான அந்த உறவு, அதற்குப் பிறகும் தொடர்ந்ததா?

மிகவும் சிக்கலான கதை முடிச்சு. அதை சீரான திரைக்கதை அமைத்து, மிகவும் அருமையாக இயக்கியிருக்கும் ஷ்யாம பிரசாத்தை, உயர்ந்த பீடத்தின் மீது உட்கார வைத்து பாராட்டலாம்.

டாக்டர் எஸ்.ஆர்.நாதனாக மம்மூட்டி… (இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துணிச்சலுக்காக மம்மூட்டியே நாம் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்ப் பட கதாநாயகர்களுக்கு இந்த துணிச்சல் வருமா?)

தீப்தியாக – மீரா ஜாஸ்மின்… (நடுத்தர குடும்பத்தின் பெண்ணின் நடை, உடை, பாவனை அனைத்தையும் நூறு சதவிகிதம் அப்படியே நம் கண்களுக்கு முன்னால் வெளிப்படுத்தியிருக்கும் மீரா ஜாஸ்மினைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை. மொத்தத்தில் – பாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். இப்படியொரு முரண்பாடு கொண்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே மீரா ஜாஸ்மினைப் பாராட்டலாம்.)

மீரா ஜாஸ்மினின் கணவன் ஜெயனாக – நரேன்.

டாக்டர் நாதனின் தோழியாக- ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

சுனில் கங்கோபாத்யாய் எழுதிய ஒரு வங்காளக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமே ‘ஒரே கடல்.’

படத்தின் ஒளிப்பதிவாளர் : அழகப்பன். இசையமைப்பாளர் : அவுஸேப்பச்சன். கலை : முத்துராஜ். இந்த மூவரும் ஷ்யாம பிரசாத்தின் கற்பனைக்கு உயிர் தந்திருக்கிறார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version