உப்புமா - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6908
உண்மையாகச் சொல்லப் போனால் அதை கழுவிச் சுத்தம் செய்ய வேண்டிய தேவையே இல்லை. நேற்று முழுவதும் அந்த சட்டியில் எதுவுமே பரிமாறப்படவில்லை.இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், பள்ளிக் கூடத்திற்கு நடந்தே செல்கிறான் அல்லவா? சட்டியும் குளிக்கட்டும் என்று நினைத்திருக்கலாம். பள்ளிக்கூடத்தை அடைந்தவுடன் பாஜி தன்னுடைய இடத்தைப் பிடித்துக் கொண்டான். அவனுடைய சிறிய சட்டி உடைந்து விடக்கூடாது. எப்போது மதிய வேளை மணி அடிப்பார்கள்?பெஞ்சிற்குக் கீழே அவனுடைய சிறிய சட்டி கவிழ்ந்து இருந்தது. ற! ற என்ற எழுத்தை எழுதுவது என்பது ஒரு வேலையே அல்ல. ற! மதிய மணி அடிப்பது வரை அவன் அப்படியே உட்கார்ந்திருப்பான். பெஞ்சில் அமர்ந்து கொண்டே பாஜி தூங்கினான்.டீச்சர் வந்ததும் எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்றார்கள். பிள்ளைகள் எழுந்து நின்ற விஷயம் பாஜிக்கு தெரியாது. தப்பும் தவறுமாக பிள்ளைகள்கூறினார்கள்:
"நமஸ்ஸெ நமத்தே நமதே..''
ஆரவாரம் கேட்டு பாஜி கண்விழித்தான்.
வில்சன் சொன்னான்:
"டீச்சர்... டீச்சர்... பாஜி எழுந்திருக்கவில்லை!''
டீச்சர் சொன்னாள்:
"உட்காருங்க... உட்காருங்க... அவரவர்களுடைய இடங்களில் போய் எல்லாரும் உட்காருங்க.''
வில்சன் உட்காரவில்லை. அவன் நின்று கொண்டே சொன்னான்:
"டீச்சர்... டீச்சர்... பாஜி நமஸ்தெ சொல்லவில்லை!''
வேண்டாம் என்று சவுதாமினி டீச்சர் மனதில் நினைத்தாள். டீச்சருடைய மனதில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவளுடைய எல்லா எதிர்பார்ப்புகளையும் சம்பளப் பிரச்சினை தகர்த்தெறிந்துவிட்டது. ஒன்று ஒன்று எழுபத்துமூன்றிலிருந்து வர வேண்டிய பாக்கிப் பணம் கிடைத்தால், பணம் முழுவதையும் தந்து விடுவேன் என்ற ஒப்பந்தத்தில்தான் டீச்சர் இருபது பறை நெல்லை கடனாக வாங்கியிருந்தாள். இருபத்தெட்டு ஒன்று எழுபத்து ஆறு வரை சவுதாமினிடீச்சருக்கு எந்தவொரு பணமும் வரவேண்டியதில்லை என்ற தகவலை இன்றுதான் அவள் அலுவலகத்திலிருந்து தெரிந்து கொண்டாள். இருபத்தெட்டு ஒன்று எழுபத்தாறுக்கு ஆப்ஷன் கொடுத்தால், ஒன்று ஒன்று எழுபத்து மூன்றிலிருந்து வர வேண்டிய "அரியர்ஸ்" கிடைக்காது. கோரனின் கஞ்சி எப்போதுமே யாசித்து பெறுவதுதான்.இல்லாமை என்ற விஷயம் எப்போதும் டீச்சரைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பிள்ளைகளுக்கு முன்னால் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு இருக்க முடியாதே? குடையையும் கூடையையும் ஒரு இடத்தில் வைப்பதற்காக டீச்சர் பின்னால் திரும்பினாள். நானூறு ரூபாய் கொடுக்க வேண்டும்."அரியர்ஸ்" பணம் கிடைக்கப் போவதில்லை. எனினும், குடையையும் கூடையையும்ஜன்னலின்மீது வைத்து விட்டு, பிள்ளைகளின் பக்கம் திரும்பி நிற்கும்போது டீச்சர் சிரிப்பதற்கு முயற்சித்தாள். புடவையின் முனையைப் பிடித்துடீச்சர் தன் கண்களின் ஓரத்தைத் துடைத்தாள்.
வில்சன் உட்காரவில்லை. உட்காரவோ நிற்கவோ வில்சனுக்குத் தெரியாது. முதல்வகுப்பு படித்து முடித்தவுடன் தான் ஒரு டாக்டராக ஆகிவிட வேண்டும் என்ற நினைப்பில் அவன் இருக்கிறான். நீலநிறச் சட்டையும் வெள்ளை நிற அரைக்கால் ட்ரவுசரும் அணிந்து நிற்கமுடியாத கால்களுடன் அவன் நடந்து திரிந்தான். அவனுடைய டாடி பட்டாளத்தில் இருக்கிறார். டாடி பீரங்கி வீரராக பணியாற்றுகிறார். போர்புரிந்து தன்னுடைய டாடிக்கு காயம் உண்டாகும்போது, பென்சிலினை தான் குத்திவிடவேண்டும் என்று வில்சன் நினைப்பான்.