முதல் காதல் கடிதம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7006
ஒருநாள் இரவு நான் தேவயானியை கனவு கண்டேன். பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களுடனும் முத்தத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் உதடுகளுடனும்...”
“ஓஹோ...”
“அபாரம்! அபாரம்!”
“சுவாரசியமாக கூறிக்கொண்டிருப்பதற்கு இடையில் பேசாதே. சொல்லட்டும்!”
“சரி... ஒரு விஷயம். காதலிப்பதற்கு சொந்த ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏன் கண்டுபிடிக்கவில்லை?”
“டேய், முட்டாள்! அந்த அளவுக்கு சிந்திக்கக்கூடிய அறிவு இருந்திருந்தால் இப்படியொரு காரியம் நடந்திருக்குமா?”
“இன்னொரு வகையில் பார்த்தால்... உண்மையான காதலுக்கு ஜாதி என்ன? மதம் என்ன?”
“கதையைக் கேட்போம்...”
“தேவயானிக்கு நான் காதல் கடிதம் எழுதினேன். அதை எழுதி முடிப்பதற்கு ஏழு நாட்கள் ஆயின. திருத்தி எழுதுவதும், எழுதியதையே திரும்ப எழுதுவதுமாக இருந்ததேன். என்ன எழுதினேன் என்பதைப் பற்றி தெளிவாக ஞாபகத்தில் இல்லை. இதயத்தில் தங்கி நின்றுகொண்டிருந்த எல்லாவற்றையும் தாளில் எழுதினேன் என்பது மட்டும் தெரிகிறது. அவளுடைய வீட்டு முகவரிக்கு அதை அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு பதில் கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். என்ன ஒரு ஆர்வம்! பதில கடிதத்தில் அவள் என்ன எழுதுவாள் என்பதைப் பற்றி மனதில் கற்பனை செய்து பார்த்தேன். கடந்து கொண்டிருந்த மணிகளை எண்ணிக்கொண்டு நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருந்தேன். இறுதியில்...”
“அது வந்து சேர்ந்தது. அப்படித்தானே?”
“வந்தது. ஆனால், பதில கடிதம் இல்லை. நான் அனுப்பி வைத்திருந்த காதல் கடிதமேதான்.. அத்துடன் என் தந்தையின் ஒரு ஃபார்வர்டிங் லெட்டரும். அதிலிருந்த சில வரிகள் ஞாபகத்தில் இருக்கின்றன. ‘பத்து... பதினெட்டு வயதுவரை உன்னை மிகவும் கவனம் செலுத்தி வளர்த்தது இதற்குத்தானடா? உன்னால் மனிதர்களின் முகத்தைப் பார்த்து என்னால் நடக்க முடியாமல் போய்விட்டதேடா...”
“ஹோய்... ஹோய்...”
“ஹஹ... ஹ...”
“சிரிக்காதீர்கள் மனிதர்களே!”
“சாமுவேல் சார், என்ன நடந்தது?”
“முதல் விடுமுறைக்குச் சென்றபோதுதான் அது தெரிந்தது. பேருந்து நிலையத்திலேயே ஒரு நண்பன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறி, கிண்டல் பண்ணினான். ஊர் முழுவதும் அந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. நடந்தது இதுதான். அஞ்சல் பணியாள் கடிதத்தை எடுத்துச் சென்றபோது, தேவயானி வீட்டில் இல்லை. கடிதத்தை அவளுடைய தாயின் கையில் கொடுத்திருக்கிறார். அது தேவயானிக்கு வந்திருப்பது என்று சொன்னதன் மீது அவளுடைய தாய்க்கு நம்பிக்கை உண்டாகவில்லை. அந்த வழியாக நடந்து சென்றவர்களில் யாரையோ அழைத்திருக்கிறாள். அதற்குப் பிறகு பிரிக்காத அந்தக் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதிருக்கிறாள்- ‘தெய்வங்களே, தேவர்களே... என் பொண்ணுக்கு இப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறதே, தங்கமான தேவர்களே!”
தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் அங்குவந்து குழுமிவிட்டார்கள். யாரோ மரணமடைந்து விட்டதைப்போல அந்த அன்னை நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதிருக்கிறாள்.
‘அந்த தடிமாட்டுப் பயல் இப்படியொரு காரியத்தைச் செய்தான்? இனி என் பொண்ணை கல்யாணம் பண்ணுறதுக்கு யார் வருவாங்க? என் தேவர்களே?’
அங்கு கூடி நின்றிருந்தவர்களுக்கு நடுவிலிருந்து தேவயானி வந்தாள். விவரம் என்னவென்று தெரிந்ததும் அவள் சொன்னாள் : ‘யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு வந்திருக்கும் கடிதம் தானே? அம்மா, இங்கே தா.’
அந்தக் குரலை யாரும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவளுடைய ரகசிய காதலன் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? என் தந்தையையும் சேர்த்து, அந்த ஊரின் முக்கியமான மனிதர்கள் அங்குவந்து சேர்ந்தார்கள். அவர்கள் எல்லாரும் முன்னால் இருக்க கடிதம் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசித்தபோது, என் தந்தை அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். அன்று அப்பா எதுவுமே சாப்பிடவில்லை என்று என் தாய் என்னிடம் சொன்னாள்.”
“அதற்குப் பிறகு- விடுமுறையின்போது தேவயானியைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?”
“தேவயானியைப் பார்ப்பதற்கென்று இல்லை. வீட்டைவிட்டு வெளியே வந்து நடப்பதற்குக்கூட எனக்கு வெட்கமாக இருந்தது.”
“பாவம்.”
“அதற்குப் பிறகு அவளைப் பார்த்தது... பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு கடந்த விடுமுறைக்குச் சென்ற போதுதான். இதற்கிடையில் பள்ளி இறுதி வகுப்பும் முடித்து ட்ரெய்னிங்கும் முடித்து, அவள் ஒரு ஆசிரியையாக ஆகிவிட்டாள் என்ற விஷயத்தை நான் கேள்விப்பட்டிருந்தேன். நீண்டகாலம் எங்கோ தூரத்திலிருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் தேவயானி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பட்டாளத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே தேவயானியின் தாய் மரணமடைந்துவிட்டாள் என்ற தகவலையும் என்னால் தெரிந்துöõள்ள முடிந்தது. விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த மறுநாள் பிற்பகல் வேளையில் நான் சற்று தூங்கி எழுந்தபோது, பக்கத்து அறையில் என்னுடைய குழந்தைகளுக்கு யாரோ பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் சென்று பார்த்தேன். ஆள் யார் என்று அடையாளம் தெரியவில்லை. அவள் கேட்டாள்: ‘யாரென்று தெரியவில்லை... அப்படித்தானே?’
‘அப்போது என் குழந்தைகளின் தாய் உள்ளே வந்து சொன்னாள் : ‘அய்யோ... தேவயானி டீச்சரை தெரியலையா? நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து படித்தீர்கள் என்று டீச்சர் எப்போதும் சொல்லுவாங்களே?”
நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். தேவயானி! ஆனால், நான் கனவு கண்டுகொண்டிருந்த தேவயானி அல்ல அது. அவள் மிகவும் மெலிந்துபோய் காணப்பபட்டாள். நெற்றி முழுக்க கோடுகள் தெரிந்தன. உயிர்ப்பில்லாத கண்களைச் சுற்றிலும் கருப்பு அடையாளம் பரவிவிட்டிருந்தது. வெள்ளை நிற முண்டும், விலை குறைந்த துணியாலான ரவிக்கையையும் கருத்த கரை போட்ட மேற்துண்டையும் அவள் அணிந்திருந்தாள்.
தேவயானி அப்போதும் திருமணமாகாதவளாகவே இருந்தாள். தன்னுடைய மூன்று தங்கைகளையும் அவள்தான் வளர்த்திருக்கிறாள்.
தங்கைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறாள். மிகப்பெரிய ஒரு தியாகச் செயலை ஏற்றுக்கொண்டதைப் போல, நிறைவேறாமல் போன ஏதோவொன்றை எதிர் பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதைப்போல அவள் திருமணமாகாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
குழந்தைகளின தாய் சமையலறைக்குச் சென்றிருந்த போது, நான் கேட்டேன். ‘சரி... தேவயானி, இதுவரை திருமணமே வேண்டாமென்று நீ தீர்மானித்ததற்குக் காரணம்...?’
அந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அந்த முகத்தின் உணர்ச்சிகளே காட்டின. சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள். ‘அந்த விஷயத்தை மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்.’
அப்போது அவளுடைய கண்களிலிருந்து இரண்டு முத்து மணிகள் விழுந்து சிதறின. வாய் திறந்து பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புன்னகைக்க முயற்சித்துக்கொண்டே அவள், மேற்துண்டின் துணியை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.”
சாமுவேல் கதையைக் கூறி முடித்தபோது, நண்பர்களில் யாரும் சிரிக்கவில்லை. கூப்பாடு போடவில்லை. அவர்கள் அனைவரும் சிந்தனையில் மூழ்கியிருந்தார்கள்.
வெயிலுக்கு நல்ல சூடு உண்டாகிவிட்டிருந்தது. உறைந்து போயிருந்த பனியின் மேற்பகுதி ஈரமாக இருந்தது.
‘பாரக்’கின் மேற்கூரை சூடாக ஆனபோது, பனிக்கட்டிகள் நகர்ந்து கீழே விழ ஆரம்பித்தன.
சாமுவேல்தான் நிலவிக்கொண்டிருந்த அமைதியைக் கலைத்தார். அவர் கேட்டார்: “சரி.. இனி என்ன ப்ரோக்ராம்?”
அங்கு அமர்ந்திருந்தவர்களில் யாரோ சொன்னார்கள். “நான் அந்த தேவயானியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.”