ந்யூ இயர் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4535
அவர்கள் வந்து சேர்வதற்கு முன்பு கபூர் தன்னுடைய மனைவியுடன் சண்டை போட்டு, அவளின் திட்டுதல்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி அவனிடம் உரத்த குரலில் கூறினாள்: 'நாசமாய் போன மதுவை இந்த வீட்டில் வைத்து குடிக்கப் போறீங்களா? அதுவும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு... 'ந்யூ இய'ராம்! என்ன நாசம் பிடிச்ச விஷயம் அது! போதாததற்கு இன்னைக்கு தேதி முப்பத்தொண்ணு. வீட்டிலோ காய்கறியோ பிஸ்கட்டோ, வேறு எந்த பொருளுமே இல்லை. பலசரக்குக் கடையில் இப்போது கடன் வாங்குவதற்கு வெட்கமாக இருக்கு. நேற்றுத்தான் அந்த ஆளுக்கிட்ட சொன்னேன்.... 'இந்த மாதம் இனி எதுவும் தேவையில்லை. கணக்கைக் கூட்டி வையுங்க. முதல் தேதியன்று பணத்தைத் தந்திடுறேன்' என்று. பழைய ஒரு பாக்கி 183 ரூபாய் இருக்கு. இனிமேலும் கடன் வாங்கினால், விருந்தாளிகள் சந்தோஷத்துடன் சாப்பிட்டு விட்டு, அவரவர்களின் வீடுகளுக்குப் போயிடுவாங்க. ஆனால், நாம அடுத்த மாதம் குருத்துவாராவிலிருக்கும் தர்மசாலையில் போய் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்து விடாதா? 'ந்யூ இய'ராம்! இதெல்லாம் பணக்காரர்களுக்கான விஷயங்கள். பெரிய ஹோட்டல்களுக்குப் போறவங்களோட கொண்டாட்டங்கள்.... இங்கே யார் எப்படி வாழ்க்கையை நடத்துறாங்கன்ற விஷயம் தெரியுமா? முப்பது நாட்களை நகர்த்தி விடுறது எப்படி என்று எனக்குத்தான் தெரியும்....'
ஆனால், கபூர் ஸாஹப் என்ன செய்வான்? அவன் தன்னுடைய மனைவிக்குக் கூறி புரிய வைக்க முயற்சித்தான்: 'அடியே! இது ஆங்கிலேயர்களின் கொண்டாட்டம். ந்யூ இயர்.... நம்முடைய விசாகத்தையும் தீபாவளியையும் போல...' ஆனால், அவள் கேட்டால்தானே!
ஏழே முக்கால் ஆனபோது, உடன் பணியாற்றுபவர்கள் இருவரும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்கள்.
பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் உள்ளேயிருந்த அறைக்குள் சென்றார்கள். எப்போதும் செய்வதைப் போல குழந்தைகள் ஆரவாரம் எதுவும் உண்டாக்கவில்லை. அதற்குப் பதிலாக தங்களின் தாய்களின் புடவைத் தலைப்புகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். க்ளார்க்குகளின் பிள்ளைகளாயிற்றே! வெளியே நல்ல குளிர் காணப்பட்டது. அதனால் 'போய் விளையாடுங்க...' என்று கூறி, அவர்களை வெளியே அனுப்பி வைக்கவும் வழி இல்லாமலிருந்தது.
வெளியே இருந்த அறையில் ஆண்கள் புட்டியை உடைத்தார்கள். அத்துடன் வறுத்த கடலையையும் மிக்சரையும் மென்று தின்றார்கள். உள்ளேயிருந்த அறையில் பெண்கள் உருளைக் கிழங்கின் விலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
'பணி உயர்வு கிடைத்ததற்கு கபூர் ஸாஹப் விருந்தே தந்திருக்கணும்' - வசிஷ்டன் சொன்னான்.
'என்ன பணி உயர்வு நண்பா! பணி உயர்வு என்று கூறினால், சம்பளம் அதிகமாக கிடைக்க வேண்டும். எனக்கோ வேலை மட்டுமே கூடியிருக்கிறது. முன்பு பத்தரை மணிக்கு அலுவலகத்திற்கு வந்தால் போதும். அதற்குப் பிறகு நான்கரை மணிக்குப் போய் விடலாம். இப்போதோ ஏழே முக்கால் மணிக்கு அமைச்சரின் பங்களாவுக்கு வந்து சேர வேண்டும். இரவு எட்டு, ஒன்பது மணி வரை வேலை இருக்கும், உங்களுக்கு தெரியுமல்லவா?' - கபூர் தன்னுடைய நிலைமையை விளக்கிக் கூறினான்.
'வேலையைப் பற்றிய விஷயத்தை விட்டுத் தள்ளுங்க, கபூர் ஸாஹப். உங்களுடைய நிலை உயர்ந்து விட்டது' - குப்தா கூறினான்.
'இந்த நாற்காலியில் அமர்ந்தால் எதையும் பெறலாம். சுதை ஞாபகத்தில் இருக்கிறதா? நம்முடைய நரேந்திர சுதை. இங்கு முன்பு உங்களுடைய இடத்தில் அவர்தான் இருந்தார். எட்டு வருடங்களுக்கு முந்தைய விஷயம். பம்பாயிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் லைஸன்ஸ் அமைச்சரின் இலாகாவில் முடங்கிக் கிடந்தது. ஒவ்வொரு வாரமும் அப்பிராணிகள் இங்கேயே சுற்றிக் கொண்டு திரிந்தார்கள். அமைச்சர் அவர்களைக் கொஞ்சம் கூட நெருங்க விடவில்லை. இறுதியில் ஏமாற்றமடைந்து பம்பாய்க்காரர்கள் திரு. சுதை அவருடைய வீட்டில் போய் பார்த்தார்கள். சுத் ஓடி அலைந்து ஒரே மாதத்தில் லைஸன்ஸைச் சரி செய்து கொடுத்து விட்டார். எல்லா விஷயங்களும் சுத் மூலமாகத்தான் நடந்தன. லைஸன்ஸ் கிடைத்தபோது பம்பாய்க்காரர்கள் நினைத்தார்கள்...' நாம் ஒவ்வொரு முறையும் டில்லியில் ஆறோ ஏழோ ஆயிரம் ரூபாய்களைச் செலவழிக்கிறோம். அப்படி இருக்கும்போது சுத்தையே இந்த விஷயத்திற்காக நியமித்து விட்டால் என்ன?' என்று. அதைத் தொடர்ந்து சுத் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு, கம்பெனியின் டில்லி எக்ஸிக்யூட்டிவ் டைரக்டராக ஆகி விட்டார். குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அலுவலக அறை, வசிப்பதற்கு தனியான ஃப்ளாட். பிறகு அவர் விலை மதிப்புள்ள காரில்தான் பயணம்... தன்னுடைய அழகான லேடி செக்ரட்டரியுடன். பழைய அலுவலக வராண்டாவில் சுற்றித் திரிந்து ஆட்களை டின்னருக்கு அழைக்கும் ஒவ்வொரு மாலை வேளையிலும் அமைச்சகத்தின் ஏதாவது ஆபீஸருடன் சேர்ந்து ஒபராய், தாஜ் அல்லது மவுர்யா ஹோட்டலில் டின்னர் சாப்பிடுவார். ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கான ரூபாய்களைச் செலவழிப்பார். எப்போதும் இறக்குமதி செய்யப்பட்ட புதிய சூட்டை அணிந்திருப்பார்' - வசிஷ்டன் அந்த கதையை விளக்கிக் கூறினான்.
'நண்பரே! நோட்டுகளில் சற்று பசை படிந்திருக்கும். யாருடைய கைகளின் வழியாக அது கடந்து போகிறதோ, அவங்களோட கையில் கொஞ்சம் அது ஒட்டிப் பிடித்துக் கொள்ளும். நீங்கள் விவரமான ஆள்தானே?' - குப்தா கூறினான்.
'நண்பர்களே! நான் இருக்குற விஷயத்தைக் கூறுகிறேன் சாஸ்திரங்களில் எண்பத்து நாலு இலட்சம் யோனிகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது அல்லவா? அவை அனைத்தும் க்ளார்க்குகளுக்கு உள்ளவையே. மனிதன், பூனை, நாய், தேள், ஆமை, குள்ள நரி, பன்றி - இப்படி எவ்வளவு உயிரினங்கள்! ஆனால், எண்பத்து நான்கு லட்சம் பிறவிகளுக்குப் பிறகுதான் மனிதப் பிறவி கிடைக்கும். அதிலும் ஏதாவது அதிர்ஷ்டசாலிக்கு மட்டுமே அமைச்சரின் பெர்சனல் அசிஸ்டெண்டாக ஆக முடியும்' - வசிஷ்டன் தன்னுடைய அறிவை வெளியிட்டான்.
அது சரிதான்.... 'ஆனால், வேலை அதிகமாகிறது. இங்கு வீட்டுக்காரியோ கடந்த பத்து நாட்களாக...' - கபூர் வாய் விட்டு சற்று சிரித்தான்.
'அவங்களுக்குக் கூறி புரிய வைக்க வேண்டும். இந்த நாற்காலி அற்புதங்களை உருவாக்கும் தகுதி படைத்தது என்பதைச் சொல்லுங்க. அதற்குப் பிறகு அவங்க உங்களுக்கு தினமும் அல்வாவையும் பாலையும் தந்த பிறகுதான் அலுவலகத்திற்கே அனுப்பி வைப்பாங்க' - வசிஷ்டன் கூறினான்.
'அவங்களுக்கு காரியங்களை விளக்கிச் சொல்லுங்க. படிப்படியாக எல்லா விஷயங்களையும் புரிஞ்சுக்குவாங்க' - வசிஷ்டனின் அடுத்த அறிவுரை.