கனவு ராஜாக்கள்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
அன்று கதாநாயகன்! இன்று ஸ்டண்ட் நடிகர்!
சுரா
திரைப்படத் துறைக்குள் நூறு பேர் நுழைந்தால், ஒருவர் மட்டுமே வெற்றி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர முடியும். முடியாமல் போனவர்களின் நிலைமை அதற்குப் பிறகு எப்படி இருக்கும்?
அப்படிப்பட்ட ஒரு நண்பரின் பெயர்- ரமேஷ்.
இவர் மோசஸ் திலக், கராத்தே மணி ஆகியோரிடம் கராத்தே பயிற்சி பெற்றவர். எனவே தன் பெயரை 'கராத்தே ரமேஷ்' என்று வைத்துக் கொண்டார். நான் அவரைச் சந்தித்தது 1982 ஆம் ஆண்டில்.
வேலூரைச் சேர்ந்த ரமேஷ் அப்போது பல இடங்களிலும் கராத்தே பள்ளிகளை நடத்திக் கொண்டிருந்தார். விஜயகாந்தைக் கதாநாயகனாகப் போட்டு 'சட்டம் ஒரு இருட்டறை', 'சாதிக்கொரு நீதி' ஆகிய படங்களைத் தயாரித்த வடலூரான் கம்பைன்ஸ் பட நிறுவனம் 'நீறு பூத்த நெருப்பு' என்ற படத்தைத் தயாரித்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய கே.விஜயன்தான் அப்படத்தின் இயக்குநர். கதாநாயகனாக விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் தருவதாக கூறிவிட்டு, தயாரிப்பாளரிடம் ஒரு வார்த்தைகூட கூறாமலே வேறொரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு கிளம்பிப் போய்விட்டார் விஜயகாந்த். அதனால் எரிச்சலடைந்த தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரம், விஜயகாந்துக்குப் போட்டியாக ஒரு கதாநாயகனைக் கொண்டு வர நினைத்தார்.
விஜயகாந்துக்கு சினிமா ஸ்டண்ட் போடத்தானே தெரியும், உண்மையிலேயே கராத்தே, குங்க்ஃபூ ஆகியவற்றைக் கற்றிருக்கும் ஒரு இளைஞனைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினால் என்ன என்று நினைத்தார் சிதம்பரம்.
அப்போது 'குமுதம்' வார இதழில் ரமேஷின் புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. அகில இந்திய அளவில் நடைபெற்ற மூன்று கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு 5 தங்க மெடல்களை வாங்கியவர் என்றும், தாய்வானில் நடைபெற்ற உலக கதாத்தே போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டவர் என்றும் அதில் தகவல் இருந்தது. ஒரு விநியோகஸ்தர் மூலம் அவரைச் சென்னைக்கு வரவழைத்தார் சிதம்பரம். தன் மாணவர்களுடன் வந்த ரமேஷ், கராத்தே பாணியில் சண்டைகளைச் செய்து காண்பித்தார். அந்த நிமிடமே 'நீறு பூத்த நெருப்பு' படத்தின் கதாநாயகனாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.
அண்ணன்- தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட அந்தப் படத்தில் ரமேஷுக்கு தங்கையாக நடித்தவர் விஜயசாந்தி. அப்போது அவர் தெலுங்குப் படவுலகில் நுழையவில்லை. தமிழில் ஆரம்ப கட்டத்தில் இருந்தார். இப்போது பிரபல படத் தயாரிப்பாளராக இருக்கும் ஏ.எம்.ரத்னம் அப்போது விஜயசாந்தியின் மேக்-அப் மேனாக இருந்தார். ரமேஷுக்கு ஜோடியாக ஒரு புதுமுக நடிகை நடித்தார்.
1982ல் ஆரம்பிக்கப்பட்ட அப்படம் பணப்பிரச்னை காரணமாக 1983ல் திரைக்கு வந்து, படுதோல்வியைத் தழுவியது. கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டோம், இனி வாழ்க்கை முழுவதும் ஒளிமயம்தான் என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்த ரமேஷுக்கு பலமான அடி கிடைத்தது. முதல்படமே தோல்வியடைந்துவிட்டதால், யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ரமேஷின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தன என்றாலும், திரைக்கதை மிகவும் பலவீனமாக இருந்ததால், மக்கள் அந்தப் படத்தை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்துவிட்டார்கள்.
அதற்குப் பிறகு கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிவண்ணன் என்று பலரையும் பார்த்து வாய்ப்புக் கேட்டார் ரமேஷ். கிடைக்கவில்லை. 'வேங்கையின் மைந்தன்', 'கொம்பேறி மூக்கன்' ஆகிய படங்களில் அவருக்கு சிறு பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படியே மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. கதாநாயகன் வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை, நல்ல கதாபாத்திரங்களாவது கிடைக்கும் என்று பார்த்தார் ரமேஷ். அதுவும் கிடைப்பதாக இல்லை.
கவுரவம், அந்தஸ்து பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் 1986ஆம் ஆண்டில் திரைப்பட ஸ்டண்ட் நடிகர்களுக்கான சங்கத்தில் ரமேஷ் உறுப்பினராக போய்ச் சேர்ந்தார். பல படங்களிலும் ஸ்டண்ட் நடிகராக வந்து சண்டை போட்டார். ஸ்டண்ட் வீரராக ஆரம்பித்த ரமேஷின் பயணம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் வீரராக அவர் நடித்துவிட்டார். விஜயகாந்துக்குப் போட்டியாக கொண்டு வரப்பட்ட அவர், 'கேப்டன் பிரபாகரன்', 'கூலிக்காரன்' படங்களில் ஸ்டண்ட் வீரரராக நடித்து, விஜயகாந்திடம் உதை வாங்கினார். விஜயசாந்தியின் அண்ணனாக ‘நீறு பூத்த நெருப்பு’ படத்தில் நடித்த ரமேஷ், விஜயசாந்தி நடித்த தெலுங்குப் படங்களில் அவரிடம் அடியும் உதையும் வாங்கினார். அப்படி அடிகள் வாங்கும்போது, அவரின் மனதில் கவலை உண்டாகத்தான் செய்தது. கண்களில் நீர் கூட வந்தது. ஆனால், வாழ்க்கைப் போராட்டம் என்று வருகிறபோது, அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
சரத்குமார், கார்த்திக், மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன் ஆகியோருக்கு 'டூப்' போட்டிருக்கும் ரமேஷ், இளம் தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், மாதவன், ஆர்யா ஆகியோருடன் படங்களில் சண்டை போட்டிருக்கிறார். 'சந்திரமுகி' படத்தில் வரும் முதல் சண்டைக் காட்சியில் வந்து, ரஜினியிடம் உதை வாங்குவார் ரமேஷ்.
1982ஆம் ஆண்டில் 'நீறு பூத்த நெருப்பு' படத்திற்காக கராத்தே பாணி ஸ்டண்ட் காட்சிகளை ரமேஷ் செய்து காட்டும்போது, அருகில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நான். அவருடன் நான் அன்று கொண்ட ஆழமான நட்பு, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு வேலூரில் நடைபெற்ற அவருடைய திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன். 'தங்கமனசுக்காரன்', 'மணிக்குயில்' போன்ற படங்களில் நடிக்க அவருக்கு நான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நாங்கள் இருவரும் சந்திப்போம். சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பல விஷயங்களைப் பற்றியும் நேரம் போவதே தெரியாமல் உரையாடுவோம். என்னைப் பற்றிய நினைவு எப்போது வந்தாலும், உடனடியாக வேலூரிலிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் பேசுவார் ரமேஷ்.
கதாநாயகனாக நம்மால் வர முடியாமல் போய்விட்டதே என்ற கவலை ரமேஷுக்கு இப்போது இல்லை. ஸ்டண்ட் வீரராக நடித்து சம்பாதித்த பணத்தில் சென்னையில் சொந்தத்தில் வீடு கட்டி, பொருளாதார ரீதியாக நல்ல வசதியுடன் அவர் இருக்கிறார்.
“ 'நாம் ஏதோ ஒன்று வேண்டும் என்று ஆசைப்படுவோம். அது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமானது’- என் வாழ்க்கையின் மூலம் பலருக்கும் நான் கூற விரும்புவது இதைத்தான்” என்று கூறும் ரமேஷ் இப்போது திரைப்படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்துக்கொண்டே தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கராத்தே பள்ளிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை அவரிடம் பத்தாயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
நடைமுறை சிந்தனையுடன் செயல்படும் ‘கராத்தே ரமேஷ்’ என்னுடைய நண்பராக இருப்பது குறித்து உண்மையிலேயே நான் என் மனதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.