நன்றி கெட்ட செயல் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4506
கிளிகள் சூரியன் உதயமாவதற்கு முன்பே ஒன்றாகச் சேர்ந்து பாட ஆரம்பிக்கும். பகல் முழுவதும் பாடிக் கொண்டிருக்கும்.
அனில் அவற்றிற்கு இரை கொடுப்பான். பாத்திரத்தில் நீர் ஊற்றி கொடுப்பான். பச்சை மிளகாயை அறுத்து அவற்றிற்கு தின்பதற்காக தருவான்.
கிளி தவிர, அவன் இண்டு பூனைகளை வளர்த்தான். அவற்றுடன் ஒரு நாய்க்குட்டியையும். அதை அவன் செல்லமாக கொஞ்சி 'என் மகளே' என்று அழைப்பான்.
வீட்டிலுள்ளவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அனில் ஒரு துறவியைப் போல மொட்டை மாடியில் நெருப்பு காய்ந்தவாறு அமர்ந்திருப்பான். அதுதான் அவனுக்கு ஆனந்தம் அளிக்கக்கூடிய விஷயம்.
பக்கத்து வீடுகளில் மொத்தத்தில் அவன் வருவது எங்களுடைய வீட்டிற்குத்தான். என்னையும், என் மகள் அர்ப்பணாவையும் பார்ப்பதற்காக அவன் பல நேரங்களில் சாயங்கால வேளைகளில் வருவான். தன் மகளையும் - நாய்க்குட்டியை - தன்னுடன் அழைத்துக் கொண்டு வருவான். பேசிக் கொண்டிருக்கும்போது கூறுவான்: 'எங்களை... க்ரியேட்டிவ்வாக உள்ளவர்களை இந்த உலகம் எப்படி புரிந்து கொள்ளும்?'
க்ரியேட்டிவ் - சரிதான். என் மகள் ஓவியர். நானோ கதாசிரியர் என்ற விஷயம் உங்கள் எல்லோருக்கும் தெரியுமே! அவன் ஸ்டாண்ட், கேன்வாஸ், நிறங்கள் அனைத்தும் உள்ள க்ரியேட்டிவ் உலகத்தில் - ஓவியன்.
உலகத்திலுள்ள கவிஞர்களின் அருமையான வரிகள் அவனுக்கு மனப்பாடம். சில நேரங்களில் கூறி, கேட்கச் செய்வான். க்ரீஸிலும், இத்தாலியிலும், பாரீஸிலும், நியூயார்க்கிலும் உள்ள தன்னுடைய சொந்த அனுபவங்களை விளக்கி கூறுவான்.
ஒருநாள் அவனுடைய தாய் என்னிடம் கூறினாள்: 'உங்களைத் தேடி வந்து அனில் அன்புடன் பேசுவது உண்டு அல்லவா? நீங்கள் அவனுக்கு கூறி, புரிய வைக்க வேண்டும். இப்படியே எவ்வளவு நாட்கள் இருப்பான்?'
மறுநாள் சாயங்காலம் அனில் எங்களுடைய வீட்டிற்கு வந்தபோது நான், விஷயத்தை வெளியிட்டேன். அவன் சற்று அதிர்ச்சியடைந்தான். பிறகு... தன்னைத் தானே கட்டுப்படுத்தியவாறு, சிரித்துக் கொண்டே கூறினான்: 'அதற்கு நான் தனியாகவா இருக்கிறேன், ஆன்ட்டீ? எனக்கு எவ்வளவு கிளிகள் இருக்கின்றன என்பது தெரியுமா? 263. என் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற விஷயம், தெரியுமா? நான் ஓவியம் வரைவதையும் நிறுத்துவதில்லை.'
'வேலைக்குச் செல்வதற்கு ஆர்வமில்லையென்றால், சிறிது நேரம் கோயல் ஸாஹப்பின் அலுவலகத்தில் போய் இரு.'
அங்கு போய் என்ன செய்வது?' – அவன் என்னையே பார்த்தான். அந்த கண்கள் பிரகாசமாக ஆயின. அந்த மாதிரி அவன் என்னை எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை. 'திருட்டுத்தனம் செய்யணுமா? டெண்டர் தரும்போது, உயர்ந்த நிலையிலும், தாழ்ந்த நிலையிலும் இருக்கும் எல்லா அதிகாரிகளுக்கும் கைக்கூலி கொடுக்கணுமா? மணலைச் சேர்க்கணுமா? முதல் மழையிலேயே குண்டும், குழியுமாக ஆகக் கூடிய சாலைகளை உண்டாக்கணுமா? கட்டி முடிந்தவுடன், வெகு சீக்கிரமே இடியக் கூடிய பாலத்தைக் கட்டணுமா?'
அதற்கான பதில் என்னிடம் இல்லை. எனினும், நான் கூறினேன்: ‘ஆனால், அனில்.... உன் வீட்டில் இருப்பவர்கள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்ற விஷயம் உனக்கு தெரியும் அல்லவா? அவர்களுடைய மனம் குறைந்த பட்சம் வேதனைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவாவது....’
'அன்பு.... என் காலுக்குச் சமம்! என் மீது யாருக்கும் அன்பு இல்லை, ஆன்ட்டீ. அன்பு செலுத்துவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்க வேண்டாமா? எனக்காக அவர்கள் முதலீடு செய்த பணம் பாழாகிப் போய்க் கொண்டிருக்கிறதே என்ற வேதனைதானே தவிர, வேறு எதுவுமில்லை.'
சிறிது நேரம் அறையில் பேரமைதி நிலவியது.
தொடர்ந்து அவன் தன் நாயை மடியில் வைத்து, அதை கொஞ்சியவாறு கூறினான்: ‘அன்பு! என் மீது இவள் மட்டுமே அன்பு வைத்திருக்கிறாள். நாள் முழுவதும் என் மகள் பட்டினி கிடப்பாள். எனினும், நான் பால் கொடுத்தால்தான் பருகுவாள். என் கிளிகளை எடுத்துக் கொண்டால், நான் கூண்டைத் திறந்து விடுவேன். மொட்டை மாடியில் இரை போடுவேன். அதை கொத்தித் தின்று, நடனம் ஆடி, பாட்டு பாடி திரும்பவும் தங்களுடைய கூண்டிற்கே வந்து விடுவார்கள்.’
சிறிது நாட்கள் கடந்த பிறகு, 'மகள்' பிரசவமானாள். மூன்று சிறிய குட்டிகள்.... அனில்தான் பிரசவம் பார்த்தான். சிரமமான நேரங்களில் நாயை மடியில் தூக்கி வைத்தான். டாக்டரை அழைத்துக் கொண்டு வந்து ஊசி போடச் சொன்னான். நான்கைந்து நாட்கள் கடந்ததும், மிகுந்த ஈடுபாட்டுடனும், பெருமிதத்துடனும் மூன்று குட்டிகளையும் தனியான கூண்டுக்குள் அடைத்து, தன்னுடன் வைத்துக் கொண்டு நடந்தான். மாலை நேர பயணம்....
கோயல் ஸாஹப்பும் கமலா அக்காவும் முதலில் சற்று கோபப்பட்டாலும், பிறகு அமைதியாக இருந்தார்கள். ஆனால், புதிய மருமகள் கூறினாள்: ‘நான் சரி செய்றேன்.’ ஒரு நாள் அனில் தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு – நாய்களும் குட்டிகளும் சவாரி முடிந்து திரும்பி வந்தபோது – பதைபதைத்துப் போய் விட்டான். இரண்டு கூண்டுகளும் திறக்கப்பட்டிருந்தன. கிளிகளில் ஒன்று கூட இல்லை.
பல நாட்கள் அவன் அழுதான்.
ஒரு நாள் சாயங்காலம் எங்களுடைய வீட்டிற்கு அனில் வந்தான். 'ஆன்ட்டி, கிளிக் கூண்டு திறந்து கிடந்தது ஒரு பக்கம் இருக்கட்டும்... அவை எப்படி பறந்து சென்றன என்பதைத்தான் என்னால் நம்பவே முடியவில்லை. அவை என் மீது எந்த அளவிற்கு அன்பு வைத்திருந்தன! மனிதர்களைப் போல அவை எப்படி அன்பு இல்லாதவையாக ஆயின?'
அவனுடைய குரல் தடுமாறியது.
புதிய அண்ணி மொட்டை மாடியில் அவனுக்கு அருகில் போய் அமர்வாள். அவனை அமைதிப்படுத்துவதற்காக அவள் கூறுவாள்: ‘முட்டாள், இப்படியெல்லாம் பேசாதே. 'நன்றி கெட்ட செயல்' என்ற வார்த்தையே கிளிகளின் நம்பிக்கை துரோகத்திலிருந்து உண்டானதாகத்தான் இருக்கும். திருடர்கள்! நீ ஏன் அதை நினைத்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உனக்கு நாங்கள் இல்லையா? வீட்டிலும் வெளியேயும் நன்றாக சுற்றி நட. அலுவலகத்திற்குச் சென்று பார். உன்னுடைய மனம் மாறும். மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும். வா... உன்னை ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.’
நீண்ட நாட்கள் எதையும் பொருட்படுத்தாமல் இருந்து விட்டு, படிப்படியாக அனில் தன் தந்தையின் அலுவலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தான்.
ஆனால், அவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு தோன்றும் – அவனுக்குள் இருந்த வாழ்க்கையைச் சந்திக்கும் குணத்தையும், புதுமை எண்ணங்களையும், கள்ளங்கபடமற்ற தன்மையையும் யாரோ அழித்து விட்டார்கள் என்று.
அர்ப்பணா கூறுவாள்: ‘அனில் அழுவதில்லை. எனினும் அவனைச் சுற்றி வீசிக் கொண்டிருக்கும் காற்று ஈரமாக இருக்கிறது.’
மிகவும் அமைதியாக, வேலை முடிந்து தளர்ந்து போய் அவன் வீட்டிற்கு வந்து தன் அறையில் அமர்ந்து பாட்டு கேட்பான். பீரையும் விஸ்கியையும் குடிக்க ஆரம்பித்தான். சிகரெட் புகைப்பதும் ஆரம்பமானது.
கிளிகள் போனதற்குப் பிறகு அவனுக்கு பூனைகளின் மீதும், நாயின் மீதும், அதன் குட்டிகளின் மீதும் முன்பைப் போல அன்பு இல்லாமற் போனது. அவை சத்தம் உண்டாக்கினாலும், அவன் அதை கவனிப்பதில்லை. நாய்க் குட்டிகள் பெரிதாகிக் கொண்டிருந்தன. கிளிகளின் நன்றி கெட்ட செயலின் காரணமாக அவனுடைய ஈடுபாடு இல்லாமற் போனது.
அப்படியே நான்கைந்து வருடங்கள் வேகமாக கடந்து சென்றன.
கோயல் ஸாஹப் இன்னுமொரு கட்டிடத்தைக் கட்டினார். பஞ்சசீல் பார்க்கில். முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு பெரிதான வீடு. பழைய வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு, புதிய வீட்டிற்குச் சென்று வாழ கோயல் முடிவு எடுத்தார்.
வீட்டு பொருட்களை 'பேக்' செய்ய ஆரம்பித்தார்கள்.
கோயல் ஏராளமான பணிகளைக் கொண்ட மனிதர். திருமதி. கோயல் கான்ஃபரன்ஸுக்குப் போயிருந்தாள். அனிலின் அண்ணி பிரசவத்திற்காக தன் ஊருக்குச் சென்றிருந்தாள். அதனால் அனிலும், அவனுடைய அண்ணனும் சேர்ந்து 'பேக்கிங்' ஆரம்பித்தார்கள். அனிலின் அண்ணனின் அறையிலிருந்த பொருட்களைத்தான் எடுத்து கட்டிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று வீட்டின் மூலையில் ஏதோ ஒரு சிறிய பொருள் எட்டிப் பார்ப்பதைப் போல தோன்றியது.
அவன் 'பேக்' பண்ணிக் கொண்டிருந்த கயிறை இழுத்து அறுத்தான். அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.
சுய உணர்வற்று அவன் அங்கேயே அமர்ந்து விட்டான்.
தலையணைக்குள்ளில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் சிறிய சிறகுகள்....
அவனுடைய கிளிகளின் சிறகுகள்!