நிலவைப் பார்க்கிறபோது...
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6833
நிலவைப் பார்க்கிறபோது... இது ஒரு பேய்க் கதை. ஆமாம்... பேய்க் கதை என்றால் என்ன? நான் இதைப்பற்றி விவரித்துக் கூற விரும்பவில்லை. உங்கள் எல்லோருக்கும் அனேகமாக நன்றாகத் தெரியும். மனித வாழ்க்கை வரலாற்றில்... ஏன்? சரித்திரம் ஆரம்பமான காலத்திலிருந்தே பேய்க் கதைகளும், பேய்களும்... நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? இங்கே ஒரு கேள்வி எழுகிறது: பேய் என்றால் என்ன?
பேய் என்ற ஒன்று இருக்கிறது... இல்லாவிட்டால்... இல்லை...
இன்னும் ஒரு கேள்வியும் இருக்கிறது: பேய்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?... இந்தக் கேள்வி கேட்கப்படும்பொழுது நான் பதிலே கூறாமல் வெறுமனே மவுனமாக அமர்ந்துவிடுகிறேன். ஒரு முடிவுக்குமே வரமுடியாத சில அனுபவங்கள் எனக்கு இருக்கின்றன. மனித நடமாட்டமே இல்லாத வனாந்தரப் பகுதிகளில்...மலைமுகடுகளில்... குகைகளில்...சுடுகாடுகளில்... அழிந்துபோன நகரத்தின் மீதி இருக்கும் பகுதிளில்... ஆட்கள் வசிக்காத வீடுகளில்...கடற்கரையில்... நிலவு காய்ந்து கொண்டிருக்கும் தனிமையான சாலையில்...
நான் இப்போது சொல்லப்போவது கடற்கரையில் நடந்த ஒரு சம்பவத்தை. நான் பலமுறை மண்டையைப்போட்டுக் குழப்பிக் கொண்டு பார்க்கிறேன். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை என்பதே உண்மை. தெளிவாக விளக்க முடியாத ஒரு சம்பவம் அது. ஒரு வேளை இந்த சம்பவம் என்னுடைய கற்பனையாக இருக்குமோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால் இது சத்தியமாக நடந்த ஒரு நிகழ்ச்சி என்று நான் தீர்க்கமான குரலில் கூறுகிறேன். ஆனால், இது கற்பனையாக இருக்கக்கூடாதா என்று நான் நினைக்கிறேன் என்பதென்னவோ உண்மை. நிலவை நான் வானத்தில் பார்க்கிறபோது...எனக்கு அந்தச் சம்பவம் ஞாபகத்தில் வந்துவிடுகிறது.
அப்போது நான் துடிப்பான இளைஞனாக இருந்தேன். ஒரு தீவிரவாதக் கும்பலின் தலைவனாக நான் அந்தக் காலகட்டத்தில் இருந்தேன். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், அஃப்ஸாடுல்லாகான், சந்திரசேகர் ஆஸாத் - இப்படிப்பட்ட தீவிரவாத இயக்கம் அது. கட்டாரி, ரிவால்வர், வெடிகுண்டுகள், இரத்தம் சிந்துதல், அடிமை இந்தியாவை விடுதலை அடைய வைக்கும் போராட்டம் - இதுதான் அந்த இயக்கம். அதில் கிட்டத்தட்ட முன்னூறு பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். நகரத்தில் இருக்கும் பெரிய ரவுடிகள் சிலரும் அதில் இருந்தனர். ரிக்ஷாவண்டி ஓட்டுபவர்கள், ஹோட்டலில் வேலை செய்பவர்கள், சமையல்காரர்கள் - இவர்களும் அந்த இயக்கத்தில் இருந்தார்கள்.
எங்களுக்கென்று நெருப்பு கக்கும் செய்திகளை வெளியிடும் ஒரு பத்திரிகையும் இருந்தது. நான்தான் அந்தப் பத்திரிகையின் அதிபர். இன்று மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கும் பெரிய எழுத்தாளர்கள் பலர் அன்று அந்தப் பத்திரிகைக்குக் கட்டுரைகள் அனுப்பி வைத்து உதவி இருக்கிறார்கள். நான்தான் சொன்னேனே - அது ஒரு நெருப்புப்பொறி பறக்கும் பத்திரிகை என்று. இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் சூடான கட்டுரைகள் அதில் ஏராளமாக வரும். மொத்தம் நாங்கள் அச்சடிப்பதே ஆயிரம் பிரதிகள்தான். ஆனால், அலுவலக ஃபைலில் வைப்பதற்குக் கூட ஒரு பிரதி மீதி இருக்காது. அதற்காக ஏற்கனவே யாராவது காசு கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கும் பத்திரிகையைக் கேட்டு வாங்கிக்கொண்டு வருவார்கள்.
ஒரு தீவிரவாத இயக்கம் சம்பந்தப்பட்ட பத்திரிகை அது என்று யாருக்கும் தெரியாது. அந்தத் தீவிரவாத இயக்கம் பல காரியங்களை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறது என்பது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். போலீஸீம், சி.ஐ.டி.யும் அந்தத் தீவிரவாத இயக்கத்தைப் பற்றி எல்லா இடங்களிலும் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
அந்தத் தீவிரவாத இயக்கத்திற்கு திட்டம் போட்டுச் செயல்படும் பெரிய காரியங்களோ, மிகப் பெரிய இலட்சியங்களோ கிடையாது. அது ஒரு ரகசியமாகச் செயல்படும் இயக்கம். விஷயம் அவ்வளவே. அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அதற்குக் கிடையாது... ஏற்கனவே ஒரு அரசியல் கட்சி இருந்தது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோள். இதை அவர்கள் சொல்லி நாங்கள் செய்யவில்லை. எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இதை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். எங்களை இப்படியொரு காரியத்தில் இறங்கச் செய்ததற்குக் காரணம் என்ன தெரியுமா? அரசாங்கத்தின் பயங்கரமான கொலை நடவடிக்கைகளும், போலீஸின் ஈவு இரக்கம் இல்லாத - காட்டு மிராண்டித்தனமான செயல்களும்தான். அரசியல் காரியங்களுக்காகப் போராடுபவர்களை அவர்கள் அடித்து உதைப்பதோடு நிற்பதில்லை. பற்களை உடைப்பது, கை - கால்களை அடித்து நொறுக்குவது, கண்களைக் குருடாக்குவது, அரசியல் போராளிகளின் தாய், மனைவி ஆகியோரை மானபங்கம் செய்வது... இப்படிப் பல காரியங்களை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட கொடுமையான செயல்களைச் செய்து கொண்டிருந்த போலீஸ்காரர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் பட்டியல் எங்களிடம் தயாராக இருந்தது. நாங்கள்... இந்த முன்னூறு பேர் நினைத்தால் எது வேண்டுமானாலும் அவர்களைப் பண்ண முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். எந்த விதத்தில் அவர்களுக்கு அதை புரிய வைக்க முடியுமோ, அந்த வகையில் புரியவைத்தோம்.
கடைசியில்... நான் சொல்ல வந்தது அது ஒன்றுமல்ல. இந்த முன்னூறு பேர்களில் முக்கியமான ஒன்பது பேர் இருந்தோம். அதில் ஒருவன் நான் சொன்ன அரசியல் கட்சியில் ஏற்கனவே சேர்ந்திருந்தான். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை... அந்த அரசியல் கட்சித் தலைவரும் அவனும் ஒன்று சேர்ந்து... எங்களைப் போலீஸில் காட்டிக்கொடுத்து விட்டார்கள். எங்களின் பத்திரிகை அவர்கள் கையில் சிக்கியது. எங்களைப் போலீஸ் கைது செய்தது. எங்களை நாடு கடத்திவிடத் தீர்மானித்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. வழக்கு பெரிதாக எங்கள்மேல் போட முடியவில்லை. அரசாங்கமே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் - கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் மிகப் பெரிய பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளாக இருந்ததே . அது போகட்டும். எங்களைப் பற்றி போலீஸீக்குத் துப்பு கொடுத்த அந்த ஆள் இன்று ஒரு அமைச்சர். அவன் பெயர்...!
நான் சொல்ல வந்தது இதுவல்ல. கைது செய்யப்படுவதற்கும், வழக்குப் பதிவு செய்வதற்கும் முன்பு தீவிரவாத இயக்கத்தின் செயல்கள் படுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான்தான் சொன்னேனே - ஏராளமான மாணவர்களும் இதில் பங்கு பெற்றிருந்தார்கள் என்று. அவர்களில் நான்கு பேர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். அவர்கள் - சொல்லப்போனால் ஒழுங்காகப் படிப்பதே இல்லை. தேர்வு நெருங்கிவிட்டது. நிச்சயம் அதில் தோற்றுப் போவோம் என்பது அவர்களுக்குத் தெரியும். (நான் கூறும் இந்த நான்கு பேரில் ஒருவர் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.