முதல் காதல் கடிதம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7006
“தாசன்...”
“என்ன?”
“காதல் கடிதமா?”
“இல்லை... இல்லை...”
“இங்க பாரு... முகத்துக்கு நேராக பொய் சொல்லக்கூடாது...”
சிவதாசன் முற்றிலும் பதறிப்போய்விட்டான்.
வெளிறிப்போன முகத்தில் ஒரு குற்றவாளியின் பதைபதைப்பு நிழலாடிக் கொண்டிருந்தது. அவனைத் தட்டிக்கொடுத்தவாறு சாமுவேல் கூறினார். “கவலைப் படாதே தாசன்... திருமதியின் பெயர் என்ன?”
சிவதாசன் முகத்தை குனிந்துகொண்டு நின்றிருந்தான். அப்போது கூப்பாடுகளம் அடக்க முடியாத சிரிப்புகளும் எழுந்தன. “இருந்தாலும் இவ்வளவு சின்ன வயதிலேயே நீ இந்த பிஸினஸை ஆரம்பிச்சிட்டியே, மகனே!”
“சின்ன திருட்டுப் பயலே... இதையும் வைத்துக் கொண்டா நடந்து திரிகிறாய்.”
“கடிதத்தைத் தா... நான் சத்தம் போட்டு வாசிக்கிறேன்.”
‘என் இதயமே!’
கிண்டல் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வந்தபோது, சிவதாசன் அறைக்குள் சென்றுவிட்டான்.
சாமுவேல் சொன்னார். “அந்தப் பையனைக் குறைச் சொல்லி பிரயோஜனமில்லை. அப்படிப்பட்ட வயது...”
அவர் தொடர்ந்து சொன்னார்: “இந்த வயதில் நானும் ஒரு காதல் கடிதத்தை எழுதி அனுப்பியிருக்கிறேன்.”
“அப்படியா?”
“பிறகு?”
“அது ஒரு கதை...”
“கேட்கலாமா?”
“வர்க்கி வந்தாச்சுல்ல! சீட்டு விøளாயட வேண்டாமா?”
“சாமுவேல் சார், உங்க கதையைக் கேட்டபிறகுதான் மீதி எல்லாமே...”
ஒரு புன்சிரிப்புடன், கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சாமுவேல் சிந்தனையில் மூழ்கி நின்று கொண்டிருந்தார். கண்களில் பிரகாசம் பரவிவிட்டிருந்தது.
“பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் அது அப்போது எனக்கு மீசை கூட அரும்பியிருக்கவில்லை. சிவதாசனைப் போல அப்போது நானும் ஒரு வெட்கப்படக் கூடியவனாக இருந்ததேன். இதற்கிடையில் நான் கேட்கிறேன்- நான் இந்த கதையைக் கூறினால், நீங்கள் என்னை கேலி செய்வீர்களா?”
“கேலி செய்வதா?”
“நிச்சயமாக செய்யமாட்டோம்..”
“நடந்த சம்பவங்களை அதேபோல சொல்லணும். புரியுதா...”
“பள்ளி இறுதித் தேர்வின் முடிவுகள் தெரிந்த அன்று நான் பட்டாளத்திற்கு வந்து சேர்ந்தேன். பத்திரிகையில் எனது பள்ளித் தேர்வெண் இல்லை என்பது தெரிந்ததும், நேராக ஆட்கள் எடுக்கப்படும் ரிக்ரூட்டிங் அலுவலகத்திற்குச் சென்றேன். வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. ‘எந்த பிரிவில் சேர வேண்டும்?’ என்று ரிக்ரூட்டிங் அதிகாரி கேட்டபோது புரியாமல் விழித்தபடி நின்றிருந்தேன். பட்டாளம் என்ற ஒரு பிரிவைத் தவிர, அந்த காலத்தில் நமக்கு வேறென்ன தெரியும்?”
“அது உண்மைதான்...”
“அவர்கள், ‘உன்னை ஒரு க்ளார்க்காக வேலைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஜால்னாவில் உள்ள டிப்போவிற்குச் சென்று சேர்ந்து கொள்’ என்று கூறியபோது சந்தோஷம் தோன்றியது. க்ளார்க் கூறியபோது சந்தோஷம் தோன்றியது. க்ளார்க் வேலை ஆயிற்றே. அலுவலகத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் போதும். குண்டுகள் விழும் இடத்திற்கோ போகவேண்டிய தேவையில்லை. நண்பர்கள் இருந்தால், ஜால்னா வரை எந்தவித பிரச்சினையுமில்லாமல் போய்ச் சேர்ந்துவிட்டேன். ஆனால் கேம்பிற்குள் சென்றவுடன் அதிர்ச்சியடைந்து விட்டேன்.
“ஜால்னா எங்கே இருக்கிறது?”
“தெரியாதா? ஹைதராபாத்தில்...”
“செக்கந்த்ராபாத் வழியாகப் போகணும்...”
“ஆமா...”
“சரி... காதல் கடிதம் பற்றிய விஷயத்தைக் கூறவே இல்லையே!”
“அதைப் பற்றித்தான் கூறப்போகிறேன். ட்ரெயினிங்கின் முதல் நாளன்று நான் அழுதுவிட்டேன். ஆஜானுபாகுவான ராணுவ அதிகாரி இருந்தான். கையிலிருந்த ரைஃபில் கீழே விழுந்ததற்கு, பரேட் மைதானத்தை நான்கு முறை என்னை சுற்றி வரச் செய்தான். ஓடி முடித்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியபடி நான் இருந்தபோது அவன் கேட்டான்: ‘தும் சாவல்கானே வாலா ஹை?’ (நீ சோறு சாப்பிடக் கூடியவனா).
யாரோ அதன் அர்த்தத்தைக் கூறியபோது, நான் பதில் சொன்னேன்: ‘ஆமாம்...’
‘அச்சா... தோ அபீ ரொட்டி கானா... ஸீக்லோ’. (அப்படியென்றால் ரொட்டி சாப்பிடக்கற்றுக்கொள்)
இரவில் கட்டிலில் படுத்துக்கொண்டு நான் அழுதேன். இது என்னுடைய அனுபவமாக மட்டும் இருக்கவில்லை. உங்கள் ஒவ்வொருவரிடமும் இப்படிப்பட்ட கதைகள் கூறுவதற்கு இருக்கும். அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, நான் ஒரு பட்டாளக்காரன் என்ற உண்மையை காலப்போக்கில் உணர ஆரம்பித்தேன். பல மணி நேரங்கள் சிறிதும் சோர்வடையாமல் ‘பி.டி.’யும் பரேடும் செய்வதற்கான தெம்பு கிடைத்தது. ‘பேஸ்புக்’கில் கையொப்பமிட்டு சம்பளத்தை எண்ணி வாங்கியபோது, பெருமையாக இருந்தது. நான் ஒரு மனிதனாக ஆகியிருக்கிறேன்! மீசை கறுப்பாக ஆகாமலிருந்தாலும் வாரத்திற்கொருமுறை சவரம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கிடையில் மனதின் அடித்தட்டில் ஒரு ஆசை எழுந்து மேலே வந்தது. ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்.”
“பரவாயில்லை...”
“நல்ல ஆசைதான்!”
“ஆள் மோசமில்லையே!”
“அப்படியா? பிறகு...?”
“அந்த சிந்தனை மனதிற்குள் சிறிதும் நீங்காமல் நின்றுகொண்டிருந்தது. அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தபோதும், பரேடில் ஈடுபட்டிருக்கும் போதும் ஒரே சிந்தனைதான்... கனவில் வரும் காதலிகள் தூக்கத்தில் உறவைத் தேடி வந்துகொண்டிருந்தார்கள். கண்விழித்தபோது அந்த உருவங்கள் மனதில் ஆழமாக நின்றிருக்கவில்லை. தொடர்ந்து ஒரு காதலியைத் தேர்ந்தெடுத்துப் பிடிக்க வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டேன். ஏற்கனவே நன்கு அறிமுகமான இளம்பெண்கள் எல்லாரின் உருவங்களும் மனதில் தோன்றின. என்னுடன் சேர்ந்து படித்த எல்லாரையும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். சாரதா, சூசன்னா, தேவயானி, விசாலாட்சி, சின்னம்மா... அவர்களுக்கு மத்தியிலிருந்து ஒரு காதலியைக் கடிதம் எழுத வேண்டும். அப்படிச் செய்யாமல் வாழ முடியாது. இறுதியில் நான் ஒருத்தியைக் கண்டுபிடித்தேன். தேவயானி!”
“சபாஷ்!”
“பேர் நல்லா இருக்கு!”
“பெயரைப்போலவே அவள் அழகானவளாக இருந்தாள். பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியில் வீடு. அவளுக்கு தந்தை இல்லை. வயதான ஒரு தாய் இருக்கிறாள். நான்கு பெண் பிள்ளைகளில் தேவயானி எல்லாருக்கும் மூத்தவள். விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் வாங்கி, அவற்றை நகரத்திற்கு சுமந்து சென்று விற்று, அந்த அன்னை தன் பெண்களை வளர்த்தாள். அதன் மூலம் கிடைக்கும் சிறிய ஆதாயத்தைக் கொண்டு அவள் அவர்களைப் படிக்கவும் வைத்தாள். பள்ளிக்கூடம் செல்வதற்காக என்னை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பாள் தேவயானி. நான் சொல்வதற்குத் தயங்கிக் கொண்டிருந்த தமாஷான விஷயங்களையெல்லாம் அவள் என்னிடம் சொல்வாள். ஜானம்மாவிற்கு மலையாள ஆசிரியர் கடிதம் கொடுத்த விஷயத்தை அவள்தான் என்னிடம் கூறினாள். அதைக் கூறியபோது, அவள் தாங்கமுடியாமல் சிரித்தாள்.