இரட்டிப்பு பணம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6979
"ஏழைகளோட பணத்தை இரட்டிப்பு செய்து தர ஒரு வழி இருக்கு. பக்கத்துலயே மூணு வங்கிகள் இருக்கு. அங்கே கோடிக்கணக்குல பணம் இருக்கு. நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதித் தர்றேன். சரி... நீங்க எப்படி பணத்தை இரட்டிப்பு செய்வீங்க?" "சாதாரணமா நோட்டு இரட்டிப்பு செய்றவங்க ஒரு லொடுக்காஸ் இயந்திரத்தைக் காட்டி, முதல்ல அதுல ஒரு நோட்டை வைப்பாங்க. பிறகு வேறொரு நோட்டை வாங்கி அதுக்கு மேல வைப்பாங்க. பிறகு... சில வேலைகளைக் காட்டி ரெண்டு நோட்டுகளையும் எடுத்துக் காண்பிப்பாங்க. முட்டாள்கள் உடனே கையில இருக்குற நோட்டுக் கத்தைகளை எடுத்துத் தருவாங்க. மோசடிப் பேர்வழிகள் அந்தப் பணத்துடன் புறப்படுவாங்க. போறதுக்கு முன்னாடி ஒரு நேரம் சொல்லுவாங்க. சொன்ன நாள்ல நோட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பாங்க. மேலேயும் கீழேயும் சரியான நோட்டுகளை வச்சிட்டு நடுவுல வெற்றுத் தாள்களை வச்சிருப்பாங்க. அது தெரியாம, நோட்டுக் கட்டுகளோட, பணத்தைக் கொடுத்த முட்டாள் வீட்டுக்குப் போவான். வீட்டுக்குப் போன பிறதுதான் அவனுக்கே தெரியவரும் தான் ஏமாந்து போன விஷயமே." "நீங்க எப்படி?" "மந்திர, தந்திர சக்தியால நோட்டை இரட்டிப்பாக்கித் தருவேன்." "சரிதான்..." நான் வங்கிக்காரர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். "மதிப்பிற்குரிய ஐயா, அப்பிராணி ஏழைகளின் கணக்கில் உள்ள பணத்தை இந்தக் கடிதம் கொண்டு வரும் மனிதரிடம் கொடுத்தால் அவற்றை இவர் இரண்டு மடங்காக்கித் தருவார். அந்த ஏழை மக்கள் பெயரிலேயே இந்தப் பணத்தைப் போடவும் செய்வார். தேவைப்பட்டால் வங்கியில் இருக்கும் எல்லா நோட்டுகளையும் கூட இவர் இரட்டிப்பு ஆக்கித் தர தயாராகவே இருக்கிறார்." பெயரை எழுதி கையெழுத்துப் போட்டு, ராமர் குருவின் கையில் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக் கொண்டு புறப்படுகிற நேரத்தில் சொன்னார்: "முதல் சீடராக ஆகப் போகிறேல்ல? ஒரு ரூபா கொடு. இன்னும் தேநீர் கூட குடிக்கல..." நான் ஒரு ரூபாயை அவர் கையில் தந்தேன். அவர் புறப்பட்டார். பிறகு எனக்கு செய்தி வந்தது - அவரை போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டு போய் லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று. போலீஸ்காரர்களின் கொடுஞ்செயலைப் பாருங்கள். உலக நன்மைக்காக நோட்டுகளை இரட்டிப்பு ஆக்கித் தருவதாக அவர் சொல்கிறார். அதற்காக அந்த மனிதரை இவர்கள் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? போலீஸ்காரர்களுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும்! இந்த எண்ணத்துடன் பக்கத்து வீட்டில் இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளைக் கடன் வாங்கிக் கொண்டு நான் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டேன். போலீஸ்காரர்களுக்கு எதிராக என் மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. நான் பொதுமக்களில் ஒரு ஆளைத் தடுத்து நிறுத்தி விஷயத்தை சொன்னேன். அப்போது அந்த ஆள் சொன்னான்: "நல்ல காரியம்தான். சொல்லப் போனா இதுக்கு போலீஸ்காரர்களுக்கு மெடல் தரணும். கொஞ்ச நாட்களாகவே பல இடங்கள்லயும் இந்த நோட்டு இரட்டிப்பு மோசடி நடந்துக்கிட்டுதான் இருக்கு. எவ்வளவோ ஆளுங்க இதுல பணத்தை இழந்திருக்காங்க. போலீஸ்காரர்கள் அந்த ஆளைக் கைது பண்ணினது அருமையான ஒரு விஷயம் அந்த மனிதனைக் தூக்குல போட்டு கொல்லணும்." பொது மக்களில் ஒரு மனிதனின் கருத்து இப்படி இருந்தால், அதற்குப் பிறகு நான் வேறு யாரிடமும் இந்த விஷயத்தைக் கூறவேயில்லை. நேராக நான் காவல் நிலையத்திற்குச் சென்றென். என்னுடைய பழைய நண்பரும் போலீஸ் இன்ஸ்பெக்டருமாக இருந்தவர் என்னைப் பார்த்ததும் பலமாகப் பாராட்டினார். என்னால்தான் ஒரு கள்ள நோட்டுப் பேர்வழி பிடிபட்டான் என்றார் அவர். அதனால் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்! நான் போலீஸ் இன்ஸ்பெக்டரின் அனுமதியுடன் லாக் அப் முன்னால் சென்று ராமர் குருவைப் பார்த்து வணங்கினேன். அவர் சொன்னார்: "வங்கிக்காரங்க போலீஸ்காரர்களுக்குத் தொலைபேசி மூலம் விஷயத்தை சொல்லிட்டாங்க. போலீஸ்காரர்கள் அடுத்த நிமிடமே வந்து என்னைக் கைது பண்ணிட்டாங்க. நான் இன்னும் தேநீர் குடிக்கல. எனக்கு தேநீர் வேணும்..." நான் மூன்று தேநீர் வாங்கி வரச் செய்தேன். ஒன்றை இன்ஸ்பெக்டர் கையில் தந்தேன். ஒன்றை ராமர் குருவின் கையில் கொடுத்தேன். மற்றொன்றை நான் குடித்தேன். ராமர் குரு ரகசியம் பேசுகிற குரலில் சொன்னார்: "நேரம் அதிகம் இல்லை. நான் புறப்படுறேன். உடனடியாக நீ சீடனா ஆயிடு. நோட்டுகளை இரட்டிப்பு செய்து கொடுத்து மக்களுக்கு நன்மை செய்யணும். மந்திரம் இதுதான்." அவர் என் வலது காதில் மந்திரத்தைச் சொன்னார். நான் அதை மனப்பாடம் செய்து கொண்டேன். அவர் சொன்னார்: "பஷீரர் குரு, நீ சீடர்கள் யாரையும் வச்சுக்கக் கூடாது. மந்திரத்தை எந்தக் காலத்திலும் மறக்காம ரகசியமாவச்சுக்க. உனக்குச் சொன்ன மந்திரத்தை வச்சு ஆயிரம் ரூபா வரை இரட்டிப்பாக்கலாம். அந்த மந்திரத்தோட சக்தி அவ்வளவுதான். ஒரே நேரத்துல ஒரு இலட்சம் ரூபாயை இரட்டிப்பாக்க முடியாது. ஆயிரம் ஆயிரமாத்தான் இரட்டிப்பு ஆக்க முடியும்..." சுருக்கமாகச் சொன்னால், எனக்கு ஆயிரம் ரூபாய் வரை இரட்டிப்பு ஆக்கிக் கொடுக்க சக்தி இருக்கிறது. நான் போய் இன்ஸ்பெக்டரிடம் ஒரு நோட்டு எடுத்துக் கொண்டு வரும்படி சொன்னேன். அவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு வந்தார். அதை வாங்கி, திரும்பி நின்று மந்திரத்தைச் சொல்லி இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை அவர் கையில் தந்தேன். அவர் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டார். நான் சொன்னேன்: "நான் ஒரு சித்தர். இன்னைக்கு இருந்து நான் நோட்டுகளை இரட்டிப்பு ஆக்கித் தருவேன். ராமர்குருதான் என்னோட குரு. நீங்க என் குருவை விடுதலை பண்ணனும்..." போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் குருவை விடுதலை செய்வதற்காக லாக் அப்பை நெருங்கிய போது லாக் அப் காலியாகக் கிடந்த்து. நோ ராமர்குரு! ஒரு வண்டு லாக் அப்பின் இரும்புக் கம்பி மீது உட்கார்ந்திருந்தது. அது ராமர் குருவாக இருக்குமோ? நான் இன்ஸ்பெக்டரிடம் சொன்னேன்: "நீங்க ஒரு சித்தரை லாக் அப்ல அடைச்சிட்டீங்க. பரவாயில்ல. அவர் போயிட்டாரு. உலகத்துக்கு நன்மைகள் செய்ய நான் இருக்கேன். ராமர்குருவோட முதல் சீடன் - பஷீரர் குரு. நான் போறேன். வணக்கம்."