ந்யூ இயர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4535
ந்யூ இயர்
(பஞ்சாபி கதை)
-அஜித் கவுர்
தமிழில்: சுரா
டைப் ரைட்டருடன் போராடிக் கொண்டிருந்த கபூரை அமைச்சரின் பணியாட்கள் குழுவில் நியமித்தவுடன், ஒரே இரவில் கபூர் 'கபூர் ஸாஹப்' ஆகி விட்டான்.
அமைச்சரின் பெர்சனல் அசிஸ்டெண்ட்! கபூர் ஸாஹப்!
ஒரே நாளில் தான் பெரிய ஆளாக ஆகி விட்டதைப் போல அவனுக்குத் தோன்றியது.
அலுவலகத்தின் வராண்டாவில் அவன் தலையை உயர்த்திக் கொண்டு நடந்தபோது, வராண்டாவிற்கு அகலம் போதாது என்று அவனுக்குத் தோன்றியது. மேலும் சற்று நடந்தபோது, வராண்டாவில் போடப்பட்டிருந்த ஸ்டூல்களில் அமர்ந்து தூங்கிக் கொண்டோ, வெற்றிலை - பாக்கு போட்டுக் கொண்டோ இருந்த ப்யூன்கள் எழுந்து, அவனுக்கு 'சலாம்' போட ஆரம்பித்தார்கள்.
இந்த பணி நியமனத்திற்குப் பிறகு பத்து, பதினொரு நாட்கள் கடந்த பின்னர் புது வருடம் ஆரம்பிக்கிறது. ஆனால், தன்னுடைய நீண்ட க்ளார்க் வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும், கபூர் புது வருடம் என்ற ஒன்றை அறிந்ததே இல்லை. புது வருடம் என்று ஆரம்பிக்கிறது, மெதுவாக நகர்ந்து அது என்றைக்கு முடிகிறது என்பதையெல்லாம் கபூர் ஒரு முறை கூட நினைத்துப் பார்த்ததில்லை. டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி, எப்போதும் இருக்கக் கூடிய முப்பது, முப்பத்தொன்று தேதிகளைப் போலவே அதிர்ஷ்டமற்ற நாளாகவே இருந்தது. ஜனவரி ஒன்று, எல்லா முதல் தேதியையும் போல சந்தோஷத்துடன் வந்து சேரும் - அது சம்பள நாள். கடன்காரர்களின் கடன் தீர்க்கப்படும் நாள். நீண்ட நாட்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளின் தேவைகள் செயலாக்கப்படும் நாள்.... நோட்டு புத்தகங்கள், புதிய புத்தகங்கள், கிழிந்து போனவற்றிற்குப் பதிலாக புதிய சாக்ஸ்கள், பள்ளிக்கூட சீருடை, பென்சில்....
மனதில் பெரிய பெருமை தோன்றும். அத்துடன் தாங்க முடியாத கவலையும்.... மாதத்தின் முதல் நாளன்றே சம்பளப் பணத்தில் பாதிக்கும் மேல் தீர்ந்து போய் விட்டதே என்ற கவலை.
ஆனால், இந்த முறை கபூர், கபூர் ஸாஹப் ஆக ஆகியதைத் தொடர்ந்து அவனுடைய வாழ்க்கை முறையே முற்றிலும் மாறி விட்டது.
நடந்தது இதுதான். புது வருட பரிசுடன் யாரோ வியாபாரி, அமைச்சரின் வீட்டிற்கு வந்தார். தேதி டிசம்பர் முப்பத்தொன்று. நேரம் காலை எட்டு மணி. அப்போது கபூர் அமைச்சரின் பங்களாவின் முன்னறையில் பி.ஏ.வின் நாற்காலியில் ட்யூட்டியிலிருந்தான்.
பரிசுப் பொருளைப் பார்த்ததும் அமைச்சர் சொன்னார்: 'மன்னிக்கணும். நான் மது அருந்துவதை நிறுத்தி விட்டேன். பிரதம அமைச்சர் என்ன கூறினார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமல்லவா?'
வியாபாரி தன் மனதிற்குள் அமைச்சரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டார். அவர் சற்று அதிர்ச்சியடையவும் செய்தார். அவர் மனதிற்குள் கூறினார்: 'திருட்டுப் பயல்.... என் பிடியிலிருந்து நழுவிப் போறதுக்கு முயற்சி பண்றியா?' எனினும், அவர் பற்கள் முழுவதையும் வெளியே காட்டி சிரித்தவாறு சொன்னார்:
'பரவாயில்லை சார்... புது வருட பரிசுப் பொருளுடன் நான் மீண்டும் வருகிறேன். நாளையோ, நாளை மறுநாளோ... ஆனால், இன்று புது வருடத்திற்கு முந்தைய நாள். இந்த டைரியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.' அவர் தன்னுடைய ப்ரீஃப்கேஸிலிருந்து டைரியை எடுத்து அமைச்சருக்கு முன்னால் வைத்தார். ஒரு சாதாரண டைரி. அதற்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட வேறு சில தாள்களும் இருந்தன. அமைச்சர் டைரியின் மேலட்டையைப் புரட்டி விட்டு, அதற்குள் இருந்த தாளின் எடையைப் பார்த்தார். அவர் சந்தோஷத்துடன் கேட்டார்: 'இதெல்லாம்.... எதற்கு இவ்வளவு சிரமம்?'
வியாபாரி திருட்டு சிரிப்பு சிரித்தார்.
மனிதனின் நிலை உயர்வதற்கேற்ப, அவனுடைய குழந்தைகள் அதிகமான இனிப்பு பலகாரங்களைச் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
அமைச்சர் டைரியை தன்னுடைய மேஜையின் ட்ராயருக்குள் வைத்தார்.
வியாபாரிக்கு மன நிம்மதி உண்டானது. 'ஓ... தப்பித்தோம்' - அவர் மனதிற்குள் கூறிக் கொண்டார்.
வெளியே வந்த பிறகு, அவர் பரிசாகக் கொண்டு வந்திருந்த புட்டியைக் கபூரிடம் கொடுத்தார். பி.ஏ.வையும் கைக்குள் போட வேண்டும்.
சம்பவம் சிறிதும் எதிர்பார்க்காமல் நடைபெற்றதால், கபூர் சற்று நிலை தடுமாறினான். முக உணர்ச்சிகளாலோ, வார்த்தைகளாலோ நன்றி கூற முடியவில்லை. வாழ்க்கையில் முதல் தடவையாக யாரோ ஒருவர் இப்படி கபூருக்கு பரிசுப்பொருள் தருகிறார். அவன் பதைபதைத்துப் போய் விட்டான். வியாபாரி கூறினார்: 'புது வருடத்திற்காக ஒரு சிறிய பரிசு.' அவர் சிரித்துக் கொண்டே வெளியேறினார்.
கபூர் நடுங்கியவாறு அந்த அட்டையால் மூடப்பட்டிருந்த புட்டியை தன்னுடைய மேஜைக்குள் வைத்தான். மேஜையின் ட்ராயர் கூட நடுங்குவதைப் போல அவனுக்குத் தோன்றியது.
கபூர் வியர்வையில் மூழ்கி விட்டிருந்தான்.
டைப்பிஸ்ட் வசிஷ்டனும் அந்த அறையில்தான் இருந்தான். நீண்ட காலமாக அதே அமைச்சரின் இலாகாவில் அவன் அமைச்சரின் டைப்பிஸ்ட்டாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். பி.ஏ.வின் அறையில்தான் அவனும் இருக்கிறான். முதல் நாள் கபூர் அந்த அறையில் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தபோது, வசிஷ்டன் அவனிடம் கூறினான்: 'கவலைப்பட வேண்டாம், நண்பரே! நான் எல்லாவற்றையும் சொல்லித் தர்றேன். அமைச்சர்கள் வருவார்கள்... போவார்கள். அவர்களுடைய பதவி என்பது நிரந்தரமானது அல்லவே! ஆனால், எங்களுடையது நிரந்தர போஸ்ட். எனக்கு இங்குள்ள செயல் முறைகள் நன்றாக தெரியும். உங்களுக்கு எந்தவொரு சிரமமும் இருக்காது.'
கபூர் ஸாஹப் கவலையுடன் இருப்பதைப் பார்த்ததும், வசிஷ்டன் வெற்றிலை - பாக்கு டப்பாவுடன் அவனுக்கு அருகில் சென்றான். 'வாழ்த்துக்கள், கபூர் ஸாஹப். முதல் பரிசு எல்லாருக்கும் சேர்த்து உள்ளது. கீழே உள்ளவர்களையும் சேர்த்து உபசரிக்க வேண்டும். அப்படியென்றால்தான் செல்வச் செழிப்பு உண்டாகும். உங்களுக்கு மற்றவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.'
கபூர் அந்தச் சமயத்தில் அனுபவங்கள் கொண்டவனாக இல்லை. அதனால் ஒரு புட்டி முழுவதையும் உள்ளே கொண்டு போவது என்பது பொதுவாகவே சிரமமான விஷயமாக இருந்தது. அவன் சொன்னான்: 'சரி... சரி... நிச்சயமாக.'
'ஆகட்டும்.... அப்படியென்றால் இன்று சாயங்காலம் உங்களுடைய வீட்டில் வைத்து புது வருடத்தைக் கொண்டாடுவோம். குப்தாவிடமும் கூறட்டுமா?'
குப்தா இன்னொரு டைப்பிஸ்ட். ஆனால், அவன் வேறொரு அறையில் அமர்ந்திருந்தான். தபாலில் வரக் கூடிய விஷயங்களைப் பெறக் கூடிய க்ளார்க்கும், டெஸ்பாட்ச் செய்யக் கூடிய ஆளும் அந்த அறையில்தான் இருக்கிறார்கள்.
'கட்டாயம்...' கபூர் பெருந்தன்மையுடன் கூறினான்.
அதைத் தொடர்ந்து மாலை வேளையில் வேலை முடிந்ததும், கபூர் ஸாஹப்புடன் வேலை செய்யும் இரண்டு மனிதர்களும் தங்களின் குடும்பத்துடன் கபூரின் வீட்டிற்கு வந்தார்கள்.