இரட்டிப்பு பணம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6980
ஒரு மகிழ்ச்சியான செய்தி. நான் சித்தராகி விட்டேன். குரு. பஷீர்... புதன்கிழமை சித்தரோ ஞாயிற்றுக்கிழமை சித்தரோ அல்ல... வாழ்க்கையில் ஏழு நாட்களும், வருடத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் இந்தச் சித்தி எனக்கு இருக்கிறது. உலகத்திற்கு எவ்வளவோ நன்மைகளை இதன் மூலம் என்னால் செய்ய முடியும்.
இனிமேல் உலகத்தில் வறுமையின் பிடியில் சிக்கியவர்களே இருக்க மாட்டார்கள். எல்லோருமே வசதி படைத்தவர்கள் ஆகி விடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு புரட்சியை செய்கிற அளவிற்கு நான் எப்படி சக்தி படைத்த மனிதனாக ஆனேன்? அதாவது - இந்த அபார சித்தி எனக்கு எப்படி கிடைத்தது? அந்தக் கதையைத்தான் இப்போது நான் உங்களுக்குக் கூறப் போகிறேன். நான் ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். அப்போது என் மனதில் நான் நினைத்தேன் - எதற்காக கதை எழுத வேண்டும் என்று. காரணம் - கதைக்காக தரப்படும் பணம் மிகவும் குறைவு. எல்லா பொருட்களுக்கும் கன்னா பின்னாவென்று விலை இருக்கிறது. கூலி வேலை செய்கிறவனுக்குக் கூட நல்ல கூலி கிடைக்கிறது. எழுத்து தொழிலாளிக்கு மட்டும் ஏன் இவ்வளவு குறைவாக கூலி கொடுக்கப்படுகிறது? எங்களின் பிரச்சினைகளைக் கூறுவதற்கு இங்கு யாருமே இல்லை. கொள்கை முழக்கங்களும், உண்ணா விரதப் போராட்டாங்களும் இல்லாமல் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு அமைதியாக எழுந்து தொழிலாளர்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எழுத்துத் தொழிலாளர்களே! சிந்தித்துப் பாருங்கள்! எல்லோரும் ஒன்று சேருங்கள்! நமக்கு வரவேண்டிய பணத்தைச் சரியாக சொல்லி வாங்குங்கள். இப்படி நான் சொல்கிறேன் என்பதற்காக ஒன்றுமே நடந்துவிடப் போவதில்லை. எழுத்துத் தொழிலாளர்கள் ஒன்று சேரப் போவதில்லை. என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். நான் எழுதி பட்டினி கிடந்து செத்துப் போகிறேன் என்று சிலர் பிடிவாதம் கூட பிடிப்பார்கள். சம்பவங்கள் இப்படி நடந்து கொண்டிருக்கும்போது, நான் என்ன செய்ய வேண்டும்? பத்திரிகை முதலாளிகளுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தேன். அதாவது - ஒரு சிறு கதைக்கு சம்பளமாக அரை மூட்டை அரிசி. ஆனால், ஒரு விஷயம். ஒரு படி அரிசிக்குக் கதை எழுதித் தர தயாராக இருக்கும் வறுமையில் அடிபட்டுக் கிடக்கும் எழுத்துத் தொழிலாளிகளும் இங்கு இருக்கிறார்களே ! மீன் பிடித்தல், கள்ள நோட்டு அடிப்பு, கள்ளக்கடத்தல் இப்படிப் பல தொழில்களும் இருக்கவே செய்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றிற்குக் கட்டாயம் மூலதனம் வேண்டும். அது மட்டுமல்ல. போலீஸ்காரர்கள் பிடித்து சிறைக்குள் போடுவார்கள். அப்படியானால் மீன் பிடிக்கப் போக வேண்டும். ஆனால், கடுமையான வெயிலைத் தாங்குவதற்கும், மழையில் நனைவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அது நமக்கு ஒத்து வராத விஷயம். மீன் நாற்றம் சரிப்பட்டும் வராது. பிறகு என்ன செய்வது? இப்படி பல விஷயங்களையும் மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த போதுதான் படியைக் கடந்து ஒரு ஆள் வருகிறார். அவரின் தலையில் நிறைய முடி இருந்தது. பெரிய தாடியையும் வைத்திருந்தார். வேஷ்டி கட்டியிருந்தார். வயது நாற்பது இருக்கும். வந்த மனிதர் கைகளால் தொழுது விட்டு கேட்டார்: "மாலிக்கான் எல்லாம் ஒழுங்காகக் கிடைக்கிறதா?" "அரசியல் பென்ஷன்ற பேர்ல. ஒவ்வொரு மாசமும் கொஞ்சம் பணம் கிடைக்குது..." "அப்படின்னா, இருக்கற பணத்தையெல்லாம் எடு..." நான் என் மனைவியை அழைத்து இருக்கும் பணம் முழுவதையும் துடைத்து எடுத்துக் கொண்டு வர சொன்னான். மனைவி அறுபத்தேழு பைசாவைக் கொண்டு வந்து தந்தாள். என் பாக்கெட்டில் நாற்பது பைசா இருந்தது. ஒரு ரூபா ஏழு பைசாவை நான் முன்னால் வைத்தேன். அவர் சொன்னார்: "காசை வச்சு என்ன செய்ய முடியும்? நோட்டுகள் வேணும்." "நோட்டுகள் எதற்கு?" "நோட்டுகளை இரட்டிப்பு ஆக்கித் தர்றேன்." "நோட்டு இரட்டிப்பு... முழுப் பொய். உலகத்துல யாராலயும் நோட்டை இரட்டிப்பு ஆக்கித் தர முடியவே முடியாது." "உண்மையாகவே?" "உண்மையாகத்தான்." "எனக்கு என்ன வயசு இருக்கும்?" நான் சொன்னேன்:"உங்களுக்கு அநேகமா நாற்பது வயசு இருக்கும்." அவர் சிரித்தார். அவர் சொன்னார்: "எனக்கு மூவாயிரத்து அறுநாற்று எழுபத்திரெண்டு வயசு. பேரு ராமர் குரு. சங்கரர் குருவோட மூத்த சீடன் நான் தான்!" "சங்கரர் குரு எங்கே இருக்காரு?" அவர் சொன்னார்: "இமயமலை உச்சியில் கடந்த அய்யாயிரம் வருடங்களா ஒற்றைக் கால்ல நின்னு அவர் தவம் செஞ்சிக்கிட்டு இருக்கார். நான் அவர் கூடத்தான் இருந்தேன். மக்களுக்கு நன்மைகள் செய்யணும்ன்றதுக்காக மலையை விட்டு கீழே இறங்கி வந்தேன். உலகத்துல இருந்து வறுமையை முழுசா விரட்டி அடிக்கணும். எனக்கு. அதிகம் நேரமில்லை. உடனே நான் குரு இருக்குற இடத்துக்குப் போகணும். அவர் காலை மாற்றப் போகிறார். இப்போ தவம் இருக்கறது இடது கால்ல நின்னு. உடனே அவர் வலது காலுக்கு மாறணும். ஒரு நல்ல சீடன் எனக்குக் கிடைச்சிட்டா, நான் உடனே என்னோட குரு இருக்குற இடத்துக்குப் போயிடலாம்." நான் கேட்டேன்: "இமயமலை உச்சியில சில நாட்களுக்கு முன்னாடி ரெண்டு பேர் ஏறினாங்கன்னு சொல்றாங்களே! டென்சிங் நார்கெயும் எட்மண்ட் ஹிலாரியும்... அவங்க ராமர் குருவையும் சங்கரர் குருவையும் பார்த்ததாக..." "சொல்லவில்லை..." ராமர் குரு சிரித்தார். "அவங்க நாங்க தவம் செய்கிற இடத்துக்குக் கீழே வரை வந்தாங்க. நான் கொஞ்சம் கற்களை எடுத்து அவங்க தலையில போட்டேன். எவரெஸ்ட் எங்கே இடிஞ்சு விழுகிறதோன்னு நினைச்சு அவங்க அடுத்த நிமிடமே இறங்கி ஓடிட்டாங்க. ஹிலாரியோட புருவத்துல ஒரு கல் விழுந்து காயம் உண்டாக்கிடுச்சு. அந்த தழும்பு இப்பக்கூட அவர்கிட்ட இருக்கு. நான் எல்லா விஷயத்தையும் இன்னும் சொல்லல. கூடு விட்டுக் கூடு பாய எனக்குத் தெரியும். என்ன வடிவம் வேணும்னாலும் என்னால எடுக்க முடியும்." "உங்களுக்கு சீடர்கள் இருக்காங்களா?" "இல்லை. நல்ல பண்புகளைக் கொண்ட ஒரு சீடன் எனக்கு வேணும். உலகத்திற்கு நன்மைகள் செய்யும் பொறுப்பை அந்தச் சீடன்கிட்ட ஒப்படைச்சிட்டு, நான் என்னோட குரு இருக்குற இடத்திற்கு உடனடியா போகணும். நான் ராமர் குருவின் முதல் சீடனாக ஆவது என்று மனதிற்குள் தீர்மானித்தேன். நான் அதைச் சொல்லவில்லை. மற்றவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஒருவேளை அவராலேயே தெரிந்து கொள்ள முடியலாம். நான் சொன்னேன்: