
நான் கிளம்பினேன். ஒரு மரத்திற்குக் கீழே போய் உட்கார்ந்தேன். கூடு விட்டு கூடு பாயும் மகத்தான வித்தையை நானும் கற்றிருக்கலாம். இப்போது எனக்கு அது தெரியாது. ஒரு விஷயம். சீக்கிரம் நான் பணக்காரனாகலாம். அது என்னால் முடியும். நான் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். ஆச்சிரியம்! அந்த நோட்டு எரிந்து சாம்பலானது! நான் பதைபதைத்துப் போனேன். அப்போது ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. ஒரு வண்டு என் முன்னால் வந்து உட்கார்ந்தது. வண்டு சொன்னது! "சீக்கிரம் நீ பணக்காரனாக முடியாது. சொந்த ரூபாயை இரட்டிப்பாக்கி பணக்காரனாகலாம்னு நினைச்சா... இப்போ புரியுதா...? அது நெருப்புல எரிஞ்சு சாம்பலாயிடும். மற்றவர்களுக்கு நன்மை செய்யணும். மற்றவர்களோட ரூபாய் நோட்டுகளை இரட்டிப்பாக்கணும். பத்துல ஒண்ணு நீ எடுத்துக்கலாம். ஒரு அப்பிராணி ஏழையோட பத்து ரூபா நோட்டை இரட்டிப்பு ஆக்கினா, ரூபாய் சொந்தக்காரனுக்கு பத்தொன்பது ரூபா கொடுத்தா போதும். கூடு விட்டு கூடு பாயுற மந்திரந்தை நான் போயிட்டு வந்த பிறகு சொல்லித் தர்றேன். அதுவரை உலகத்திற்கு நீ நன்மை செய்யணும். சுபம்!" வண்டு பறந்து போனது. அது சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து சொன்னது: "பாவம் செய்தவர்களின் நோட்டு எரிந்து சாம்பலாகும். சம்பவங்களையெல்லாம் கோர்த்து ஒரு கதை போல எழுதி உலக நன்மைக்காக விளம்பரப்படுத்து. சங்கரர் குருவோட சன்னிதிக்கு நான் புறப்படுறேன். மீண்டும் சுபம்!" நான் நீண்ட நேரம் தனியாகவே உட்கார்ந்திருந்தேன். பிறகு வீட்டிற்குப் புறப்பட்டேன். இப்படித்தான் நான் சித்தராக ஆனேன். அதனால் நீங்கள் ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம். ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அனுப்ப வேண்டாம். ஐந்து, பத்து, நூறு, ஆயிரம் இப்படி அனுப்பலாம். ஒரு வாரத்திற்குள் இரட்டிப்பு நோட்டு உங்களுக்குக் கிடைக்கும். ஏழை முஸ்லீம் பெண்கள் ஐந்து ரூபாய் நோட்டு அனுப்பி வைத்தால், இலவசமாக இரட்டிப்பு செய்து பணம் தரப்படும். இப்படிக்கு, வைக்கம் முஹம்மது பஷீரர் குரு. பின் குறிப்பு: ஒரு இன பற்று இங்கு எப்படியோ நுழைந்துவிட்டது. ஆனால் இன பற்று இருப்பது நல்லது அல்ல. ஆதலால் ஏழைகளாக இருக்கும் எல்லா ஜாதியை சேர்ந்த பெண்களுக்கும் இலவசமாக ஐந்து ரூபாய் நோட்டு இரட்டிப்பு செய்து தரப்படும். இது ஏழைகளுக்கு மட்டுமே. மற்ற்வர்களிடம் பத்தில் ஒரு சதவிகிதம் கட்டணமாக வசூலிக்கப்படும். அவரவர்கள் நிலைக்கேற்ப ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்கவும். ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அனுப்ப வேண்டாம். பணத்தை அனுப்பி வைத்து விட்டு காத்திருக்கவும். ஒரு வாரம் கழித்தும் இரட்டிப்பு பணம் உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால்... நீங்கள் பாவாம் செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் உங்களின் ரூபாய் நோட்டு எரிந்து விட்டது என்று எண்ணிக் கொள்ளவும். ஒரு அப்பிராணி ஏழை முஸ்லீம் பெண் ஐந்து ரூபாய் நோட்டை அனுப்பி வைத்து விட்டு, ஒரு வாரம் கழிந்த பிறகு பத்து ரூபாயாக அது திரும்பி வரவவில்லையென்றால் பாவம் செய்ததன் காரணமாக அந்த நோட்டு எரிந்து சாம்பலாகிவிட்டது என்று எண்ணிக் கொள்ள வேண்டும். பாவத்தில் இருந்து முதலில் விடுதலை ஆக பார்க்க வேண்டும். குனிந்து தெளபா செய்து தொழுது நல்லவளாக முயற்சிக்க வேண்டும். அப்படியானால் ரூபாய் நோட்டு அனுப்பி வைப்பதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. நோட்டு இரட்டிப்பாக்கி தொகை அதிகமாகக் கிடைக்கிறது. நாம் பாவம் செய்திருக்கிறோமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பிறகு... இன்னொரு விஷயம். எல்லோருமே பாவம் செய்தவர்கள் இல்லை. ஆதலால், அதிர்ஷ்டத்தை எதிர்பாருங்கள். பாவம் செய்தவர்களின் ரூபாய் நோட்டு எரியும். பாவம் செய்யாதவர்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும். அதனால் ஒவ்வொருவரும் நல்ல மனதுடன் பணத்தை அனுப்பி வைக்கவும். ஏழை பெண்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் - யாராக இருந்தாலும் ஐந்து ரூபாய் நோட்டுக்களை அனுப்பி வையுங்கள்... நான் தான் சொன்னேனே, இலவசமாக இரட்டிப்பு பணத்தை அனுப்பி வைக்கிறேன். உலகம் நன்றாகட்டும். சுபம். இப்படிக்கு, இமயமலையின் உச்சியில் அய்யாயிரம் வருடங்களாக ஒற்றைக் காலில் தவம் இருக்கும் சங்கரர் குருவின் மூத்த சீடர். கூடு விட்டு கூடு பாயும் சித்தர் ராமர் குருவின் முதல் சீடன், பஷீரர் குரு. மங்களம். சுபம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook