கௌரி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7446
உலகச் செயல்கள் கடவுளிடமிருந்து உங்களுடைய சிந்தனைகளை விரட்டும் பட்சம், கடவுளின் உதவியுடன் அவருடைய பாதத்தின் புனித சேவைக்காக அவருடைய பக்தையை நிச்சயம் காப்பாற்றிக் கொண்டு வருவேன். நீங்கள் விரும்பினால், உங்களின் தோட்டத்திற்கு அருகில் இருக்கும் குளத்திற்குப் பக்கத்தில் நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு என்னைச் சந்திக்கலாம்.’
கௌரி கடிதத்தைத் தன் கூந்தலின் மடிப்புகளுக்குள் மறைத்து வைத்தாள். மறுநாள் மதியம் குளிப்பதற்கு முன்னால் அவள் தன் கூந்தலை அவிழ்த்தபோது, அந்தக் கடிதம் அங்கு இல்லாமல் இருப்பதைப் பார்த்தாள். அது படுக்கையில் விழுந்து, தன் கணவனின் கையில் சிக்கியிருக்குமோ என்று அவள் நினைத்தாள். அது அவரைக் கோபம் கொள்ளச் செய்யும் என்பதை நினைத்தபோது முதலில் அவளுக்க ஒரு இனம் புரியாத ஆனந்தத்தைத் தந்தது. அதே நேரத்தில் தன் தலைமீது அருள்மயமான கிரீடத்தைப்போல் சூட்டப்பட்ட அந்தக் கடிதம் அசிங்கம் பிடித்த கைகளால் தொடப்படுவதா என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வேகமாக நடந்து அவள் தன் கணவரின் அறையை அடைந்தாள். கண்கள் பின்னோக்கி திரும்பியிருக்க, வாயில் நுரை வர, அவர் தரையில் கிடந்தார். அவர் இறுகப் பிடித்திருந்த அவருடைய கையிலிருந்து கடிதத்தைப் பிடுங்கி முடித்து, ஒரு டாக்டரை வேகமாக அழைத்து வரும்படி ஆளை அனுப்பினாள்.
வலிப்பு நோயால் அது உண்டானதாக டாக்டர் சொன்னார். அவர் வருவதற்கு முன்பே, நோயாளி மரணமடைந்து விட்டார்.
அதே நாளில் அது நடந்தது. வீட்டிற்கு வெளியே பரேஷ் ஒரு முக்கியமான ஆளைச் சந்திப்பதாக இருந்தது. பரமானந்தாவிற்கு அந்த விஷயம் தெரிந்து, அதற்கேற்றாற்போல் அவர் கௌரியைச் சந்திக்க நேரம் குறித்திருந்தார். அப்படிப்பட்ட ஒரு ஆழமான பள்ளத்தில் அவர் விழுந்துவிட்டார்!
குளத்தின் சுவரோரத்தில் தன்னுடைய குரு ஒரு திருடனைப் போல மறைந்திருப்பதை சாளரத்தின் வழியாகப் பார்த்த விதவைப் பெண்ணான கௌரி, மின்னலடித்தபோது தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். அந்த மின்னல் வெளிச்சத்தில், அவர் எந்த அளவிற்கு கீழே விழுந்திருக்கிறார் என்பதை அவளால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
குரு அழைத்தார்: ‘‘கௌரி....’’
‘‘நான் வர்றேன்’’- அவள் பதில் சொன்னாள்.
பரேஷின் நண்பர்கள் அவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்டு இறுதிச் சடங்குகளில் உதவுவதற்காக வந்தபோது, தன் கணவரின் இறந்த உடலுக்கு அருகில் கௌரியின் இறந்த உடல் கிடப்பதைப் பார்த்தார்கள். அவள் தனக்குத்தானே விஷம் குடித்துக் கொண்டாள். தன்னுடைய ‘சதி’மூலம் அவள் வெளிப்படுத்திய மனைவியின் ஒழுக்கம் எல்லோராலும் புகழப்பட்டதில் எல்லா விஷயங்களும் காணாமல் போயின. அந்த நேர்மை இந்த அழிவு காலத்தில் மிகமிக அபூர்வமான ஒன்றே.