பகவத் கீதை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7238
“சும்மா விளையாடாம படிச்சுப் பார்க்கணும். இப்போ என்ன பொய்க் கதையை எழுதிக்கிட்டு இருக்கீங்க பஷீர்?''
“பொய்க் கதை இல்ல... உண்மையான வரலாறு. அதைக் கதை மாதிரி எழுதுறேன்...''
“உண்மையான வரலாறா? ஹா... ஹா... ஹா... தாராளமா எழுதுங்க!''
“உங்களைப்போல உள்ளவர்களோட ஆசீர்வாதம் வேணும்!''
“பஷீர்... உங்களுக்கு எல்லாரோட ஆசீர்வாதமும் இருக்கு!''
நான் ஏ.கெ.டி.கெ.எம்.மின் முகத்தைப் பார்த்தேன். பகவத் கீதை சம்பந்தமாக அவர் முகத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை.
அந்த நாட்களில் என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. எழுதப் போகிற கதையின் பிரதான கதாபாத்திரத்தை எப்போதும் மனதில் நினைத்துக்கொண்டே இருப்பேன். கதாபாத்திரம் பேசுவது, நடப்பது- இப்படிப்பட்ட சிந்தனையிலேயே பல நாட்கள் இருப்பேன். சில நேரங்களில் எழுதவும் செய்வேன். ஏ.கெ.டி.கெ.எம் மின் முன்னால் ஒரு புதிய கைக்குட்டையுடன் போய் அமர்ந்தேன். முண்டசேரியும் சங்ஙம்புழயும் அப்போது அங்கு இருந்தார்கள். கைக்குட்டையின் நுனியைப் பிடித்து, தலையைச் சுற்றி அதை தூரத்தில் எறிந்தேன். இரண்டு மூன்று முறை நான் இப்படிச் செய்வதைப் பார்த்த அஞ்சாம்ப்ரான் கேட்டார்:
“என்ன இது?''
நான் சொன்னேன்:
“என்கிட்ட இருக்குற ஒரு கெட்ட பழக்கம். சின்ன வயசுல இருந்தே இது பழகிப்போச்சு. யானையைப் பார்த்தால், வாலைப் பிடிச்சு, தலையைச் சுற்றி தூரத்துல தூக்கி ஏறிவோம்!''
“அப்படியா?''
“ஆமா... என்ன செய்றது? இப்போ எங்ககிட்ட யானை இல்லையே! அதற்காக பழக்கத்தைவிட முடியுமா?''
சங்ஙம்புழ சொன்னார்:
“இந்த ஆளுக்கு ஒரு யானையைக் கொடுத்துப் பார்க்கணும். அப்ப உண்மை தெரியும்ல!''
“எங்ககிட்ட சில ஆண் யானைகளும், பெண் யானைகளும் இருக்கு.'' ஏ.கெ.டி.கெ.எம். சொன்னார்:
"தேசமங்கலத்துல இருக்கு!''
உரத்த குரலில் முண்டசேரி சொன்னார்:
“அப்படின்னா பஷீர் ஒரு கை பார்க்கட்டும். வடக்கும்நாத கோவிலைச் சேர்ந்த யானைகள்தானே?''
“கோவில் திருவிழாவுக்குக் கொண்டு வந்ததை வாலைப் பிடிச்சு, தலையைச்சுற்றி தூக்கி எறியிறது நல்லதா? கடவுளுக்குக் கோபம் வந்திடாதா?''
அப்போதுதான் மார்பகங்கள் என்னைத் தேடி வருகின்றன. நான் எத்தனையோ மார்பகங்களைப் பார்த்திருக்கிறேன். நெல்லிக்காய் மார்பகம், ஊசி மார்பகம், அடைக்காய் மார்பகம், மரோட்டிக்காய் மார்பகம், கத்திரிக்காய் மார்பகம், பம்பர மார்பகம், பப்பாளி மார்பகம், பலாப்பழ மார்பகம்- இப்படிப் பல மார்பகங்கள். எல்லாவற்றையும் முகத்தை மூடிய கோலத்தில்- ஸாரி- மார்பகத்தை மூடிய கோலத்தில்தான் பார்த்திருக்கிறேன். தாயின் மார்பகத்தைப் பற்றி சரியாக ஞாபகத்தில் இல்லை. மார்பகத்தைப் பார்க்கிபோது, ஆச்சரியத்துடன் பார்ப்பேன். உயிரின் ஆதாரம்! ஆத்மாவிற்கு? ஆத்மாவின் பசியையும் தாகத்தையும் தணிப்பதற்காக இருப்பது தானே புனிதமான வேத நூல்கள்- பகவத்கீதை, குர்-ஆன், பைபிள் போன்றவை! உலகில் எத்தனையோ மதங்கள். வேத நூல்களும் ஏராளமாகவே இருக்கின்றன. அவை ஆத்மாவிற்கு அமைதி தருகின்றன. வேத நூல்களையும் மதங்களையும் நம்பாதவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களும் ஒரு காலகட்டம் வரை உடலின் பசியையும் தாகத்தையும் தணிக்க மார்பகம் குடித்து வளர்ந்தவர்களே. இந்த மண்ணை விட்டு மறைந்து போனவர்களும், வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களும் மார்பகத்தைக் குடித்திருப்போர்களே. இனி வரப்போகிறவர்களும் குடிப்பார்கள். மார்பகத்தை எங்கு பார்த்தாலும் நான் ஆச்சரியத்துடன் பார்ப்பேன். பசு, எருமை, குதிரை, கழுதை, ஆடு, சிங்கம், யானை, பன்றி, நாய், பூனை, எலி- இவை எல்லாமே நிர்வாண மார்பகங்கள்! மனிதப் பெண்களுக்கு மட்டும் முகமூடி இட்ட மார்பகங்கள்! நிர்வாண மார்பகங்களைப் பார்த்த ஞாபகம் இல்லை. அப்போது வருகிறது நிர்வாண மார்பகங்களின் ஒரு அழகான ஊர்வலம்!
பார்க்கப் போயிருந்த திருவிழாவைப் பற்றி எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் எம்.பி. போளிடம் பேசியவாறு, முண்டசேரியின் வீட்டுக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு முக்கிய விஷயமாக திருச்சூருக்கு வந்திருந்த எம்.பி. போளும் அவரின் மனைவியும் முண்டசேரியின் வீட்டுக்குப் போய்விட்டு திரும்பி வருகிறார்கள். எம்.பி. போளின் மனைவி பின்னால் வந்து கொண்டிருக்கிறார். நானும் எம்.பி. போளும் பல விஷயங்களையும் பேசியவாறு நடந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். எம்.பி. போளைப் பற்றி எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம். அமைதியான- ஆர்ப்பாட்ட மில்லாத மனிதர். நல்ல பண்டிதர். ஒரு மனிதாபிமானி. நல்ல சிந்தனையாளர். நாங்கள் எர்ணாகுளத்தில் பொழுது விடிகிறவரை கூட எவ்வளவோ விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். புத்தன் காவு மாத்தன் தரகன்தான் எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தது. என்னுடைய கதைகளை அவர் படித்ததில்லை. பிரசுரமான எல்லா கதைகளையும் கொடுக்கும்படி சொன்னார். நான் கொடுத்தேன். அவர் படித்தார். பிறகு சொன்னார்: “பரவாயில்ல. கதைகள் நல்லா இருக்கு! இனிமேல் கதைகள் பிரசுரமாகுறதுக்கு முன்னாடியே என்கிட்ட நீங்க காட்டணும்.'' நான் அதே மாதிரி காட்டினேன். அவர் அதைக் குறைக்கவோ, திருத்தவோ செய்ததில்லை. எம்.பி. போளின் கருத்தை நான் மதிக்கிறேன்.
"பெண்” என்றொரு சிறிய புதினத்தை நான் எழுதினேன். உணர்ச்சிகளின் கொடுங்காற்று அது. அவர் அந்தப் புதினத்தைப் படிப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். வெளுத்த வசீகரமான முகம். அது சிவப்பாவதை என்னால் பார்க்க முடிந்தது. சிறிது நேரத்தில் அதே முகம் வெளிறிப்போய் நீலமாக மாறியது. பின்னர் அது கறுத்துப்போய் காணப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் அது வெளிறிப்போய் தெரிந்தது. மீண்டும் பழைய வெளுத்த வசீகரமான முகம்! அவர் அந்தப் புதினத்தைப் படித்து முடித்தார். இரண்டு நிமிட நேரத்திற்கு அவர் எதுவுமே பேசவில்லை. கடைசியில் சொன்னார். “இந்தப் புதினத்தைப் பிரசுரிக்க வேண்டாம்னோ, பிரசுரிக்கணும்னோ நான் சொல்லப்போறதில்ல. உணர்ச்சிகள் ஒரு வரையறையைத் தாண்டி இதுல போயிருக்கு. பஷீர், உங்க விருப்பப்படி செய்யுங்க.''
நான் அந்த "பெண்' என்ற புதினத்தைப் பத்து, பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து வேம்பநாடு காயலில் விட்டெறிந்தேன். நான் சங்ஙனாசேரியில் இருந்து படகில் எர்ணாகுளத்திற்குத் திரும்பினேன்.
எம்.பி. போள் கேட்டார்:
“மங்களோதயம் ஒழுங்கா பணம் தர்றாங்களா?''
“தர்றாங்க ஸார்... உங்களுக்கு ஏ.கெ.டி.கெ.எம். வாசுதேவன் நம்பூதிரிப்பாடைத் தெரியுமா?''
“தெரியும். திருச்சூர் வாழ்க்கை எப்படி இருக்கு?''
“பரவாயில்லை....''
“நான் இங்கே இருக்கேன். பஷீர்... நீங்க எர்ணாகுளத்திற்கு வந்திரலாமே! நீங்க இங்க வர்றது நல்லதுன்னு நினைக்கிறேன். இங்கே இருந்து எதுவுமே எழுதல இல்லியா?''
“நான் எர்ணாகுளத்துக்கு வரத் தயாரா இருக்கேன்!''
“வந்து நிறைய எழுதப் பாருங்க!''
அவரும் அவரின் மனைவியும் வண்டியில் ஏறினார்கள். அவரின் மனைவி சொன்னார்: “பஷீர், நீங்க எர்ணாகுளத்துக்கு வாங்க...''
“வர்றேன்...''