இருப்பவர்கள், இறந்தவர்கள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4937
இருப்பவர்கள், இறந்தவர்கள்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
சிப்பாய் கிட்டு கூறித்தான் சந்திரசேரன் இறந்த தகவலே எனக்கு தெரிய வந்தது. என்ன உடல் நலக்கேடு என்ற விஷயம் கிட்டுவிற்குத் தெரியவில்லை. இனி தெரிந்து கொண்டு பிரயோஜனமில்லையே! இறந்த சந்திரசேகரன் திரும்பி வரப் போவதில்லை. எனக்கு வருத்தம் உண்டானது. நேற்றைக்கு முந்தைய நாள் சாயங்காலம் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து குடித்து விட்டு, கடற்கரைக்குச் சென்று வள்ளிக்காட்டிலிருக்கும் கவுசல்யாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். காற்றிற்கு ஈரம் உண்டாகி, கடற்கரை யாருமில்லாமற் போனதும், எழுந்தவாறு சந்திரசேகரன் சொன்னான்:
'வள்ளிக்காட்டிற்கு கொஞ்சம் போய் விட்டு வருவோம். எழுந்திருடா.'
நாங்கள் இரண்டு மைல்கள் நடந்து கவுசல்யாவின் வீட்டை அடைந்தோம். எனக்கு ஒரு உற்சாகமும் உண்டாகவில்லை. அதனால் வாசல் திண்ணையில் போடப்பட்டிருந்த பெஞ்சில் தொண்டையில் திகட்டிக் கொண்டிருந்த கள்ளுடன் நான் அமர்ந்திருந்தேன். சந்திரசேகரன் உள்ளே சென்றான்.
நள்ளிரவு வேளையில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தே திரும்பி வந்தோம்.
அலுவலகத்தில் அமர்ந்திருக்கவோ, வேலை செய்யவோ என்னால் முடியவில்லை. உயர் அதிகாரியான அப்புக்குட்டி மேனனிடம் அனுமதி வாங்கி விட்டு, நான் வெளியேறினேன். வழி முழுவதும் நான் சந்திரசேகரனைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன். அவன் அதிர்ஷ்டமில்லாதவன் என்றும், இல்லை... அதிர்ஷ்டசாலி என்றும் நான் மாறி... மாறி தீர்மானித்தேன். இடையில் அவ்வப்போது அவனைப் பற்றி எதுவுமே சிந்திக்காமல் இருப்பதற்கு நான் முயற்சி செய்து பார்த்தேன். அவனைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்? இறந்தது சந்திரசேகரன். அவனைப் பார்ப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு நான் சென்று கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் அவனைப் பற்றி அல்லாமல் வேறு எதைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பதற்கு என்னால் முடியாதே!
சந்திரசேகரனின் வீட்டை நெருங்கியபோது, மாரார் எதிரில் வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவன் சந்திரசேகரனின் வீட்டிலிருந்துதான் வந்து கொண்டிருக்கிறான் என்பதை ஒரே பார்வையில் நான் புரிந்து கொண்டேன். மாராரின் கண்கள் சிவந்து போய் காணப்பட்டன. அது மட்டுமல்ல- தோளில் இட்டிருந்த துவாலையால் அவன் கண்களைத் துடைப்பதையும் தூரத்திலிருந்தே நான் பார்த்தேன். மாரார் அருகில் வந்தபோது, சந்திரசேகரனுக்கு என்ன உடல் நலக்கேடு என்பதைக் கேட்கலாமா வேண்டாமா என்று நான் தயங்கினேன். சந்திரசேகரனைப் பற்றி நான் ஏதாவது கூறினால், மாராரை அது மேலும் கவலைப்படச் செய்யும். அதனால் கேட்க வேண்டாம் என்று நான் நினைத்தேன்.
'தலை விதி அழைச்சால், போகாமல் இருக்க முடியுமா?'
சந்திரசேகரனைப் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை. மாரார் அவனாகவே என்னைப் பார்த்து கூறினான்.
'உருக்கைப் போல உறுதியாக இருந்தான். உடல் நலக் கேடு வந்து நான்கு நாட்கள் படுத்துக் கிடந்து, இறந்திருந்தால் பரவாயில்லை. அந்த வயதான நாணு நாயர் இதை எப்படி தாங்கிக் கொள்வார்? கடவுளே...'
மாரார் நடந்து செல்லும்போது, மீண்டும் துவாலையை எடுத்து கண்களை ஒற்றுவதை நான் பார்த்தேன். எது எப்படி இருந்தாலும், மாராரை வழியில் பார்த்தது நல்லதாகப் போய் விட்டது. சந்திரசேகரனுக்கு உடல் நலக் கேடு எதுவும் இல்லை என்ற தகவலையாவது என்னால் தெரிந்து கொள்ள முடிந்ததே! அவன் மாரடைப்பு காரணமாக இறந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
சந்திரசேகரனின் வீட்டிற்கு முன்னால் போய் நின்றபோது, எனக்கு தளர்ச்சி உண்டானது. செருப்பிற்குள் இருந்த கால்களில் பாதங்கள் வியர்த்தன. மனதைக் கட்டுப்படுத்த முயற்சித்தவாறு நான் வாசலுக்குச் சென்றேன். வெளி வாசலுக்கு அருகில் நாவிதர்கள் அமர்ந்திருந்தார்கள். பட்டும், தேங்காயும் அவர்களுக்குத்தானே! அவர்களைப் பார்த்ததும், என்ன காரணத்தாலோ என்னுடைய தளர்ச்சி அதிகமாகி, முகம் வியர்த்து, வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். நான் வேட்டியின் நுனியைக் கொண்டு முகத்தைத் துடைத்து, சட்டையின் பித்தானைக் கழற்றி, மார்பில் ஊதினேன்.
'மகனே...'
யாரோ என்னுடைய தோளில் கையை வைத்து அழைத்தார்கள். நான் தலையை உயர்த்தி பார்த்தேன். எனக்கும் சந்திரசேகரனுக்கும் பாடம் சொல்லித் தந்த ராமன் மாஸ்டர். மாஸ்டர் சட்டை அணிந்திருக்கவில்லை. உரோமங்கள் வளர்ந்திருந்த நெஞ்சுப் பகுதியில் கழுத்தின் வழியாக ஒரு துண்டை அணிந்திருந்தார். வெப்பம் எனக்கு மட்டுமே தோன்றக் கூடிய ஒன்றல்ல என்பதையும், இன்று நல்ல வெப்பம் நிறைந்த நாளே என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
'கவலைப்பட்டு என்ன பயன்? எல்லோருடைய விதியும் இதுதான், மகனே!'
நான் எதுவுமே பேசாமல், தலையைக் குனிந்தவாறு இருந்தேன்.
'நண்பர்களாக இருந்தீர்கள்.'
'ஒன்றாகச் சேர்ந்து விளையாடி சிரித்து, வளர்ந்தீர்கள்.'
'கவலை இல்லாமல் இருக்குமா?'
ஒவ்வொருவரும் என்னையும் சந்திரசேகரனையும் பற்றி கூறுவதை நான் கேட்டேன். அவர்களுடைய அந்த அபிப்ராயங்கள் என்னை மேலும் கவலைக்குள்ளாக்கவே உதவின. அவர்கள் கொஞ்சம் பேசாமல் இருக்கக் கூடாதா என்று நான் மனதிற்குள் விரும்பினேன்.
மாஸ்டர் பெஞ்சின் மீது எனக்கு அருகில் அமர்ந்திருந்தார். நான் தலையை உயர்த்தி மாஸ்டரின் முகத்தைப் பார்த்தேன். மாஸ்டரின் கண்களும் முகமும் மிகவும் அமைதியாக இருந்தன. கவலை இருந்தாலும், அதை அடக்கிக் கொள்வதற்கு அவரால் முடியும். எதையெதையெல்லாமோ பார்த்து, எதையெதையெல்லாமோ கேட்ட மனிதர் அவர். மாஸ்டரால் அது முடியும். என்னுடைய நிலை அதுவல்ல, நானும் சந்திரசேகரனும் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒன்றாகச் சேர்ந்துதான் நாங்கள் பள்ளிக் கூடத்திற்குச் சென்றோம். வயதான பிறகும் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம். மாஸ்டரின் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியும் எனக்கு இல்லை.