நன்றி கெட்ட செயல்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4507
நன்றி கெட்ட செயல்
(பஞ்சாபி கதை)
அஜீத் கவுர்
தமிழில்: சுரா
அவர்கள் எங்களுடைய பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்.
திரு. கோயல் மிகப் பெரிய கான்ட்ராக்டர். டில்லியில் ஏதாவது இடத்தில் அவருடைய கான்ட்ராக்டில் கட்டிடங்கள் உயர்ந்து கொண்டிருக்கும். மூத்த மகளின் திருமணம் முடிந்து விட்டது. அவளுடைய கணவனின் வீட்டில் இருப்பவர்களுக்கு பதர்பூரிலோ சூரஜ்கண்டிலோ சுரங்கங்கள் இருந்தன, மென்மையான மண். அந்தச் சுரங்கங்களின் கான்ட்ராக்டை மண்ணின் விலைக்கு வாங்கியிருப்பார்கள்.
இப்போது அந்தச் சுரங்கங்களிலிருந்து தங்கம் மட்டுமல்ல - இரத்தினங்களும் கிடைக்கின்றன. அவள் தன் கணவனின் வீட்டிலிருந்து வரும்போதெல்லாம், அவளுடைய தாய் திருமதி. கோயல் - அவளுடைய புதிய இரத்தின நகைகளைப் பார்த்து மனம் குளிர்வாள். தன்னுடைய மகள் செழிப்பாகவும் புகழுடனும் இருப்பதைப் பார்த்து அவள் கடவுளுக்கு நன்றி கூறினாள்.
மகளுக்கு இளையவனாக இருக்கும் ஒரு மகனின் திருமணம் சமீபத்தில்தான் நடந்தது. நீண்ட நாட்களாக பி.ஏ. வில் தோல்வியைச் சந்தித்துக் கிடந்து, இறுதியில் தன் தந்தையின் கான்ட்ராக்ட் வேலைகளில் உதவுவதில் ஈடுபட்டான். படிப்படியாக எல்லா தில்லுமுல்லுகளையும், பித்தலாட்டங்களையும் கற்றுக் கொண்டு அவன் பொதுவாகவே நல்ல பிஸினஸ் மேனாக ஆகி விட்டான்.
எல்லோருக்கும் இளைய மகன் அனில். சமீபத்தில் சிக்காகோவிலிருந்து பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டு, ஊருக்கு திரும்பி வந்திருந்தான்.
அவனுடைய தாய்க்கு பக்கத்து வீடுகளுக்கு எங்கும் போய் பேசிக் கொண்டிருப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அனில் சிக்காகோவில் இருந்தபோது, எப்போதாவது காண நேரும்போது, அவள் கவலையுடன் கூறுவாள்: 'எங்களுக்கு எவ்வளவு பெரிய கான்ட்ராக்ட் வேலை! இந்த பையனின் தலையில் என்ன நுழைந்திருக்கிறதோ?'. அவன் கூறுவான் - 'எனக்கு என் தந்தையின் வேலையில் ஈடுபாடில்லை' என்று. எம்.எஸ்ஸி. யில் தேர்ச்சி பெற்று விட்டு, இப்போது அமெரிக்காவிற்குச் சென்றான். அறிவியல் எங்கே? ஹோட்டல் மேனேஜ்மென்ட் எங்கே?
'பரவாயில்லை. இப்போதைய பசங்க தங்களுடைய விருப்பப்படிதானே படிக்கிறார்கள்? திரும்பி வரும்போது எல்லாம் சரியாகி விடும்' - நான் அவளை சமாதானப் படுத்துவதற்காக கூறுவேன்.
நான் பல முறைகள் ஆச்சரியப்பட்டிருக்கிறேன் - கமலாஜிக்கு அதாவது திருமதி. கோயலுக்கு தன் மகனை நினைத்து கவலைப்படுவதற்கு நேரம் எங்கே இருக்கிறது? குறிப்பிட்டுக் கூறும் வகையில் அவளுக்கு வேலை எதுவுமில்லை. பிஸினஸுமில்லை. அதற்கான தேவையுமில்லை. வயதான பெண். வயதான பெண்களுக்கு தெரியும் - சிரமமான நேரத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வார்கள் என்று. அதாவது - ஒன்று விதவையாக ஆகும்போது.... இல்லாவிட்டால்.... திருமணத்திற்கு முந்தைய நாட்களை நகர்த்தி தள்ளுவதற்கு. அதுவும் இல்லாவிட்டால் - தன்னுடைய வரதட்சணைப் பணத்தைச் சம்பாதிப்பதற்காக.
கமலாஜி, சமூக சேவை செய்து கொண்டிருந்தாள். மீட்டிங், லெக்சர், டெமான்ஸ்ட்ரேஷன் என்று ஆரம்பித்து, ஒரு நூறு சுறுசுறுப்பான வேலைகள். கமலாஜியின் இனத்தைச் சேர்ந்த பெண்கள் அதைத்தான் செய்வார்கள். இல்லாவிட்டால் 'கிட்டி பார்ட்டிகள்' நடத்துவார்கள். தோழிகளுடன் சேர்ந்து காப்பி குடிப்பார்கள்.... ஃப்ளாஷ் விளையாடுவார்கள், புதிய புடவைகளை எல்லோருக்கும் தெரியும்படி காட்டுவார்கள், இரத்தினங்களைக் காட்டுவார்கள். இப்படி சுறுசுறுப்பான வாழ்க்கை....
அது அப்படியே இருக்கட்டும். அனில் திரும்பி வந்த போது, வீட்டில் உள்ளவர்களுக்கு தோன்றியது - இரண்டு கால்களில் நடந்து, ஒரு பண மூட்டை வந்து சேர்ந்திருக்கிறது என்று. ஆனால், வேலைக்குச் செல்லும் விஷயத்தில் அனில் சிறிதும் அவசரப்படாமல் இருந்தான். வெளியிலிருந்து மிகவும் களைத்துப் போய் வந்திருக்கிறான். இனி சற்று ஓய்வெடுக்க வேண்டும். அவன் மேலே இருந்த, மழைக் காலத்தில் பயன்படுத்தக் கூடிய அறையை தனக்காகச் சுத்தம் செய்தான். அறையை அலங்கரித்தான். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த இசைக் கருவிகளை உள்ளே பொருத்தினான். அதைக் கொண்டு வர எண்ணியபோது, எல்லோரும் அவனை பயமுறுத்தினார்கள். அதற்கு அதிகமான 'கஸ்டம்ஸ் ட்யூட்டி' கொடுக்க வேண்டியதிருக்கும். ஆனால், திரு. கோயலுக்கு சுங்க இலாகாவில் உள்ளவர்களுடன் நெருங்கிய அறிமுகம் இருந்ததன் காரணமாக, அனிலின் இரண்டு பெட்டிகளும் வி.ஐ.பி. பொருட்களுடன் சேர்ந்து வெள்ளை நிற சாக்பீஸ் அடையாளத்துடன் வெளியே வந்தது.
தரையில் அவன் விரிப்பை விரித்து, அதன் மீது நிறைய குஜராத்தி மெத்தைகளை அடுக்கி வைத்தான். புத்தக அலமாரியில் பழைய, புதிய புத்தகங்களைத் தூசி தட்டி, சுத்தம் செய்து அடுக்கி வைத்தான். ஸ்டாண்டையும் கேன்வாஸையும் சரி பண்ணினான். அருகிலேயே ஸ்டூலில் சாயப் பெட்டியையும் தூரிகைகளையும் வைத்தான்.
வெளியே மொட்டை மாடியில் நிறைய பூச் சட்டிகளைக் கொண்டு போய் வைத்தான். குளிர் காலமாக இருந்தது. பகல் முழுவதும் பூச் சட்டிகளும், மேலே திறந்து கிடந்த மொட்டை மாடியும் வெயிலில் காய்ந்தன. அனில் இசை கேட்பான், வெயிலில் காய்வான், பிறகு... பீர் பருகுவான்.
சில நேரங்களில் அவன் ஓவியம் வரைவான். ஓவியத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு அவன் சிக்காகோவின் தெருக்களில் சம்பாதித்தது.
வீட்டில் உள்ளவர்கள் காத்திருந்தார்கள். ஓய்வு முடிந்து, வேலைக்கு மனு போடுவான் என்று எண்ணினார்கள். ஆனால், அனிலுக்கு தினமும் களைப்பு தோன்றும். பிறகு... அது போகவும் செய்யும்.
இறுதியில் அனிலின் தந்தை அவனுடைய பயோடேட்டாவை டைப் செய்ய வைத்து, அவனுடைய கையெழுத்தை இடச் செய்து ஆறேழு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு மனு போட்டார்.
ஒரு இடத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு வரும்படி அழைப்பு வந்தது.
சிறிதும் விருப்பமே இல்லாமல் அவன் நேர்முகத் தேர்விற்குச் சென்றான். தேர்வு செய்யப்பட்டான்.
ஐந்தாறு நாட்கள் வேலையைப் பார்த்து விட்டு, ராஜினாமாவைத் தந்து விட்டு, அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். என்னிடம் அவன் கூறினான்: 'என் தந்தையின் சிபாரிசால்தான் எனக்கு அந்த வேலை கிடைத்தது என்ற செய்தியைத் தெரிந்து கொண்ட நாளன்று நான் அதை தூக்கியெறிந்து விட்டேன். மிஸ்டர். கோயலின் மகனுக்கு தரப்பட்ட அந்த வேலை எனக்கு தேவையில்லை.' வீட்டில் இருப்பவர்கள் மிகவும் பதைபதைப்பு அடைந்தார்கள். கோபம் கொண்டார்கள். ஆனால், அனில் கவலைப்படவில்லை. அவன் அமைதியைக் கடைப்பிடித்தான்.
நேரத்தின் பெரும் பகுதியை அவன் மொட்டை மாடியிலேயே செலவிட்டான்.
அவன் ஒரு பெரிய பறவைக் கூண்டைக் கொண்டு வந்தான். நல்ல நீளத்தையும் அகலத்தையும் உயரத்தையும் கொண்ட கூண்டு. அதற்குள் அறுபது கிளிகளை வசிக்கச் செய்தான். பல வர்ணங்களைக் கொண்ட ஐம்பது... அறுபது கிளிகள். கூண்டிற்குள் நிறம் பூசப்பட்ட மண் பானைகளைத் தொங்க விட்டான். அவை சிறிய... சிறிய வீடுகளைப் போல தோன்றின. படிப்படியாக கிளிகள் இணை சேரவும், குஞ்சுகள் உண்டாகவும் செய்தன. நான்கைந்து மாதங்களில் கிளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததும், அனில் இன்னொரு பெரிய பறவைக் கூண்டைக் கொண்டு வந்து சுவரில் பொருத்தினான்.