முதல் காதல் கடிதம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7007
முதல் காதல் கடிதம்
பாறப்புரத்து
தமிழில் : சுரா
ஏழு நாட்களுக்குப்பிறகு, இன்றுதான் சூரிய ஒளியே தென்படுகிறது. மேகங்களால் மூடப்பட்டிருந்த வானம் தெளிவான நீல நிறத்திற்கு மாறியிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு, வானம் இருண்டு மூடிக்கிடந்தபோது, இந்த அளவுக்குப் பனி விழுமென்று நினைக்கவே இல்லை. இரண்டு நாட்கள் முழுவதும் பிரசவ வேதனை எடுத்து நின்றுகொண்டிருக்கும் கர்ப்பிணியைப்போல, மழைமேகங்கள் நிறைந்திருந்த வானம் மூச்சைப் பிடித்துக்கொண்டு காட்சியளித்தது.
அப்போதுதான் என்ன ஒரு குளிர்ச்சி! நரம்புகள் அனைத்திலும் ரத்தம் முழுவதும் உறைந்து விட்டதைப்போல தோன்றியது. கைகளிலும் கால்களிலும் முகத்திலும் கூர்மையான ஊசிகள் குத்துவதைப்போல இருந்தன. இரண்டாவது நாள் மாலை நேரம் ஆனபோது, சரளை கற்களைப் போல பனி விழ ஆரம்பித்தது. அது தொடக்கம். பொழுது புலர்ந்தபோது, வாசலில் அரையடி உயரத்திற்குப் பனி உறைந்து கிடந்தது. முல்லை மலர்கள் சொரிவதைப்போல அப்போதும் பனி பொழிந்துகொண்டிருந்தது. அதிகமாகவும் குறைவாகவும் ஐந்து நாட்கள் அது நீடித்துக்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டும் தூரம்வரை நிலப் பகுதி முழுவதும் பனிப் போர்வை அணிந்திருந்தது. மரங்களின் உச்சிகளிலும் இலைகளிலும் கூட வெள்ளை நிறம் பூசப்பட்டிருந்தது.
இன்று வெய்யில் தோன்றும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதுவுமே நடக்காததைப்போல, அதிகாலைப் பொழுது நல்ல பிரகாசத்துடன் இருக்கிறது. கிழக்கு திசையில், மலைக்கு மேலே சூரியன் புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறது.
வாசலில் வெய்யில் பரவுவதை எதிர்பார்த்துக் கொண்டு எல்லாரும் ‘பாரக்’கிற்குள் அமர்ந்திருந்தார்கள். ஆள் உயர கோட்டும், கனமான காலணிகளும், கையுறைகளும் அணிந்திருந்தாலும் குளிர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. போர் முறைகளை நன்கு கற்றிருக்கும “திறமைசாலியான எதிரியைப்போல அது சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, தாக்குதலை நடத்துகிறது. ஏழு நாட்களாக எல்லாரும் அந்த எதிரியின் கடுங்காவல் பாசறையில் பிணைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள்.
சூரியன் தேவதாரு மரங்களுக்கு மேலே வந்த போது ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்களுக்கு நடுவிலிருந்த ‘பரேட் ஸ்கொயரில் வெய்யில் பரவியிருந்தது. அங்கு முதலில் ஓடிச்சென்ற ஆள் மிகுந்த சந்தோஷத்துடன் உரத்த குரலில் சொன்னான் : “எல்லாரும் வாங்க... நல்ல வெய்யில் இருக்கு.”
ஐந்தே நிமிடங்களில் அங்கு ஆட்கள் நிறைந்து விட்டார்கள். விடுமுறை நாளாக இருந்ததால் எதிர்பார்த்துக் காத்திருந்து வந்து சேர்ந்த வெய்யிலை விருப்பப்படி ரசிக்கலாம். கடிக்கும் அளவிற்கு குளிர் இருக்கும்போது, வெய்யில அன்பைச் சொரியும் நண்பனாகி விடுகிறது. பூட்ஸ் அணிந்திருந்த கால்கள் பனியின்மீது அழுத்தப்பட்டபோது, மணல் வெளியில் உண்டாவதைப்போல சத்தம் உண்டானது. வெய்யிலின் வெப்பம் பட்டு உற்சாகம் கொண்ட சிலர் துள்ளிக் குதித்தார்கள். அள்ளியெடுத்த பனிக்கட்டிகளை சிலர் தங்கள் நண்பர்களின் மீது எறிந்தார்கள். சிலர் பனிக்கட்டிகளைக் கொண்டு தாஜ்மஹாலை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆட்களின் கூட்டத்தில் ஒருவன் சொன்னான்.
“மேஜையை எடுத்துப் போட்டால், ஆறு பேர் அமர்ந்து ஒரு விளையாட்டை ஆரம்பிக்கலாம்..”
“பந்தயம் இருக்கிறதா?”
“ஓஹோ...”
“ஒரு புட்டி ரம்...?”
“சரி...”
“நானும் குட்டியும் ஜோஸும்...”
“இப்போது சீட்டு விளையாட்டு வேண்டாம். கிராம ஃபோன் எடுத்து, புதிய நான்கு இசைத்தட்டுகளை வைக்கட்டுமா?”
“ரிக்ரியேஷன் அறை பூட்டப்பட்டிருக்கிறதே!”
“நாயிக் வர்க்கி எங்கே?” (வர்க்கிதான் ரிக்ரியேஷன் அறையின் இன்சார்ஜ்).
“வர்க்கியே புஹோய்!”
இசைத்தட்டு வைப்பதற்கு முன்பே ஒருவன் பாட ஆரம்பித்தான்.
“ஆவோ ஹமாரே ஹோட்டல் மே
சாயா பியோ ஜி கறம் கறம்
பிஸ்கட் காலோ நரம் நரம்
ஜோ தில் சாஹே மாகலோ ஹம்ஸே
சப் குச் ஹே பகவான் கஸம்
பகவான் கஸம்...”
(எங்களுடைய ஹோட்டலுக்கு வாருங்கள். சூடான தேநீரைக் குடியுங்கள். மென்மையான பிஸ்கட்களை சாப்பிடுங்கள். அதற்குப் பிறகு தேவைப்படுவதைக் கேளுங்கள். அனைத்தும் இருக்கின்றன. கடவுளின்மீது சத்தியம்...)
அப்போது சாமுவேல் ட்யூட்டி முடிந்து வந்தார். வந்தவுடன் அவர் சொன்னார். ‘எல்லாரும் சந்தோஷமாக வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படித்தானே? எந்த அளவிற்கு சிரமப்பட்டு இதைக் கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமா?”
“ஓ! இவர் ட்யூட்டியில் இருந்துகொண்டு, வெய்யிலுக்கு ‘ஸ்பெஷல் டிமாண்ட்’ அனுப்பி, அதை இங்கே கொண்டு வந்திருக்கிறார்!”
“அப்படியென்றால் கொஞ்சம் பணம் செலவாகியிருக்குமே!”
“நாம... இப்படி செலவழிப்பதற்கு கையில் பணம் இருக்கிறதா என்ன?”
“இல்லை... பொதுமக்களுக்காக கடன் வாங்கி செலவழிக்கிறேன்.”
ஒரு தலைவரின் மிடுக்குடன் சாமுவேல் கேட்டார் :
“அப்படியென்றால்... என்ன ப்ரோக்ராம்?”
“சீட்டு விளையாட்டு...”
“வேண்டாம்... ரெக்கார்டு வைக்கணும்.”
“கொஞ்சம் நடப்பதற்காபீ சென்றால் என்ன?”
“இந்த பனிக்கு நடுவிலா நடப்பது?”
“வெறுமனே இருந்து இந்த வெய்யிலில் காயுங்க மனிதர்களே!”
சாமுவேல் இறுதித் தீர்மானமாகக் கூறினார்:
“சீட்டு விளையாட்டுத்தான்...”
சாமுவேலின் தலைமை இல்லாமல் சில காரியங்கள் எதுவும் யூனிட்டில் நடப்பதில்லை. விளையாட்டிலும் முக்கியமான விஷயங்களிலும் அவர் முன்னால் இருப்பார். ஓண விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதும், குடியரசு நாளன்று விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் சாமுவேல்தான். எவ்வளவு கருத்து வேறுபாடுகள் கொண்ட காரியங்களாக இருந்தாலும், அவற்றை சரி செய்துவிடுவார். மறுத்துக்கூற முடியாத அளவிற்கு ஒரு ஈர்ப்பு சக்தி அவருடைய நாக்கிற்கு இருக்கிறது. சாமுவேலின் கதைகளையும் வர்ணனைகளையும் கேட்பதற்குத்தான் எவ்வளவு பேர் வந்து கூடுகிறார்கள்!
ஆனால், இந்த முறை சாமுவேலின் தீர்மானம் செயல்படவில்லை.
“விளையாடுவதற்கு சீட்டு எங்கே?”
“நாற்காலியையும் மேஜையையும் வெளியே இழுத்துப் போடாமல் விளையாட முடியுமா?”
“ரிக்ரியேஷன் அறையின் சாவியுடன் அந்த வர்க்கி எங்கே போனான்?”
மீண்டும் யாரோ உரத்தகுரலில் கத்தினார்கள்: “வர்க்கி... புஹோய்!”
அப்போது சாமுவேல் கிழக்குப் பக்கத்திலிருந்த அறையைக் கூர்ந்து பார்ப்பதை கவனித்தார்கள். சிவதாசன் ஒரு கடிதத்தை வாசித்தவாறு, தேவதாரு மரத்திற்குக் கீழே நின்றுகொண்டிருந்தான். சாமுவேல் அழைத்தார். “சிவதாசன், இங்கே வா...”
திடுக்கிட்டு சுய உணர்விற்கு வந்ததைப்போல, அப்பாவித்தனமாய் விழித்துக்கொண்டே சிவதாசன் கடிதத்தை மடித்து பாக்கெட்டிற்குள் வைத்தான். பிறகு மெதுவாக நடந்து வந்தான். அருகில் வந்தவுடன் சாமுவேல் கேட்டார். “கடிதம் யாருடையது?”
“என்ன?”
“இதே கடிதத்தை நேற்று இரண்டு மூன்று முறை வாசிப்பதைப் பார்த்தேனே?”
சிவதாசன் வெட்கத்துடன் சிரித்தான். அந்தப் பையன் சிரிப்பதும் பேசுவதும் பெண்களைப்போல வெட்கத்துடன்தான். என்ரோல் ஆகி ஒரு வருடம் கடந்து விட்டாலும், இப்போதுகூட ஒரு பட்டாளக்காரனுக்கு இருக்க வேண்டிய தைரியம் அவனுக்கு வந்து சேரவில்லை. சாமுவேல் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டார்.