உப்புமா - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6908
டீச்சர் கேட்டாள்:
"பாஜி ஸி.ஸி என்று "ஹாஜர்" அழைக்கும்போது, பாஜி என்ன கூற வேண்டும்?''
அப்போது முதல் வகுப்பு முழுவதும் தட்டுத் தடுமாறிய குரலில் கூறினார்கள்:
"ஸாஜர்...!''
வெள்ளெழுத்துக்கான கண்ணாடிக்குப் பின்னால் டீச்சரின் கண்கள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. பாஜி எழுந்திருக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.பெஞ்சிற்குக் கீழே அவனுடைய சிறிய சட்டி கவிழ்ந்து கிடந்தது. தட்டி விடவோ மிதிக்கவோ முடியாது. அந்தச் சட்டி அவனுடைய முதல் பாடமாக ஆகிறது... ற!
ஒரு "ற"விற்குள் அவனுடைய வாழ்க்கை ஆரம்பமாகிறது. அதே "ற"விற்குள் அந்த வாழ்க்கை முடிவடைகிறது.
"ற" கை விலங்காகவும் ஆகிறது.
எழுத்துக்களும் சட்டங்களும் அவனை விலங்கு போடுகின்றன.
பாஜி ஸி.ஸி. சுமை தூக்கும் தொழிலாளி சேரப்பனின் வழித் தோன்றலாக ஆகிறான்.
அவன் எழுந்து நின்றபோது டீச்சர் சந்தோஷப்பட்டாள். வகுப்பில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இறுதியாக அந்த மடையன் படித்துக் கொண்டிருக்கிறான்!
எப்படியோ தட்டுத் தடுமாறி பாஜி எழுந்து நின்றான். கழன்று கொண்டிருக்கும்அரைக்கால் ட்ரவுசரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவன் சொன்னான்:
"டீச்சர், உறக்கம் வருவதால் முடியல...''
டீச்சர் எழுந்தாள். ஒரு மாணவன்... ஒரு பொய் கூறும் திறமைகூட இல்லாத ஒரு மாணவன்... டீச்சர் பாஜியை அப்போதுதான் பார்த்தாள். அவள் மாணவனின் அருகே மெதுவாக நடந்தாள். சரியாக வாரியிராத சுருண்ட தலைமுடிகள் சிதறிக் கிடக்கும் அவனுடைய நெற்றியில் வியர்வை அரும்பிக் கொண்டிருந்தது. அவனுடைய நீல நிறக்கண்களில் அறிவின் முதல் பாடத்தை கண் இமைகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
ற!
பாதியாக விரிந்திருந்த அவனுடைய மேலுதடு அவனுடைய முகத்தில் எழுதியது.
ற.
விரிந்த உதடுகளுக்கு மத்தியில் அவனுடைய முன் வரிசையில் இருந்த சிறிய பற்கள் எழுதி வைத்திருந்தன.
ற.. ற...
அவனுடைய முன் தலையிலும் நெற்றியிலும் கையை வைத்து சவுதாமினி டீச்சர் கேட்டாள்:
"காய்ச்சல் அடிக்கிறதா?''
ஆனால், டீச்சர் திடீரென்று பயந்தாள். பாஜி தாளைப்போல குளிர்ந்து காணப்பட்டான்!
பாஜி உண்மையைக் கூறினான்:
"பசிக்குது!''
அவன் விழுந்து விடுவானோ என்று டீச்சர் பயந்தாள். அவன் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டான். அவனைத் தன்னுடைய உடலுடன் சேர்த்து வைத்துக் கொண்டு பிடித்திருந்தபோது டீச்சர் பதறிப் பதறி வகுப்பறையையே பார்த்துக்கொண்டிருந்தாள். யாருக்குப் பசிக்கிறது? இனிமேலும் தளர்ந்து போய் கீழே விழப்போவது யார்?
அப்போது டீச்சர் சம்பளப் பிரச்சினையை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.சம்பளப் பிரச்சினைதான் எல்லா விஷயங்களுக்கும் மூல காரணம். அலுவலகத்தில் ஆப்ஷன் தேதி, அரியர்ஸ் ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்களாகவே இருந்தன.அலுவலகத்தில் ரவை, பால் பொடி, நெய் ஆகியவை இருந்தன. விறகு இருந்திருந்தால்,உப்புமா தயார் பண்ணி இருக்கலாம். ஆனால், விறகு பற்றிய விஷயத்தை யாரும் கூறவில்லை. எல்லாரும் அவரவர்களுடைய சம்பளத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் நானூறு ரூபாய்... என் இருபது பறைநெல்... பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய உப்புமாவைப் பற்றி ஒரு ஆள்கூட கூறவில்லை.
இன்றும் உப்புமா இல்லை!