சுதந்திரப் பிறவிகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6916
அவர் விமானத்திலிருந்து இறங்கிய உடனே அவள் மிகவும் சூடாக இருந்த இரும்புக் கம்பிகளில் சாய்ந்து நின்று கொண்டு ஒரு முறை தன்னுடைய கையை உயர்த்தினாள். அவர் அதைப் பார்த்திருக்க வேண்டும். காரணம்-
அவர் தலையைக் குலுக்கினார். நேரம் இரண்டு மணி ஆகி விட்டிருந்தது. அவருடைய வலது கையில் ஒரு பெரிய தோல் பை இருந்தது. மதிய வெயிலில், தன்னை நோக்கி தளர்ந்த நடையுடன் வரும் அந்த நடுத்தர வயது மனிதரைப் பார்த்துக கொண்டே அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்- இதோ... இதுதான் நீ வழிபட்டுக் கொண்டிருக்கும் மனிதரா? ஆனால், ஒரு குற்ற உணர்வுடன் அவள் அந்தக் கேள்வியை திடீரென்று திரும்பப் பெற்றுக் கொண்டாள்.
அவர் அவளுக்கு அருகில் வந்தபோது, சிரித்தார். அவருடைய உதடுகளின் இரண்டு பக்கங்களிலும் மெல்லிய சுருக்கங்கள் இருந்தன.
‘‘ஹலோ... கவலையில் இருக்கம் என் இளம் பெண்ணே...’’ அவர் மிகவும் தாழ்ந்த குரலில் சொன்னார். தொடர்ந்து, சுற்றிலும் கண்களை ஓட்டினார். அவருடைய முகத்தில் கறுப்புக் கண்ணாடி இருந்தது. அந்தக் கண்ணாடியைக் கழற்றி வீசி எறிய வேண்டும் என்றும். ஆட்களுக்கு முன்னால் அந்த மனிதருடைய கையைப் பிடித்துக் கொண்டு வெளியே நிறுத்தியிருக்கும் தன்னுடைய காருக்குள் ஏற வேண்டுமென்றம் அவளுக்கு ஒரு தீவிரமான ஆவல் உண்டானது. ஆனால், அவரை சிரமத்திற்கள்ளாக்குவதற்கும் குழப்பமான மனநிலைக்கு ஆளாக்குவதற்கும் அவளுக்கு தைரியம் வரவில்லை. சில மணி நேரங்களுக்காக மட்டும் அவ்வளவு தூரத்திலிருந்து அவர் எதற்காக வருகிறார்? தன்னைப் பார்ப்பதற்காக - சந்தோஷப்படுத்துவதற்காக அவள் திடீரென்று சிரித்துக் கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவருக்கு ஒரு அடி முன்னால்.
அவருடைய சிறிய தோல் பெட்டியை அவளே எடுத்து காரின் பின்பகுதியில் வைத்தார். காரை ஸ்டார்ட் செய்யும்போது, அவள் மிகவும் அமைதியான குரலில் கேட்டாள்: ‘‘இப்போது ஒவ்வொரு நாளும் எத்தனை சிகரெட்டுகள் புகைக்கிறீர்கள்?’
அவர் சிரித்தார்:
‘‘எனக்கு பற்று நோய் வராது.’’
‘‘எப்படிச் சொல்கிறீர்கள்?’’
‘‘என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் மாரடைப்பில்தான் மரணமடைந்திருக்கிறார்கள்.’’
காரை ஓட்டும்போது, தன்னுடைய முழங்காலின் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்த கனமான கைவிரல்களை அவள் இடையில் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தாள். நகங்கள் எப்போதும் இருப்பதைப்போல அப்போதும் சுத்தமாகவும் பிரகாசம் உள்ளவையாகவும் இருந்தன.
‘‘நான் உங்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் இந்தக் கைவிரல்கள்தான் கண்களுக்கு முன்னால் தோன்றும்.’’ அவள் சொன்னாள். ஆனால், அவள் அவருடைய முகத்தைப் பார்க்கவே இல்லை. அவருடைய கண்கள் கறுப்புக் கண்ணாடிகளுக்குப் பின்னாலிருந்து தன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். அவள் மேலும் வியர்த்தாள்.
‘‘நீ மேலும் சற்று மெலிந்திருக்கிறாய்?’’ அவர் சொன்னார்.
‘‘ம்...’’
அவர்கள் அதுவரை பார்த்திராத ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். அவர் குறிப்புப் புத்தகத்தில் பெயர்களை எழுதும் போதும், அவள் அந்த வரவேற்பறையில் இருந்த சுவரோவியங்களைப் பார்த்தவாறு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
படிகளில் ஏறும்போது அவர் சொன்னார்:
‘‘மிஸ்டர் பார்த்தசாரதி, மிஸ் பார்த்தசாரதி. இன்று நமக்கான பெயர்கள். உறவு - தந்தைக்கும் மகளுக்குமிடையே இருக்கக் கூடிய உறவு. உனக்கு சம்மதம்தானே?’’
‘‘ம்...’’
அவர்களுக்கு கிடைத்த ஃப்ளாட்டில மூன்று அறைகள் இருந்தன. குளியலறையும் உள்ளே நுழைந்தவுடன் பெரிய நிலைக்கண்ணாடி இருந்த ஒரு அறை... ஸோஃபாக்கள், தொலைபேசி, பூப்பாத்திரங்கள் ஆகியவை இருந்த ஒரு அறை... இரண்டு கட்டில்களம் அலமாரிகளும் இருந்த ஒரு படுக்கையறை. அவள் ஸோஃபாவில் போய் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
‘‘தூக்கம் வருகிறதா?’’
அவர் கேட்டார். அவர் குளியலறைக்குள் நுழைந்து நீர் வரும் குழாயைத் திருப்பினார். முகம் கழுவுவதற்க மத்தியில் அவர் சொன்னார்:
‘‘உணவு கொண்டு வரச் சொல்லு ஃபோன் இருக்கும் மேஜைக்கு அருகில் நான் பெல்லுக்கான ஸ்விட்சைப் பார்த்தேன்.’’
அவளுடைய கண்கள் என்ன காரணத்தாலோ வலித்தன.
அவள் பணியாளை வரச் செய்வதற்காக பெல்லை அடித்து விட்டு, சாளரத்தின் திரைச்சீலைகளை மூடி அறைக்குள் வெளிச்சம் இல்லாமல் ஆக்கினாள்.
அவர் குளியலறையிலிருந்து இந்திய உடைகள் அணிந்து வெளியே வந்தார். அந்த மஸ்லின் ஜிப்பா தன்னுடைய உடலின் எடையை இரண்டு மடங்கு அதிகமாகக் காட்டுவதைப் போல அவருக்குத் தோன்றியது. அவருடைய முகம் சிவந்திருந்தது.
உணவு சாப்பிடும்போது அவர் மீண்டும் சொன்னார்:
‘‘நீ மிகவும் மெலிந்து போயிருக்கிறாய்.’’
அவர் அதை எவ்வளவு அமைதியான குரலில் கூறினார்! உணர்ச்சியே இல்லாமல், வாய்க்குள் பாதியாக வெந்த ஒரு தக்காளியைச் செலுத்தியவாறு அவர் சொன்னார்: ‘‘நீ மெலிந்து போயிருக்கிறாய்!’’ திடீரென்று அவளுக்கு அழுகை வந்தது. தான் கடந்த ஒன்றரை மாத காலமாக அவரை நினைத்து அழாத நாளில்லை என்று எப்படி அவரிடம் கூறுவாள்? அப்படிப்பட்ட வெற்றிகளை அவருக்கு தான் கொடுக்க ஆரம்பித்தால், இந்த உறவு ஒட்டு மொத்தமாக தகர்ந்து போய் விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. காதல் உறவுகளிலும் இறுதியில் வெற்றி பெறுவது மதிப்பு என்னும் குறும்புத்தனமான உணர்ச்சிதான்.
‘‘வெப்ப காலத்தில் நான் மெலிவது உண்டு.’’ அவள் சொன்னாள். அவர் தலையைத் தாழ்த்திக் கொண்டு வேகமாக உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மீண்டும் அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்- இவரா? இவரா நீ வழிபடும் மனிதர்?
அவர் அவளுடைய உதடுக்குக் கீழே ஒட்டிக் கொண்டிருந்த தக்காளிச் சாற்றை தன் கை விரல் நுனியால் துடைத்து நீக்கினார்.
‘‘சாப்பிடு மகளே.’’ அவர் சொன்னார்.
அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்தன.
‘‘என்ன ஆச்சு? இப்போதும் நீ அழப் போகிறாயா?’’
அவள் தலையை ஆட்டினாள். அவளுக்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அவளுடைய முள்ளையும் கத்தியையும் எடுத்து கிண்ணத்தில் வைத்து, அவளை அவர் எழுந்து நிற்கச் செய்தார். அவருக்கு அவளைவிட ஒரு அடி உயரம் அதிகமாக இருந்தது.
‘‘இந்த நாள் அழுவதற்கா? இந்த அரை நாள்?’’ அவர் கேட்டார்.
‘‘நான் அழமாட்டேன்.’’ அவள் சொன்னார்:
‘‘வெயிலில் நின்றதால் இருக்க வேண்டும்- என்னுடைய கண்கள் மிகவும் அதிகமாக வலிக்கின்றன.’’
‘‘நீ ஒர கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொள்ளக் கூடாதா?’’
அவள் தலையை ஆட்டினாள்.
‘‘நான் எந்தக் காலத்திலும் ஒரு கறுப்புக் கண்ணாடியை அணிய மாட்டேன்.’’