Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

குரு தத்

guru dutt

அறிமுகம்

குரு தத் 1925ஆம் வருடம் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பர்மா ஷெல் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் க்ளார்க்காக பணி புரிந்தார். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். கவிதைகள் எழுதினார். ஆனால், அவை பிரசுரமானது இல்லை. குரு தத்தின் தாய் தன்னுடைய கணவருடன் மிகவும் தொல்லைகள் நிறைந்த ஒரு உறவைக் கொண்டிருந்தார்.

வாழ்க்கையை மிகவும் துயரத்துடனே அவர் நடத்திக் கொண்டிருந்தார். குரு தத்தின் சகோதரர் ஆத்மராம் கூறுகிறார்: ‘நாங்கள் பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில் இருக்கும் நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருந்தோம். எங்களுக்கு ஏராளமான இலட்சியங்கள் இருந்தன. வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியமான விஷயமாக இருந்தது. வாழ்வில் செயல்களைச் செய்ய வேண்டும் என்பது கட்டாயமான அம்சமாக இருந்தது. எங்களுடைய அன்னை அந்த இலட்சியத்தை எண்ணெய் ஊற்றி எரிய வைத்தார்.’

அவர் தன்னுடைய தாயுடன் பெங்களூர், மங்களூர், சென்னை, அஹமதாபாத் என்று பல நகரங்களுக்கும் பயணம் செய்திருந்தாலும், குடும்பம் ஒன்று சேர்ந்து நீண்ட காலம் வாழ்ந்த இடம் என்னவோ கல்கத்தாதான். குருதத் அங்குதான் வளர்ந்தார். குரு தத்தின் வாழ்க்கையில் வங்காளமும் அதன் கலாச்சாரமும் ஆழமான பாதிப்பை உண்டாக்கின. அது அவருக்குள் செயல்பட்டுக் கொண்டும் இருந்தது. அவர் கல்லூரிக்கு எந்தச் சமயத்திலும் சென்றதில்லை. ஆனால், அவர் நன்கு படிக்கக் கூடியவராக இருந்தார். தன்னுடைய தந்தையிடமிருந்து அவர் பெற்ற பழக்கம் அது. ஆத்மராம் நினைவுபடுத்தி கூறுகிறார்: ‘அவர் மிகவும் அருமையாக ஹிந்தி பேசுவார். ஆனால், வீட்டில் இருக்கும்போது அதிகமாக ஆங்கிலத்திலோ வங்க மொழியிலோதான் உரையாடுவார். நாங்கள் வீட்டில் அதிகமான ஆங்கில வார்த்தைகளைக் கலந்து கொங்கணியில் பேசுவோம். அவர் ஆங்கிலத்தில் சிந்திப்பார், ஆங்கிலத்தில் எழுதுவார். அதுதான் உண்மை.’ பதினைந்து வயது நடக்கும்போது, நடனம் ஆடுவதில் அவருக்கு ஒரு விருப்பம் உண்டானது. தன்னுடைய விருப்பத்தை தன் அங்கிள் பி.பி. பெனகலிடம் அவர் வெளிப்படுத்தினார். அவர் ஒரு ஓவியர். உதய் சங்கரின் நடனக் குழுவில் தான் சேர விரும்புவதாக அவர் கூறினார். ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் அல்மோராவிற்கு உதய் சங்கரின் குழுவில் சேர்வதற்காகப் புறப்பட்டார். உதய் சங்கரின் இந்தியாவிற்கான கலாச்சார மையம் அங்குதான் இருந்தது. ஒரு மில்லில் டெலிஃபோன் ஆப்பரேட்டராக தான் பார்த்த முதல் வேலையின் மூலம் வர இருந்த 40 ரூபாய் சம்பளத்தைக் கூட வாங்காமலே அவர் கிளம்பினார்.

போரின்போது போதுமான பண வசதி இல்லாமல் அந்த மையம் மூடப்பட்டவுடன், குரு தத் 1944ஆம் ஆண்டில் தன் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவருடைய குடும்பம் அப்போது பம்பாயில் இருந்தது. பெனகல் அவரை பாபுராவ் பையிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பூனாவிலிருந்த பிரபாத் ஃபிலிம் கம்பெனி மற்றும் ஸ்டூடியோவின் தலைமை நிர்வாகியாக இருந்தார். அந்த ஸ்டூடியோவின் ஒரு நடன இயக்குனராக மூன்று வருட ஒப்பந்தம் போடப்பட்டு குரு தத் நியமிக்கப்பட்டார். அவர் உதவி இயக்குனராகவும், சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடிய நடிகராகவும் கூட அங்கு இருந்தார். பூனாவில் தத் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். அங்கு அவர் தேவ் ஆனந்த்தைச் சந்தித்தார். அவரும் பிரபாத் ஸ்டூடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ரஹ்மானையும் அவர் அங்கு சந்திக்க நேர்ந்தது. பின்னர் பை, தன்னுடைய சொந்த கம்பெனியை பம்பாயில் நிறுவினார். 1947ஆம் வருடம் வரை குரு தத் அவருக்காக பணியாற்றினார். பையுடன் போடப்பட்ட ஒப்பந்தம் அத்துடன் முடிந்தது. அதற்குப் பிறகு பல மாதங்கள் எந்தவொரு வேலையும் இல்லாத மனிதராக அவர் ஆனார். இறுதியில் அமியா சக்ரவர்த்தி, க்யான் முகர்ஜி மற்றும் சிலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஏற்கெனவே அவருக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி தேவ் ஆனந்த் நவ்நிகேதன் நிறுவனம் 1951ஆம் ஆண்டில் தயாரித்த ‘பாஸி’ என்ற திரைப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அவருக்குத் தந்தார். தன்னுடைய சகோதரர் சேத்தன் ஆனந்துடன் சேர்ந்து அவர் ஆரம்பித்த நிறுவனம் அது. அந்த நேரத்தில் தேவ் ஆனந்த் ஏற்கெனவே ஒரு நட்சத்திரமாக ஆகி விட்டிருந்தார். அந்தப் படத்திலும், அதற்குப் பிறகு குரு தத் 1952இல் இயக்கிய ‘ஜால்’ என்ற படத்திலும் அவர் கதாநாயகனாக நடித்தார்.

‘பாஸி’ படப்பிடிப்பின்போது குருதத் கீதா ராயைச் சந்தித்தார். கீதா அப்போது எல்லோருக்கும் தெரிந்த பாடகியாக இருந்தார். அவர்கள் 1953ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 1953ஆம் ஆண்டிலேயே குரு தத் தனக்குச் சொந்தமான குரு தத் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனம்தான் அவருடைய அனைத்து படங்களையும் தயாரித்தது.

1952ஆம் வருடம் அவர் ஹரிதர்ஷன் கவுர் என்பவருடன் சேர்ந்து எச்.ஜி. பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். நடிகை கீதா பாலியின் சகோதரியின் பெயர்தான் ஹரிதர்ஷன் கவுர். அந்த நிறுவனம் குரு தத் இயக்கிய ‘பாஸ்’ (1953) என்ற ஒரே ஒரு படத்தைத்தான் தயாரித்தது. தத் பிரதான பாத்திரத்தில் முதல் தடவையாக நடித்த படம் அதுதான். 16ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அப்படம் வர்த்தக ரீதியாக நன்றாக ஓடவில்லை. குரு தத் புரொடக்ஷன்ஸ் தயாரித்த முதல் படம் ‘ஆர் பார்’ (1954). அது வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55 (1955), சி.ஐ.டி. (1956) ஆகிய படங்களை குரு தத் தயாரிக்க, அவருடைய உதவியாளர் ராஜ் கோஸ்லா இயக்கினார். 1956இல் கீதா தத்தின் சகோதரர் முகுல் ராய் தயாரித்து, குரு தத் இயக்கிய ‘சைலாப்’ வர்த்தகச் சந்தையில் எந்தவொரு சலனத்தையும் உண்டாக்கவில்லை. தான் ஏற்கெனவே ‘காஷ்மகாஷ்’ என்ற பெயரில் எழுதி வைத்திருந்த திரைக் கதையை ‘ப்யாஸா’ என்ற பெயரில் 1957ஆம் வருடம் தத் இயக்கினார். அவர் இயக்கிய அடுத்த படம் அதுதான். அதற்கு முன்பு வெளியான ‘ஆர் பார்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55’ என்ற இரண்டு படங்களிலும் இருந்த வேகத்திற்கு நேர் எதிராக மிகவும் மெதுவாக நகரும் கதையைக் கொண்ட படமாக அது இருந்தது. வர்த்தக ரீதியாக அந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது. குரு தத்தின் கலையுலக வாழ்வில் மட்டுமல்ல- ஹிந்தி படவுலகிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாக அது இருந்தது.

அதைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘காகஸ்  கே பூல்’ 1959ஆம் ஆண்டு உருவானது. அப்படம் அவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. ஹிந்தி படவுலகின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக அது ஆனது. அதே நேரத்தில் – மிகவும் மோசமான முறையில் அது தோல்வியைச் சந்தித்தது. ரசிகர்கள் தன்னுடைய படத்தை நிராகரித்து ஒதுக்கி விட்டார்களே என்ற உண்மையிலிருந்து குரு தத்தால் எழுந்து வரவே முடியவில்லை. அதற்குப் பிறகு இயக்குனர் என்று தன்னுடைய பெயரை அவர் போடவே இல்லை. 1960இல் வெளிவந்த ‘செளத்வின் கா சந்த்’ திரைப் படத்தை தத் தயாரிக்க, எம்.சாதிக் இயக்கினார். அதன் கதாநாயகனாக குரு தத்தே நடித்தார். குரு தத்தின் நிறுவனம் தயாரித்த படங்களிலேயே வர்த்தக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அதுதான். 1962இல் ‘சாஹிப், பிபி அவுர் குலாம்’ என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்தது. அந்தப் படத்தை குரு தத்தின் நீண்ட கால நண்பரும் வசனகர்த்தாவுமான அப்ரார் ஆல்வி இயக்கினார். அப்படத்தை குரு தத் தயாரித்து அதில் நடித்தார். திருமண வாழ்க்கையில் உண்டான குழப்பங்கள், காதல் வாழ்க்கையில் உண்டான பிரச்னைகள், மது அருந்தும் பழக்கம், தனிமை, துயரங்கள், மனதிற்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கும் குணம் – எல்லாம் சேர்ந்து பல முறை அவரை தற்கொலை முயற்சிகளை நோக்கி தள்ளிவிட்டன. 1964ஆம் ஆண்டில் தன்னுடைய 39ஆம் வயதில் உண்டான அவருடைய மரணம், பெரும்பாலும் தற்கொலையாக இருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டது.

ஒரு இயக்குநர் என்ற முறையில் குரு தத் பல வகையான படங்களையும் சோதனை செய்து பார்த்தார். ஒரு வரலாற்று பாணி படம் (பாஸ்), த்ரில்லர்ஸ் (பாஸி, ஜால், ஆர் பார்), ஒரு சமூக நகைச்சுவை பாணி படம் (மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55), ஒரு சமூகப் படம் (ப்யாஸா), தன் வாழ்க்கையின் சம்பவங்களைக் கொண்ட சுய சரிதை படம் (காகஸ் கே பூல்.)

 

தொடரும்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version