ராதா - ராதா மட்டும் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5119
தந்தை வாசற்படியின் அருகில் சென்று நின்றவாறு தலையை உள்ளே நீட்டி, தாயை அழைத்தார். தாய் உள்ளே எங்கேயோ இருந்து கொண்டு அந்த அழைப்பைக் கேட்டாள். ஒன்றிரண்டு நிமிடங்கள் கடந்ததும், குளித்து முடித்து ஆடைகள் மாற்றிக் கொண்டு, நெற்றியில் சந்தனத்துடன் தாய் வந்தாள். தந்தை, தாயின் அருகில் சென்று நின்று கொண்டு குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு சொன்னார்:
'யாரோ ஒரு பொண்ணு... கேட்டால், பேச மாட்டேங்கிறா... என்ன ஆச்சோ, தெரியல...'
'எங்கேயிருந்துன்னு சொல்லலியா?'
'பேச வேண்டாமா? எதுவுமே பேசாமல் இருந்தால், எப்படி தெரிந்து கொள்வது?'
தாய் அவளையே சற்று பார்த்துக் கொண்டே சொன்னாள்:
'நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுன்னு தோணுது. பாவம்!'
'மகளே! இதோ... இங்கே உட்காரு.'
தந்தை நாற்காலியைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னார். அவள் அமராமல் ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள்.
தாய் அவளின் அருகில் வந்து, தோளில் கையை வைத்துக் கொண்டே சொன்னாள்:
'உட்காரு மகளே.'
தாய் அவளைப் பிடித்து நாற்காலியில் அமர வைத்தாள். புத்தகங்களைப் பிடித்திருந்த அவளுடைய கை நடுங்கிக் கொண்டிருந்தது.
'மகளே, உன் பெயர் என்ன? எந்த ஊர்?'
'அம்மா...'
'என்ன பிரச்சினைன்னு சொல்லு... எங்களால் முடியக் கூடிய உதவியை நாங்கள் செய்வோம். இல்லையா மாதவி?'
தந்தை தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவளிடம் சொன்னார். அவளுடைய கையில் வைத்திருந்த புத்தகங்கள் நழுவி கீழே விழுந்தன. அவளுடைய கால்களைச் சுற்றி தரையில் அவை சிதறிக் கிடந்தன.
'அப்பா, நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு புரியல...'
'அப்பாவா?'
ஆச்சரியத்துடன் தந்தை அவளின் முகத்தையே பார்த்தார்.
'நான் உன்னுடைய அப்பாவா?'
'நீங்க ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? என்னால முடியல...'
'மகளே, உன்னை யார் கஷ்டப்படுத்துறது?'
தாயின் குரலில் இரக்கம் இருந்தது.
'அப்பா... அம்மா... உங்களுக்கு என்னைப் பார்த்து தெரியலையா? உங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு? முடியல... என்னால முடியல...'
அவளுடைய கண்கள் நிறைந்தன. தந்தையும் தாயும் எதுவும் புரியாமல் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அவள் நாற்காலியை விட்டு எழுந்து உள்ளே நடக்க முயற்சித்தாள். மேலே இருக்கும் தன்னுடைய அறைக்குச் சென்று கட்டிலில் கவிழ்ந்து படுத்து அழ வேண்டும் போல அவளுக்கு இருந்தது. அவள் உள்ளே கால் வைத்தவுடன், தாய் முன்னால் வந்து தடுத்தாள்.
'நீ எங்கே போறே?'
'என் அறைக்கு... நான் படுக்கணும்... எனக்கு முடியல...'
'உன் அறையா?'
'தலைவலி இருப்பதைப் போல தோணுது.'
'புலி வாலைப் பிடிச்ச கதையா இருக்கே!'
தந்தை இரண்டு கைகளையும் கொண்டு பிசைந்தார்.
'உங்களுக்குத்தான் தலையில் கோளாறு ஆயிடுச்சு. அப்பா, அம்மா... உங்க சொந்த மகளையே உங்களுக்கு அடையாளம் தெரியாமப் போச்சு.'
அவளுடைய கண்ணீரால் முகம் சிவந்தது.
'நீ எங்களுடைய மகள் அல்ல.'
தேம்பி அழுது கொண்டே அவள் சொன்னாள்:
'நான்... ராதா. என்னைப் பார்த்து உங்களுக்குத் தெரியலையா?'
'நீ ராதா இல்லை.'
'நான் ராதாதான்... ராதாதான்...'
'இல்லை... இல்லை....'
'கடந்த பதினெட்டு வருடங்களும்... அம்மா, நீங்கதானே எனக்கு சோறு பரிமாறியது? அம்மா, இப்படி சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது?'
தாய் எதுவும் பேசாமல் கண்களில் நிறைய இரக்கத்தையும் துக்கத்தையும் வைத்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
'அப்பாதானே என்னைப் படிக்க வைத்தவர்? அப்பாதானே தேர்வு காலத்தின்போது தூங்காமலிருந்து எனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தவர்? அப்பாதானே போன வாரம் என்னை திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றவர்? அப்பா எப்படி மறக்கிறார்?'
தந்தை அவளுடைய தோளில் கையை வைத்தவாறு, புன்னகைத்துக் கொண்டே சொன்னார்:
'சாமர்த்தியசாலி. எந்த அளவிற்கு அருமையாக நீ கற்பனைக் கதைகள் உண்டாக்கி கூறுகிறாய்!'
'கற்பனை கதை..?'
கண்ணில் நிறைந்திருந்த நீரின் காரணமாக தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த தந்தையையும் தாயையும் அவளால் பார்க்க முடியவில்லை.
தந்தை திரும்பவும் நாற்காலியில் போய் உட்கார்ந்து, கண்ணாடியை எடுத்து மூக்கின்மேல் வைத்தார்.
'எங்கேயிருந்து வருகிறாய் என்பதையும், என்ன வேண்டும் என்பதையும் சொல்லு. எங்களால் முடியக் கூடிய உதவியைச் செய்யிறோம். விளையாட்டை நிறுத்தி விட்டு, விஷயத்தைச் சொல்லு...'
'சாயங்காலம் ஆயிடுச்சுல்ல...! இன்னைக்கு இங்கு தங்கிக் கொள். நாளைக்கு எங்கே போகணுமோ, போய்க் கொள்.'
'நான் எங்கே போவது? இதுதானே என் வீடு?'
'இது உன் வீடு இல்லை...'
'மாதவி, நீ வாதம் செய்ய வேண்டாம். புத்தி சீராக இல்லாததால் சொல்லுறேன்.'
'இன்று இங்கே தங்குவதற்கு விருப்பமில்லையென்றால், இப்போதே வெளியேறலாம். இருட்டுவதற்கு முன்பு எங்கு போகணுமோ, அங்கே போய்க் கொள்.'
தாய் சொன்னாள். தந்தை மீண்டும் பத்திரிகையை விரித்து வாசித்தார்.
'அம்மா, நான் எங்கே போவேன்? அம்மா, அப்பா... உங்களைத் தவிர, எனக்கு வேறு யார் இருக்காங்க?'
அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. துக்கத்தால் அவளுடைய தொண்டை அடைத்தது. அவள் சிறிது நேரம் வாசலில் நின்றவாறு அழுதாள்.
தந்தை பத்திரிகையிலிருந்து கண்களை எடுக்கவே இல்லை. தாய் எதுவும் பேசாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நேரம் மங்கலாகிக் கொண்டு வர வர தாயின் முகத்தில் அமைதியற்ற தன்மை பரவிக் கொண்டிருந்தது. அதைப் புரிந்து கொண்ட அவள் உள்ளங்கையால் கண்களைத் துடைத்தாள். நடுங்கிக் கொண்டிருக்கும் கால்களுடன் மேட்டை விட்டு இறங்கி, தெருவிற்கு வந்து நடந்தாள். பாதையின் இரு பக்கங்களிலும் இருந்த வீடுகளில் குத்து விளக்குகள் எரிய வைக்கப்பட்டிருந்தன. கடவுளின் நாமத்தைக் கூறிக் கொண்டிருந்த சிறுமிகள் அறிமுகமற்ற வெளிப்பாட்டுடன் அவளைப் பார்த்தார்கள். கூடுகளுக்கு திரும்பி பறந்து கொண்டிருந்த பறவைகள் அறிமுகமில்லாத ஒருத்தியைப் பார்த்து, கீழ் நோக்கி கண்களைச் செலுத்தின. கடலிலிருந்து வீசிக் கொண்டிருந்த காற்றில் மரங்கள் ஆடின. கடல் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. வானத்திலும் பூமியிலும் இருள் பரவி, நிறைந்தது. பறவைகளும் மரங்களும் கடலும் காற்றும் வானமும் பூமியும் ஒரே குரலில் பாடின:
'நீ ராதா இல்லை.... உன்னை எங்களுக்கு தெரியாது.'