நிலவைப் பார்க்கிறபோது... - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6833
அவர் சில போலீஸ்காரர்களுடன் வந்து என்னுடைய வீட்டைச் சோதனை செய்ததோடு நிற்காமல், என்னுடைய தாய், தந்தை, சகோதரி, சகோதரர்கள் - எல்லோரையும் மிரட்டி கஷ்டப்படுத்தவும் செய்திருக்கிறார். என் வலது கையை அடித்து ஒடித்து விடுவதாக மிரட்டிவிட்டுப் போனதும் இதே இன்ஸ்பெக்டர்தான்.) நான் சொன்னேனே – அவர்களுக்குத் தேர்வில் தோற்று விடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. அவர்கள் படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருந்தவர் ஒரு பாதிரியார். தேர்வுக்கான கேள்வித்தாள்கள் பாதிரியாரின் மேஜைக்குள்ளோ அல்லது அலமாரியிலோதான் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அந்த மாணவர்கள் வந்தார்கள். சமையல்காரனின் துணையுடன் அவர்கள் அலமாரிக்கும் மேஜைக்கும் கள்ளச்சாவி தயாரித்தார்கள். இரவில் அந்தப் பாதிரியார் சாப்பிடும் நேரத்தில் அவர்கள் அவரின் அறைக்குள் நுழைந்தார்கள். மேஜையையும் அலமாரியையும் திறந்தார்கள். கேள்வித்தாள்களை மட்டுமல்ல - இன்னொன்றையும் அவர்கள் பார்த்தார்கள். ஒரு பெரிய கண்ணாடிப் பை நிறைய ரூபாய் நோட்டுகள்! ஒரு ஆறாயிரம் ரூபாய் இருக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள். மாணவர்கள் கட்டிய ஃபீஸாக அது இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் சம்பளப் பணமாகவும் இருக்கலாம்.
அவர்கள் கேள்வித்தாள்களில் இருந்து தலா ஒரு பிரதி எடுத்தார்கள். பணத்தை எடுக்கவும் அவர்கள் தீர்மானித்தார்கள். இருந்தாலும், எங்களிடம் இதுபற்றி எதுவும் அவர்கள் கேட்கவில்லை. பண விஷயத்தை மட்டும் எங்களிடம் கேட்ட பிறகு எடுக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் கடைசியில் வந்தார்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது இரவு ஒன்பது மணி. இது முடிந்ததும் நேராக எங்களிடம் வந்தார்கள். இந்த விஷயம் குறித்து ஒன்பது பேர்களின் கருத்தையும் தெரிந்தாக வேண்டும். என்னுடைய சொந்தக் கருத்து, அந்தப் பணத்தை இவர்கள் எடுக்கக்கூடாது என்பதுதான். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்குத் தேவை இருக்கத்தான் செய்யும். அதற்காக அதை எடுக்க வேண்டும் என்று கூறும் தைரியம் எனக்கு இல்லை. நான் இந்த விஷயத்திற்கு எதிரானவன் என்பதைத் தெளிவாகக் கூறவும் செய்தேன். அரசியல் தொண்டர்களை ஆட்டிப்படைத்த போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டரையோ - என்ன செய்தாலும் அதற்கு எதிராக நிச்சயம் நான் ஒன்றும் கூறமாட்டேன். ஆனால், இந்த ஆறாயிரம் ரூபாய் விஷயத்தை எடுத்துக்கொண்டால், இது ஒரு வகையில் கொள்ளையடிப்பது என்ற இனத்தில் வருகிறதே ! சரி... அது போகட்டும். பத்திரிகை மூலம் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக வரவே செய்கிறது. இயக்கத்திற்குத் தேவையான அவசிய செலவுக்குத் தாராளமாக அந்தப் பணம் போதும். பிறகு எதற்கு அந்த ஆறாயிரம் ரூபாய்?
ரிவால்வர்கள் வாங்க...கத்திகள் வாங்க...வெடிகுண்டுகள் தயாரிக்க...
ஏற்கெனவே எங்களிடம் இரண்டு ரிவால்வர்கள் இருந்தன. சில கத்திகளும் இருக்கவே செய்தன. இவையே அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் நல்லதுதான். என்ன இருந்தாலும் இது ஒரு பெரிய விஷயமாயிற்றே! ஒன்பது பேரும் ஒன்றாக அமர்ந்து இது பற்றிப் பேசி ஒரு தெளிவான முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். இரவு ஒரு மணிக்கு எங்களின் கூட்டம் நடைபெற்றது. தனிமையான கடற்புறத்தில் இந்தக் கூட்டம் நடந்தது.
நான் ஒரு பழைய சைக்கிளில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். பொதுச் சாலையைவிட்டு, மணல் ரோட்டின் வழியாக ஒரு ஃபர்லாங் தூரம் செல்ல வேண்டும். அங்கே பெரிய பாறைகள் நிறைய இருக்கும். அலைகள் கடலில் வந்து மோதும் ஓசையைத் தவிர வேறு எந்த சத்தத்தையும் அங்கு கேட்க முடியாது. முழு நிலவு என்று சொன்னால் உண்மையிலேயே முழு நிலவு அதுதான்.
நாங்கள் ஒன்பது பேரும், மாணவர்கள் நான்கு பேரும் - மொத்தம் பதின்மூன்று பேரும் அந்த ஆறாயிரம் ரூபாயை எடுக்கும் விஷயத்தைப் பற்றிப் பேசினோம். காரசாரமான விவாதம் நடைபெற்றது. வாய் வாக்குகள் முற்றின. அந்த இடமே சிறிது நேரத்தில் ஒரு போராட்டக் களமாக மாறியது. அப்போது எங்களைப் பற்றித் துப்பு தந்து காட்டிக்கொடுத்த இன்றைய அமைச்சர் சொன்னார்:
"நீங்க ஒரு பயந்தாங்கொள்ளி மிஸ்டர். ஒரு பெரிய பிரச்சினை நம்ம முன்னாடி வந்து நிக்கிறப்போ, நீங்க பயந்தாங்கொள்ளியா மாறிடுறீங்க..." - என்னைப் பார்த்து அவர் சொன்ன வார்த்தைகள் இவை.
நான் சொன்னேன்: "இந்த ஆறாயிரம் ரூபாயைத் திருடக்கூடாது. அதைத் திருடுற அளவுக்கு அப்படி என்ன தேவைன்றது என்னோட வாதம். இதைத்தான் நீங்க பயந்தாங்கொள்ளித்தனம்னு சொல்லுறீங்க. அப்படியே இருக்கட்டும். நம்மிடம் நிறைய குண்டுகளும், கத்திகளும் இருப்பது நல்லதுதான். ஆனால், நாம் யாரைக் கொல்லப்போகிறோம்? அரசாங்கத்தோட சண்டை போட்டு அதிகாரத்தைப் பிடிக்கிறது நம்மளோட இலட்சியம் இல்ல... இப்போ இருக்குற அரசியல் கட்சிக்கு நாம் ஒருவிதத்துல உதவி செய்றோம்ன்றதுதான் உண்மை. போலீஸ் அவர்களை ரொம்பவும் துன்பப்படுத்துது. அவர்களுக்குக் கஷ்டம் தந்தால், போலீஸ்காரர்களுக்குக் கஷ்டம் கொடுக்க ஆள் இருக்காங்கன்றதை போலீஸ்காரங்க புரிஞ்சுக்கணும். இதுதானே நம்மோட குறிக்கோள்!"
விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் அந்த கொள்ளையடிக்கும் விஷயத்திற்கு எதிராகத்தான் பேசினார்கள். அதற்குப் பிறகு கூட்டம் தமாஷூம், சிரிப்பும் உள்ளதாக மாறியது. இரண்டு மணிக்கு எல்லோரும் தனித்தனியே பிரிந்தனர். சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டதால், நான் அந்த இடத்தை விட்டுப் போகவில்லை. தனியாக இருப்பது என்பது எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்த விஷயம். அதனால் நான் அங்கேயே இருந்தேன்.
எனக்கு முன்னால் எல்லையற்று விரிந்து கிடக்கும் கடல். எனக்குப் பின்னால் இருக்கும் நகரத்தையே, சொல்லப்போனால் நான் மறந்துவிட்டேன். நிலவொளிக்கென்றே இருக்கிற... அதை என்ன சொல்வது? ஒரு வகையான அழகும்... ஒரு பயங்கரத்தன்மையும்... இவை இரண்டும் சேர்ந்து உண்டாக்கும் ஒரு புது அனுபவமும்... நான் அதில் முழுமையாக மூழ்கிப்போய் கடலையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். கடல் அலைகள்... ஒன்றன்பின் ஒன்றாக... பயங்கர இரைச்சலுடன் கரையை வந்து மோதிக் கொண்டிருந்தன. இரைச்சல், முழக்கம், பதறல் - எல்லாமே கலந்த சத்தங்கள்! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கும் ஒரு விஷயம் இது. உயிர்கள் வருகின்றன... போகின்றன... ஆனால், இந்தக் கடலின் ஆரவாரமும், அலைகளும் மட்டும் எந்தக் காலத்திலும் நிலைபெற்று அப்படியே நின்றுகொண்டிருக்கும். இதற்கு மட்டும் என்றும் ஒரு முடிவே இல்லை...