ராதா - ராதா மட்டும்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5126
ராதா - ராதா மட்டும்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
ராதா கல்லூரியை விட்டு, வீட்டை நோக்கி நடக்கும்போது பேருந்து நிறுத்தத்தில் சுரேஷ் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானது. நேற்று சாயங்காலம் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கடற்கரையில், உப்பின் வாசனை நிறைந்த காற்றை சுவாசித்தவாறு, சிப்பிகள் சிதறிக் கிடக்கும் மணல் வழியாக மேல் நோக்கி ஒரு மணி நேரம் நடந்தார்கள்.
இப்போது மீண்டும் சந்திப்போம் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அவள் சாலையைக் கடந்து சென்று சுரேஷை நோக்கி நடந்தாள். அவன் ஒரு சிகரெட்டைப் பிடித்தவாறு தூரத்தில் எங்கோ பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். தன்னை சிறிதும் எதிர்பாராமல் சந்திக்க நேரும்போது, அவன் எந்த அளவிற்கு சந்தோஷப்படுவான் என்பதை நினைத்து அவள் மனதிற்குள் மகிழ்ச்சியடைந்தாள். அவள் நடந்து சென்று அவனுக்கு முன்பு போய் நின்ற பிறகும், அவன் தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டேயிருந்தான். அவன் அவளைப் பார்க்கவே இல்லை. அவள் அவனுக்கு அருகில் போய் நின்றாள். அவர்களுடைய தோள்கள் ஒன்றோடொன்று தொட்டன. அவன் தன் வாயில் நிறைந்து வந்த புகையை வெளியே ஊதி விட்டுக் கொண்டே அவளுடைய முகத்தைப் பார்த்தான். பிறகு சிறிது தள்ளி விலகி நின்று கொண்டு மீண்டும் சிகரெட்டை இழுக்க ஆரம்பித்தான். அவளைப் பார்த்தபோது அவனுடைய முகத்தில் ஆச்சரியமோ சந்தோஷமோ எதுவும் உண்டாகவில்லை.
'சுரேஷ்... '
அவன் முகத்தைத் திருப்பி பார்த்தான்.
'சுரேஷ், நீங்க எங்கே போறீங்க? '
அவன் புரியாததைப் போல அவளுடைய முகத்தையே பார்த்தான். அவள் தன் மார்புடன் சேர்த்து பிடித்துக் கொண்டிருந்த புத்தகங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு மாத இதழை எடுத்தவாறு கூறினாள்: 'இதோ... பாருங்க... 'பிங்க்' இதில் இருக்கு. ' அவள் மாத இதழைத் திறந்து சாமுவேல் பெக்கட்டின் கவிதை பிரசுரமாகியிருந்த பக்கத்தைத் திறந்து, நீட்டி காட்டினாள். அவன் அவளுடைய முகத்தையும் மாத இதழையும் மாறி... மாறி பார்த்தான்.
'சுரேஷ். நீங்க முதலில் படிங்க... பிறகு நான் வாசிக்கிறேன்.'
அவள் மாத இதழை அவனை நோக்கி நீட்டிக் கொண்டு நின்றாள். அவன் எரிந்து முடிந்த சிகரெட்டை தரையில் போட்டு, செருப்பைக் கொண்டு நசுக்கி அணைத்துக் கொண்டே கேட்டான்: 'நீ யாரு?'
அதைக் கேட்டதும், அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். பேருந்து நிறுத்தம் என்பதையும், நான்கு பக்கங்களிலும் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவள் மறந்து விட்டாள். மாத இதழை நீட்டி வைத்துக் கொண்டே அவள் சொன்னாள்:
'இப்போதே இதை கொண்டு போங்க... சனிக் கிழமை வீட்டிற்கு வர்றப்போ, கொண்டு வந்தால் போதும்.'
'சனிக் கிழமையா? யாருடைய வீட்டிற்கு...?'
'சனிக் கிழமை இரவு வீட்டில்தானே உணவு? அதையும் மறந்துட்டீங்களா?'
'நீ சொல்றது எதுவுமே எனக்கு புரியல...'
'தமாஷா பேசுறதை நிறுத்துங்க...'
அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை, எந்தச் சமயத்திலும் அணையாத புன்னகை மறைந்தது. அவன் அவளை நோக்கி திரும்பி, மிடுக்கான குரலில் சொன்னான்:
'நீ என்னிடம் விளையாடுகிறாயா? உன்னை நான் இதற்கு முன்பு பார்த்தது கூட இல்லை.'
சுரேஷ் கூறியது எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. அவனுடைய நடவடிக்கைகள் அவளை குழப்பமடையச் செய்தன.
'நான் விளையாடவில்லை. சுரேஷ், நீங்கதான்...'
அவளுடைய முகம் கனமாக ஆனது.
'உனக்கு ஆள் மாறாட்டம் உண்டாகியிருக்கிறது. நீ நினைத்துக் கொண்டிருக்கும் ஆள் நான் இல்லை.'
'சுரேஷ்... நீங்க சுரேஷ்தானே? எனக்கு பார்த்தால் தெரியாதா?'
'நான் சுரேஷ்தான். ஆனால், உன்னை எனக்கு தெரியாது.'
'சுரேஷ், உங்களுக்கு என்னைத் தெரியாதா? ராதாவைத் தெரியாதா?'
'தெரியாது...'
அவனுடைய குரல் கனமாக இருந்தது. அவன் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து, புகையை ஊதி விட்டான்.
'சுரேஷ், முந்தா நாள்தானே நீங்கள் என்னைத் தேடி கல்லூரிக்கு வந்தீங்க? நேற்றுதானே நாம் சேர்ந்து கடற்கரைக்குப் போனோம்?'
'நான் யாரையும் பார்ப்பதற்கு கல்லூரிக்குப் போகவில்லை. நான் யாருடனும் சேர்ந்து கடற்கரைக்குப் போகவில்லை.'
அவளுடைய முகம் வெளிறிப் போனது.
'தயவு செய்து போ. நீ ஆட்கள் பார்க்குறதைப் பார்க்கலையா?'
அவன் அவளுக்கு அருகிலிருந்து சற்று தூரத்தில் விலகி நின்றான். அப்போதுதான் பேருந்து வந்தது. சுரேஷ் சிகரெட்டைக் கீழே போட்டு விட்டு, பேருந்தில் ஏறி அமர்ந்தான். பேருந்து ஆட்கள் நிறைந்திருந்த சாலையின் வழியாக ஓடி, வளைவில் திரும்பி மறைந்தது. மாத இதழை திரும்பவும் புத்தகங்களுடன் சேர்த்து வைத்தவாறு, குனிந்த தலையுடன் அவள் நடந்தாள். எப்படியாவது வீட்டிற்குப் போய் சேர்ந்தால் போதும் என்று அவளுக்குத் தோன்றியது.
பிரதான சாலையைக் கடந்து, வீட்டிற்கு செம்மண் நிறைந்த பாதையில் இறங்கி அவள் நடந்தாள். பாதையின் வழியாக சிறிது தூரம் தாண்டியதும், அவள் பாஸ்கரனின் தேநீர் கடைக்கு முன்னால் வந்தாள். தேநீர் அருந்திக் கொண்டிருந்த பாஸ்கரன் முகத்தை உயர்த்தி அவளைப் பார்த்தார். தேநீருக்காக காத்திருந்த கண்ணன் மாஸ்டரிடம் பாஸ்கரன் கேட்டார்:
'அங்கே போய்க் கொண்டிருக்கும் இளம் பெண் யாரு?'
மாஸ்டர் கையை விரித்தார்.
பாஸ்கரனின் கடைக்கு அடுத்து இருக்கும் வளைவில் திரும்பினால், அவளுடைய வீடு வந்து விடும். வீட்டின் வாசலில் அலுவலகத்திலிருந்து வந்திருந்த அவளுடைய தந்தை காலை நாளிதழுடன் எப்போதும் போல சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். அவள் முற்றத்தில் கால் வைத்தவுடன், அவளுடைய தந்தை தலையை உயர்த்தி, கண்ணாடியைச் சரி பண்ணி விட்டு பார்த்தார். அவள் குனிந்த தலையுடன் வாசல் பகுதியில் கால் வைத்தாள்.
'யாரு?'
அவளுடைய தந்தை கண்ணாடியைக் கையில் எடுத்தவாறு கேட்டார்.
'தெரியலையே...!'
அதைக் கேட்டதும் அவளுடைய நெஞ்சு அடித்துக் கொண்டது. முன்னால் வைத்த கால் அசையாமல் இருந்தது.
'எங்கேயிருந்து? உட்காரு... மாதவி!'
'அப்பா!'
அவளுடைய குரல் நடுங்கியது.
'அப்பாவா?'
நாற்காலியை விட்டு எழுந்து, அவிழ்ந்த வேட்டியைச் சரி பண்ணியவாறு தந்தை அவளை நோக்கி நடந்து வந்தார்.
'மகளே, நீ யாரு? எங்கேயிருந்து வர்றே?'
அவள் எதுவும் கூற முடியாமல் பதைபதைப்புடன் தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்...
'மாதவி... மாதவி...'