Lekha Books

A+ A A-

சுதந்திரப் பிறவிகள் - Page 3

sudandira-piravigal

‘‘ஒரு நாள் நானும் நீங்களும் இது போதும் என்று விரும்புவோம். அப்போது ஒரு விடை பெறுதல் நடக்கும். பிரிந்து செல்லும் இரண்டு வழிகளில் போவோம். அவ்வளவுதான். அழுகையும் இல்லை. புகாரும் இல்லை. அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும் பொறுப்பகளும் இல்லை. இரண்டு சுதந்திரப் பிறவிகள்...’’

‘‘உனக்கு அசாதாரணமான புத்திசாலித்தனம் இருக்கிறது.’’ அவர் சொன்னார்: ‘‘விவேகமும்...’’

‘‘உண்மைதான்... நான் புத்திசாலிதான்...’’ அவள் எழுந்து குளியலறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். முகத்தில் நீரை ஊற்றும்போது, அத்துடன் சேர்ந்து அவளுடைய கண்ணீர் துளிகளும் அரும்பி வழிந்து கொண்டிருந்தன.

அந்த மனிதரிடமிருந்து தனக்கு எந்தக் காலத்திலும் கிடைக்கவே வழியில்லாத குழந்தைகளைப் பற்றி அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். எந்தச் சமயத்திலும் அவள் தாயாக ஆகப் போவதில்லை. எந்தக் காலத்திலும் அந்த முகச்சாயலைக் கொண்ட பிள்ளைகளின் அருகில் இருந்து கொண்டு அவள் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கப் போவதில்லை. யாரும் அவளை ‘அம்மா’ என்று அழைக்கப் போவதில்லை. பேபி... வெறும் பேபி.

‘‘பேபி...’’ அவர் அழைத்தார்.

அவள் வெளியே வந்தாள். அவளுடைய முகம் மீண்டும் அமைதியானது.

‘‘எனக்கு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துத் தா. பிறகும் கொஞ்சம் தேநீருக்கு ஆர்டர் பண்ணு.’’

அவர் ஒரு இயந்திரத்தைப் போல அந்த வேலைகள் எல்லாவற்றையும் செய்வாள். அவர்களுக்கிடையே இருக்கும் சில புதிய விஷயங்களை அப்போதுதான் அவளாலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்கு இந்த உறவு ஒரு அமைதியற்ற தன்மையை அளித்தது. ஆனால், அவருடைய அமைதியற்ற தன்மை அதைவிட எவ்வளவோ பயங்கரமானதாக இருந்தது. இடையில் விளையாடுவதற்கு மத்தியில் கிடைத்த தோல்விகளை மறப்பதற்கும் சிறிது ஆறுதல் கிடைப்பதற்காகவும் தன் தாயைத் தேடி ஓடி அணைத்துக் கொள்ளும் ஒரு குழந்தையின் முக வெளிப்பாட்டுடன் அல்லவா இந்த பொருளாதார நிபுணர்- சமுதாயத்தில் மிகப்பெரிய இடத்தில் வீற்றிருக்கும் இந்த நடுத்தர வயது மனிதர் தன்னைத் தேடி வருகிறார்? எதிர்காலத்தில் தான் சந்திக்கப் போகிற இருட்டைப் பார்த்து பயந்து தான் எப்படி அவரைக் கை கழுவ முடியும்? எந்தச் சமயத்திலும் முடியாது. அவனவனின் இதயத்தின் நொறுங்கலில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னொரு இதயத்தைத் தகர்ப்பது... அப்படிப்பட்ட விஷயங்கள் தன்னால் முடியவே முடியாது...

அவள் அவரிடம் சொன்னாள்: ‘‘எழுந்திருங்க... நேரம் ஐந்தாகிவிட்டது.’’

அவருடைய முகம் வெளிறியது. அவர் சிகரெட்டை திடீரென்று தரையில் எறிந்துவிட்டு எழுந்தார்.

அவருக்கு தேநீர் கலக்கிக் கொடுக்கும்போது, அவள் ஒரு பாட்டை முணுமுணுத்தாள்.

‘‘நீ பாட்டு கற்றிருக்கிறாய் அல்லவா?’’

அவள் தலையை ஆட்டினாள். ‘‘இல்லை... என் தங்கைதான் அதைக் கற்றிருக்கிறாள். அவள் என்னைப் போல அல்ல. ஒரு பாவம்... அதாவது - விவேகம் இல்லை.’’

அவருடைய கண்கள் மட்டும் சிரித்தன.

‘‘உன்னை நான் முதன்முதலாக பார்த்த நாள் உனக்க ஞாபகத்தில் இருக்கிறதா?’’ அவர் கேட்டார்: ‘‘நீ ஒரு வெள்ளைநிறப் புடவையும் முகத்தில் முழுமையான பதைபதைப்புமாக அந்த ஹாலின் கதவிற்கு அருகில் நின்றிருந்தாய். அங்கு விருந்தினர்களாக கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருந்தார்கள். எல்லா இடங்களிலும் நிறங்கள்... எல்லா இடங்களிலும் பேச்சு... நீ மட்டும் அங்கே தனியாக இருந்தாய். அது எனக்கு அந்த நிமிடத்தில் புரிந்தது.’’

அவளும் அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள். அறையின்  இன்னொரு மூலையில் சுவருக்கு அருகில் தலைமுடி நரைத்த ஒரு மனிதர் தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தது... அந்த நிமிடத்தில் முன்பு எப்போதோ பார்த்து அறிமுகமானவர் என்று தவறாக நினைத்து தான் அந்த முகத்தை நோக்கி தானாகவே நகர்ந்து சென்றது... அப்படித்தான் சந்திப்பு உண்டானது. ஒரு பெண், பெண்ணாக இருக்க வேண்டுமென்றால், அவளுக்கு ஒரு காதலன் இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். அவளுடைய பெண்மைத் தன்மையை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு ஆண் வேண்டும். அவளை ஒர கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதற்கு, அவளுடைய உடலின் மினுமினுப்பையும் வாசனையையும் பெரிய விஷயங்களையம் சிறிய விஷயங்களையும் அவளுக்குப் புரிய வைக்க வேறு யாரால் முடியும்?

‘‘அன்றுதான் என்னுடைய வாழ்க்கை ஆரம்பமானது.’’ அவள் சொன்னாள்:

அவர் அவளுக்கு நேராக ஒரு கோப்பையை நகர்த்தி வைத்தார்.

‘‘உண்மையாகவா சொல்கிறாய்?’’ அவர் கேட்டார்.

‘‘உண்மையாகத்தான்...’’ அவள் சொன்னாள்: ‘‘அன்று நான் மரணத்திலிருந்து கண் விழித்தேன். மீண்டும் பிறந்தேன்.’’

‘‘நீ இந்த அளவிற்கு சீரியஸாக ஆகும்போது, எனக்கு உன்னைப் பார்த்து பயம் வந்து விடுகிறது.’’ அவர் சொன்னார்: ‘‘நீ குழந்தையாக இருந்தால் போதும்... சிரித்தால் போதும்... பல நேரங்களிலும் காட்டக் கூடிய குறும்புத்தனங்களை வெளிப்படுத்தினால் போதும்...’’

அவள் தலையைக் குலுக்கினாள்.

அவர்கள் அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது, நேரம் ஐந்தரை ஆகி விட்டிருந்தது. எனினும், வெயில் நெருப்பைப் போல தகித்துக கொண்டிருந்தது. அலுவலகங்களில் இருந்து திரும்பி வந்து கொண்டிருப்பவர்களையும், ரிக்ஷாவில் தலையை உயர்த்தி உட்கார்ந்து கொண்டிருக்கும் அழகிகளான சில வெள்ளைக்காரிகளையும் அவர்கள் பார்த்தார்கள்.

‘‘யாராவது பார்த்தால்...?’’

அவள் மெதுவாகச் சொன்னாள். அவர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து, உதட்டில் வைத்தார்.

விமான நிலையத்தை அடைந்தபோது, அவள் முன்பு நடந்து கொண்டதைப் போல ஒரு அடி விலகி நடக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் ஒரு காலியாகக் கிடந்த நாற்காலியின் அந்தப் பக்கத்திலும் இந்தப் பக்கத்திலும் உட்கார்ந்தார்கள். அவருடைய கண்கள் மீண்டும் ரோந்து சுற்றும் போலீஸ்காரர்களாக ஆயின. பழக்கமான முகங்கள் அங்கு எங்கும் இருக்குமா? தேவையற்ற பேச்சுகளுக்கு இடம் உண்டாகி விடுமோ? அவருடைய ஒவ்வொரு சிந்தனையையும் அவள் புரிந்து கொண்டாள். ஒவ்வொன்றும் அவளுடைய இதயத்தை மரத்துப் போகச் செய்தன. இது எவ்வளவு காலம் நீடித்து நிற்கும்?

அவர் விமானத்தை நெருங்கியபோது, திரும்பிப் பார்த்தார். ஒருமுறை கையை உயர்த்தினார். அவள் எப்போதும் செய்வதைப் போல தன்னுடைய கையை உயர்த்தினாள்.

அவர் சிரித்தாரோ? அவளால் பார்க்க முடியவில்லை.

அவள் வீட்டை அடைந்தபோது, நேரம் சாயங்காலம் ஆகி விட்டிருந்தது. வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. முதல் நட்சத்திரம்.

அவளுக்கு திடீரென்று அழ வேண்டும் போல இருந்தது. சத்தமாக, குழந்தைகள் சாதாரணமாக அழுவதைப் போல, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் வாய் விட்டு அழ வேண்டுமென்று. ஆனால், விவேகம் உள்ளவள் என்று கூறப்படும் அந்த இளம்பெண்ணுக்கு அப்படி அழுவதற்கும் தைரியம் இல்லை. அதனால், தூக்கத்திற்கான இரண்டு மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு, அவள் கட்டிலில் போய் படுத்தாள்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel