உப்புமா - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6908
காயம் பட்ட எல்லா போர் வீரர்களுக்கும்தான் பென்சிலின் ஊசியைப் போட வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தான் வில்சன்.பீரங்கி போர் வீரர்கள் தங்களுடைய தொப்பியில் அணிந்திருக்கும் வெள்ளிபூசப்பட்ட துப்பாக்கியை வில்சன் சட்டையில் அணிந்து நின்றுகொண்டிருக்கிறான்.
டீச்சர் சொன்னாள்:
"உட்காரு வில்சன்... நாம் பாஜியை எழுந்திருக்கச் செய்வோம்.''
சவுதாமினி டீச்சர் வருகைப் பதிவேட்டை விரித்தாள்.
பாஜி "ஹாஜர்" கூறவில்லை. பெயரை அழைத்த பிறகும், அவன் எழுந்திருக்கவில்லை.டீச்சருக்கு என்னவோ போலாகிவிட்டது. ஒரு வாரமாக "ஹாஜர்" கூறுவதற்கு அவன்கற்றுக் கொள்ளவில்லை. பட்டியலில் இருந்து முகத்தை உயர்த்திய டீச்சர்,நடந்து கொள்ள வேண்டிய விதிகளைப் பற்றி திரும்பத் திரும்பக் கூறும் பாடத்தைஆரம்பித்தாள்.
"பெயர் கூறி அழைக்கும்போது பாஜி எழுந்து நிற்க வேண்டும். பாஜியின் பெயர் என்ன?''
வில்சன் திடீரென்று எழுந்து உரத்த குரலில் சொன்னான்:
"பாஜி, ஸிஸி.''
டீச்சர் வில்சனைத் திட்டவில்லை. சொல்லப்போனால், அது தான் அங்குள்ள தவறே.எழுந்து நிற்க வேண்டியவனுக்கு நிற்பதற்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை.அவனைப் பேசுவதற்கு அனுமதிப்பதில்லை. அவனுக்காக நான் எழுந்து நிற்கிறேன்.அவர்களுக்காகப் பேசுகிறேன்.அவர்களுக்கு சற்று எழுந்து நிற்பதற்கோ எதையாவது கூறுவதற்கோ தெரியவில்லை. தெரியாது என்றும் இயலாது என்றும் நான்முடிவு செய்கிறேன். என்னிடம் கேள்வி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்?டீச்சர் வகுப்பைப் பார்த்தாள். வில்சன் உட்கார்ந்து விட்டான். டீச்சர் பாடத்தைத் தொடர்ந்தாள்.
பாஜி சிரமேல் சேரப்பன் என்பதுதான் பாஜியின் முழுப் பெயர். பாஜியின் பெயரில் பாஜியும், பாஜியின் தந்தையும், பாஜியின் குடும்பமும் இருக்கின்றன.பாஜி அப்படியொன்றும் மோசமானவன் அல்ல. பாஜியின் தோளில் ஒரு கொடி இருக்கிறது. எல்லாரும் கொடிகளைப் பார்த்திருக்கிறார்கள் அல்லவா?
"எல்லாருடைய தோள்களிலும் கொடிகள் இருக்கின்றன.''
ஒரு சிறுவன் சொன்னான்:
"இல்லை.''
வில்சனாக இருக்குமோ என்று டீச்சர் கண்ணாடியின் வழியாகப் பார்த்தாள். அப்போது சிறுவர்கள் சொன்னார்கள்:
"என் தோளில் கொடி இல்லை.''
"எனக்கு கொடி இல்லை.''
டீச்சர் சிரித்தாள்.
எல்லாருக்கும் கொடிகள் இருக்கின்றன. இந்தக் கொடியை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாணவனும் தங்களுடன் வைத்துக் கொண்டு நடக்கிறார்கள். அவன் கொடியுடனே பிறக்கிறான். சிரமேல் சேரப்பன் பாஜி. சிரமேல் என்ற குடும்பத்தின் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு பாஜி பள்ளிக் கூடத்திற்கு வருகிறான்.
டீச்சர் நினைத்தாள். உன் கஞ்சி கை நீட்டிப் பெறுவதே என்று நீ பிறப்பதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விடுகிறது. ஆனால், எல்லா சிந்தனைகளையும் பிள்ளைகளிடம் கூறிக் கொண்டிருக்க முடியாது.
"எந்தவொரு பள்ளிக்கூடத்திலும் மாணவனின் முழுப் பெயரையும் சேர்த்துஅழைப்பதில்லை. இங்கு சுருக்கப் பெயர் மட்டுமே கூறி அழைக்கப்படுகிறது. பாஜி ஸி. ஸி. பாஜி, சிரமேல் சேரப்பன்... அது பிறகு உங்களுக்குப் புரியும்.முதல் வகுப்பில் ஏ.பி.ஸி படிப்பதில்லை. முதல் வகுப்பில் நீங்கள் ர, ற, த படிக்கிறீர்கள். ற என்ற எழுத்தை எல்லாரும் கற்றுக் கொண்டீர்களா?''
வகுப்பு ஒரே குரலில் கூவியது:
"ம்...!''
பாஜி வியர்வையில் நனைந்திருந்தான். அவன் தன்னுடைய தந்தையைப் பற்றியும் தாயைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய சிறிய சட்டியை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தந்தை சொன்னான்.