ந்யூ இயர் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4535
'ஒவ்வொரு கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பதவியில் இருக்கும் மனிதரும் பாலத்திலோ சான்டாக்ரூஸிலோ வேலை கிடைப்பதற்கு என்ன சிபாரிசெல்லாம் செய்ய வைக்கிறார்கள்! ஒவ்வொரு ட்ராஃபிக் அலுவலக பதவியில் இருப்பவரும், ஒவ்வொரு சேல்ஸ் டாக்ஸ் ஆபீஸரும் சாந்த்னி சவுக்கிலும் சதரிலும்... இல்லாவிட்டால் சாவ்டி பஸாரிலும் பணி கிடைப்பதற்காக என்னென்ன வேலைகளையெல்லாம் செய்கிறார்கள்! அதெல்லாம் இருக்கட்டும்.... பெரிய மருத்துவமனைகளில் வி.ஐ.பி. பிரிவில் பணி கிடைக்கக் கூடிய டாக்டர்கள் மீது மற்றவர்களுக்கு என்ன பொறாமை இருக்கிறது என்பது தெரியுமா? இந்த இடங்கள் அப்படி சாதாரணமாக கிடைத்து விடாது. இரண்டு மடங்குகள் வேலைகளைச் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால், தலை பெரியதாக இருந்தால், தலை வலியும் பெரிதாகத்தான் இருக்கும் என்பதைக் கூற வேண்டியதில்லையே!' - குப்தாவின் குரு மந்திரம் இது.
வசிஷ்டன் சொன்னான்: 'இன்னும் சொல்லப் போனால்... பிரதம அமைச்சரின் விஷயத்தையே எடுத்துப் பாருங்க. பாவம்... பதினெட்டு, பத்தொன்பது மணி நேரங்கள் பணி செய்கிறார். தேர்தல் நேரத்தில் கிராமம் கிராமங்களாக அலைந்து திரிகிறார். அவருக்கு என்ன கிடைக்கிறது?'
'ஆமாம் சார்... இந்த அனைத்து அமைச்சர்களும் தலைவர்களும் ஓடி திரிகிறார்கள். சும்மா இல்ல...'
'இறுதியில் இங்கு இருக்கும் அக்காவும் முழு பலனையும் அனுபவிப்பாங்க. பெரிய தலைவலியைக் கொண்ட உங்களோட தலையை அவங்க தடவி விடுவாங்க' - வசிஷ்டன் சிரித்துக் கொண்டே கூறினான்.
புட்டி காலியாகும் நிலையில் இருந்தது. கடலை கிட்டத்தட்ட தீர்ந்து விட்டிருந்தது. குப்தா கடிகாரத்தைப் பார்த்தான். 'நண்பர்களே! மணி ஒன்பதரை ஆகி விட்டது. இனி உணவு சாப்பிடலாம். பத்தரை ஆகி விட்டால், பிறகு பேருந்து கிடைக்காது. காரில் போவதற்கு நாமொன்றும் அமைச்சரோ மற்றவர்களோ இல்லையே!'
கபூர் எழுந்து உள்ளே சென்றான். சிறிது நேரம் கழித்து கபூரின் பிள்ளைகள் மேஜையின் மீது தட்டுகளைக் கொண்டு வந்து வைத்தார்கள். மூன்று நண்பர்களும் வெளியே இருந்த அறையிலும், குப்தா, வசிஷ்டன் ஆகியோரின் மனைவிகள் உள்ளேயிருந்த அறையிலும் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள். தங்களுடைய பிள்ளைகளிடம் தமாஷாகப் பேசியவாறு அவர்களையும் உணவு சாப்பிட வைத்தார்கள்.
கபூரின் மனைவி சப்பாத்தி தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பிள்ளைகள் பரபரப்பாக உள்ளேயும் வெளியேயும் தட்டுகளை மாற்றி மாற்றி கொண்டு போவதும், திருப்பிக் கொண்டு வருவதுமாக இருந்தார்கள்.
பத்தே கால் ஆனதும், எல்லோரும் புறப்பட்டார்கள்.
கபூர் குற்றவாளியைப் போல தன் மனைவியைப் பார்த்துக் கொண்டே உள்ளேயும் வெளியேயும் இருந்த அறைகளில் படுக்கையை விரித்தான்.
உணவு சாப்பிட்டு விட்டு, கபூரின் மனைவி கோபத்துடன் பாத்திரங்களைக் கழுவி சுத்தப்படுத்தினாள். 'ந்யூ இயர்! கடுமையான குளிரில் இதெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு சுவாரசியமான விஷயமாக இருக்கும். நம்முடைய நாட்டின் கொண்டாட்டங்கள் ஹோலியும், தீபாவளியும், விசாகமும்தான். அனைத்தும் நல்ல காலச் சூழ்நிலையில் வரக் கூடியவை. குளிர் காலத்தில் வரக் கூடிய லோஹடிக்குக் கூட ஆட்கள் நெருப்பு மூட்டி, குளிர் காய்கிறார்கள். இங்கு பனி உருகக் கூடிய இந்த குளிர் காலத்தில் பாத்திரத்தைச் சுத்தம் செய்ய வேண்டியதிருக்கிறது. இந்த ந்யூ இயர் போய் தொலையட்டும்....' - கபூரின் மனைவி தனக்குள் கூறிக் கொண்டாள்.
இறுதியில் விளக்குகள் அணைந்தன. சுமார் பதினொன்றரை மணி ஆகியிருக்கும். பிள்ளைகள் உறங்கி விட்டார்கள். கபூரின் மனைவி அப்போதும் கோபத்தில்தான் இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்:
'இந்த நாசமாய் போன ந்யூ இயர் ஏன் இரண்டாம் தேதி வந்திருக்கக் கூடாது? குறைந்த பட்சம், சம்பளம் கிடைத்திருக்குமே!'
கபூர் அதற்கு பதில் கூறவில்லை.
கபூரின் மனைவியின் சத்தம் சிறிது நேரம் இருண்ட அறைக்குள் கறுத்த வவ்வாலைப் போல அலைந்து திரிந்து விட்டு, பிறகு.... அது ஏதோ கீறல் விழுந்த சுவரில் போய் ஒட்டிக் கொண்டது.
இறுதியாக நாசமாய் போன ந்யூ இயர் இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்தபோது, எல்லோரும் ஆழமான உறக்கத்தில் மூழ்கி விட்டிருந்தார்கள்.