சுதந்திரப் பிறவிகள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6912
‘‘நீ மீண்டும் ஆரம்பித்துவிட்டாய். நான் என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய்? எல்லாருக்கும் முன்னால் இருக்கும்போது, வெளிப்படையாக நீ என்னுடைய காதலி என்று அறிவிக்க வேண்டுமா? கொஞ்சம் என்னுடைய நிலையைச் சிந்தித்துப் பார். என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்...’’
‘‘நான் அப்படி எதுவும் சொல்லவில்லை.’’ அவள் மேஜையின்மீது இருந்த நீரை எடுத்துப் பருகினாள்.
‘‘உனக்கு கொஞ்சம் காப்பி கலக்கித் தரட்டுமா?’’ அவர் மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே கேட்டார்.
‘‘எனக்கு காப்பி வேண்டாம்.’’ அவள் கவரில் தொங்கிக் கொண்டிருந்த விலை குறைவான ஒரு இயற்கைக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
‘‘அப்படியென்றால் இவ்வளவு காப்பியையும் வீணாகக் கொட்டுவதா?’’ அவர் கேட்டார்.
‘‘ம்...’’
‘‘எனினும், நீ இப்படி இயல்புக்கு மாறாக ஏன் நடந்து கொள்கிறாய்?’’
‘‘இந்த நடத்தைதான் என்னுடைய இயல்பான நடத்தை.’’ அவள் சொன்னாள்.
அவர் அவளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்.
அவர் உணவு சாப்பிட்டு முடித்து எழுந்தபோது அவள் சொன்னாள்: ‘‘நீங்கள் சந்தோஷத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். இதுதான் சந்தோஷமா? இந்த அறையும், இந்த பொய்யான பெயரும், இந்த கறுப்புக் கண்ணாடியும்...?’’
அவர் எதுவும் பேசவில்லை. அவர் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு முகத்தைத் திருப்பி அவளையே பார்த்துக கொண்டிருந்தார். அவள் நிலைக் கண்ணாடிக்கு முன்னால் இருந்த ஒரு பீடத்தின்மீது போய் அமர்ந்து தன்னுடைய கூந்தலை அவிழ்த்து வார ஆரம்பித்தாள்.
‘‘உன்னைப் பற்றி நினைக்கும்போது எனக்கு சுருள் சுருளான கூந்தல்தான் ஞாபகத்தில் வருகிறது.’’ அவர் சொன்னார்.
‘‘விஷப்பாம்புகளை போல இருக்கும் இந்த முடிச்சுருள்களை...’’ அவர் தொடர்ந்து சொன்னார்: ‘‘ஒரு நாள் நான் கனவில் உன் பெயரை சத்தம் போட்டுக் கூறிவிட்டேன். ஆனால், என் மனைவி சிறிதுகூட சந்தேகப்படவில்லை. ‘பேபி’ என்பது என்னுடைய இளைய மகனின் பெயரும் ஆயிற்றே! நீ ஓய்வெடுக்க வேண்டாமா? இல்லாவிட்டால், இன்று முழுவதும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பது என்பதுதான் எண்ணமா?’’
‘‘எத்தனை மணிக்கு திரும்பப் புறப்பட வேண்டும்?’’ அவள் கேட்டாள்.
‘‘சாயங்காலம் ஆறரை மணிக்கு விமானம். நான் இங்கேயிரந்து ஐந்தரை மணிக்குப் புறப்படலாம்.’’
‘‘நான்கரை மணி நேரங்கள்...’’
அவள் சொன்னாள்.
தன்னால் மனம் விட்டுச் சிரிப்பதற்கோ, தமாஷாகப் பேசிக் கொண்டிருக்கவோ இனிமேல் எந்தச் சமயத்திலும் முடியவே முடியாது என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். தனக்கு மிகவும் விருப்பமுள்ள மனிதருடன் செலவிடக்கூடிய மணி நேரங்கள், செய்பவை அனைத்தும் செய்யக் கூடாதவை என்று தனக்கு ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்?
அவருக்கு அருகில் படுத்திருந்தபோது, அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
‘‘பேசாதீங்க. உங்களுடைய வார்த்தைகளுக்கு கடுமை உண்டாகும். ஆனால், உங்களுடைய உடலுக்கு கடுமைத்தனம் இல்லை.’’
தனக்கு அந்த மனிதருடன் தோன்றக் கூடிய இந்த அளவற்ற மோகம், இந்த பக்தி எவ்வளவோ பல யுகங்களாக இருந்து வருபவை என்றும், அது முன்பு ஒரு முறை அவளுடைய எலும்புகளில் ஒரு பிரார்த்தனைபோல இருந்து கொண்டு அவற்றை இப்படி வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறது என்றும் அவளுக்குத் தோன்றியது. சந்தேகப்படுவதற்கு என்ன இருக்கிறது? தன்னுடைய அன்புதானே அவரை ஆணாக ஆக்கியது! அழகானவராக ஆக்கியது! அவர் தன்னை ஏமாற்றலாம். காயப்படுத்தலாம். ஆனால், வார்த்தைகளால் மட்டும்! காற்று பட்டால் கைகளையம் கால்களையும் சுருட்டிக் கொண்டு மரணமடையக் கூடிய வார்த்தைகளால் ஒரு காயத்தை உண்டாக்குதல்... அதற்கு தான் ஏன் பயப்பட வேண்டும்? அந்த உடல் தன்னை எந்தச் சமயத்திலும் ஏமாற்றாதே! உடலின் ஒரு தனிப்பட்ட அறிவு தன்னிடம் அதை மட்டும் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்கிறது. உன்னுடைய ஓய்வு... உன்னுடைய நிம்மதி... உன்னுடைய மரணம்... இவை வேறு எங்கும் உனக்குக் கிடைக்காது. இந்த வஞ்சக மனிதரின் கைகளிலிருந்து அல்லாமல்...
‘‘இது எப்படி முடியும்?’’ அவள் அவரிடம் கேட்டாள். தன்னுடன் ஓய்வு எடுக்கும்போது, அவருடைய முகம் வேறொரு முகமாக சிறிது நேரத்திற்கு வடிவமெடுக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. கண்ணாடியைக் கழற்றிவிட்டால், அந்த முகத்தில் ஒரு கள்ளங் கபடமற்ற தன்மை வந்து சேர்கிறது. அந்த உதடுகளுக்கு இனம் புரியாத ஒரு மென்மைத் தன்மை கிடைக்கிறது. எதையோ தேடிக்கொண்டிருக்கும், இழந்த ஏதோ ஒன்றைத் தேடித் திரியும் ஒரு சிறிய குழந்தையைப் போல! அவள் தனக்குத்தான் கூறிக்கொண்டாள். அவர் குழந்தை அல்ல என்று யாரால் கூற முடியும்? யார்தான் குழந்தையாக இல்லாதவர்கள்? தேடாதவர்கள்? அவள் அந்த முகத்தின் சுருக்கங்களில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.
‘‘முடிவுக்கு வராததாக ஏதாவது இருக்க வேண்டும்.’’ அவள் சொன்னாள்: ‘‘எல்லாவற்றுக்கும் இறுதி இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை.’’
அவர் அப்போதும் எதுவும் கூறவில்லை. தன்னிடம் ஒரு நாள் ஆன்மாவைப் பற்றியும் வேதாந்தங்களைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்த அந்த மனிதரின் ஒரு வற்றிப் போன வாய்க்கால் மட்டுமே தன்னுடன் இப்போது படுத்துக் கொண்டிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. தன்னை விரும்புபோது அவர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா? எதுதான் உண்மை? தத்துவ சிந்தனைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த அந்த மனிதரா? இல்லாவிட்டால் தன்னுடைய கொஞ்சல்களுக்கு அடிபணிந்து கண்களை மூடிக் கொண்டு படுத்திருக்கும் இந்தக் காதலரா?
‘‘வருகிற வருடத்தில் நான் உங்கள்மீது அன்பு வைத்திருக்கப் போவதில்லை.’’ அவள் சொன்னாள்.
‘‘இப்போது நீ உன்னையே ஏமாற்றிக் கொள்ள முயற்சிக்கிறாய்.’’ அவர் முணுமுணுத்தார்.
அவருக்கு தன்னுடைய சிந்தனைகளைக்கூட புரிந்து கொள்ள முடிகிறதா என்ன? அவள் அதிர்ந்துது போய்விட்டாள்.
‘‘இது ஒரு ஆயுள் முழுக்க இருக்கக் கூடிய தண்டனையா என்ன?’’ அவள் கேட்டாள்.
‘‘நீ அதை அப்படியா எண்ணுகிறாய்?’’
‘‘எதை?’’
‘‘இதை...’’
காதல் என்று கூறலாம் அல்லவா? அந்த வார்த்தையைக் கூறுவதற்கு மட்டும் அவர் ஏன் தயங்குகிறார்?
அவள் எழுந்து உட்கார்ந்தாள். அவர் அப்போதும் தலையணையில் ஒரு கன்னத்தை வைத்துக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தார்.
‘‘உங்களுக்கு என்னை ஏன் பிடித்தது என்ற காரணம் எனக்குத் தெரிந்து விட்டது.’’ அவள் சொன்னாள்.
‘‘என்ன?’’
‘‘நான் எதிர்காலத்தைப் பற்றி நினைத்து மனதில் கவலைப்படுவதில்லை. திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கை கொண்டவள் இல்லை. பாவ உணர்வு எனக்கு சிறிதும் இல்லை.’’
‘‘சரிதான்...’’
அவர் சொன்னார். அவருடைய முகத்தில் ஒரு புன்னகை பரவியது.