கன்யாகுமரி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7590
"செரியான் தோமஸ், நீ வத்சலா ஜானை மனைவியா ஏத்துக்கிறியா?" என்று ஃபாதர் கேட்டபோது, செரியான் சிந்தனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். தேன் நிலவிற்கு எங்கே போவது? கன்யாகுமரி? தேக்கடி?
"கன்யாகுமரி"- செரியான் சொன்னான்.
ஃபாதர் செரியானை உற்றுப் பார்த்தவாறு தன் குரலை உயர்த்தி மீண்டும் தான் கேட்ட கேள்வியையே இரண்டாம் முறையாகக் கேட்டார்.
சற்று பின்னால் நின்றிருந்த மைத்துனன் பேபிச்சன் சுண்டு விரலால் கோட்டை இலேசாக நோண்டியவாறு செரியானை அழைத்தான். செரியானின் புது மனைவி கடைக்கண்ணால் அவனைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
செரியான் அதிர்ந்து போய் தன்னைச் சுற்றிலும் பார்த்தவாறு சொன்னான்:
"ஏத்துக்குறேன்!"
அவன் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். கன்யாகுமரியில் கடல் இருக்கிறது. விவேகானந்தர் பாறை இருக்கிறது. கிழக்கே உதிக்கும் சூரியனையும் மேற்கில் சூரியன் மறைவதையும் பார்க்கலாம். அங்கே இருக்கும் கேரளா விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்ளலாம் என்று பேபிச்சன் சொன்னான். அங்கிருக்கும் கேன்டீனில் நல்ல காப்பியும், இட்லியும் மசால் தோசையும் சாப்பாடும் கிடைக்கும்.
திருமணம் முடிந்தது.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் புறப்பட்டுப் போன பிறகு, செரியான், சித்தப்பா மகன் ஜோஸை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று சொன்னான்:
"ஹனிமூனை கன்யாகுமரியில் வச்சுக்குவோம்!"
"அப்படியே வச்சுக்குவோம். வேண்டாம்னு யாராவது சொன்னாங்களா என்ன?"-ஜோஸ் கேட்டான்.
"இல்ல..."- செரியான் சொன்னான்: "நான் மூணாறு, தேக்கடி எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தேன். ஆனா, கன்யாகுமரிதான் சரியா இருக்கும்!"
"அப்படின்னா சரி..."- ஜோஸ் சொன்னான்: "ஆனா, ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்தணும்னா, அதுக்காக நீ கன்யாகுமரி வரை போய் தேவையில்லாம காசைச் செலவழிக்கணுமா என்ன? நம்ம வீடே போதாதா?"
ஜோஸ், தான் சொன்னதற்கு செரியானின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
"அது போதும்... இல்ல?"-செரியான் கேட்டான்.
"நிச்சயமா"-ஜோஸ் சொன்னான்.
"பிறகு எதுக்கு எல்லாரும் தேன்நிலவு அது இதுன்னு போறாங்க?"-செரியான் கேட்டான்.
"டேய் முட்டாள்..." -ஜோஸ் சொன்னான்: "ஆரம்பத்துல கொஞ்ச நாட்களுக்கு கணவனுக்கும் மனைவிக்கும் மத்த தொழிலைப் பற்றி மட்டும்தான் நினைப்பு இருக்கும். அந்த விஷயத்துல தேவையில்லாம யாரோட தொந்தரவும் இருக்கக் கூடாதுன்றதுக்காகத்தான் தேன்நிலவுக்குப் போறது. இதே விஷயத்தை தைரியம் இருந்தா, வீட்லயே வச்சிக்கலாம்!"
"எந்தத் தொழில்?"-செரியான் கேட்டான்.
"டேய்... மத்த தொழில்..."-ஜோஸ் கண்களை இலேசாகச் சுருக்கியவாறு சொன்னான்.
"மத்த தொழில்னா?"-செரியான் கேட்டான்.
"போடா பொணமே"-ஜோஸ் சொன்னான்: "நீ போய் கார்ல ஏறு. இல்லாட்டி உன் பொண்டாட்டியை வேற யாராவது தள்ளிட்டு போயிடப் போறங்க!"
காரில் ஏறுவதற்கு முன்பு செரியான், ஜோஸை மீண்டும் தனியாக அழைத்துக் கொண்டு போய் இப்படிக் கேட்டான்:
"அப்போ தேன் நிலவுல நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருப்போம், இல்ல...?"
ஜோஸ் சொன்னான்: "இல்ல... முதலமைச்சர், சபாநாயகர், ஐ.ஜி., பள்ளி பாதிரியார்- எல்லாரும் கூட இருப்பாங்க!"
எல்லாம் முடிந்ததும் ஜோஸ் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்: "பெரியப்பாவும் பெரியம்மாவும் இளைய மகனை மடியை விட்டு இறக்காம வளர்த்தாங்க. ஆனா, ஒரு பொண்ணுக்குத் தாலியைக் கட்டிட்டு ஒருத்தன் கிடந்து நெளிறதை அவுங்க பார்க்கலியே!"
அன்று இரவு வத்சலாவின் வீட்டில் இருந்த படுக்கையறையில் அவளைக் கட்டிப்பிடித்து படுத்துக் கொண்டே செரியான் கேட்டான்:
"நம்மளோட தேன் நிலவுக்கு நாம எங்கே போகலாம்?"
வத்சலா காதல் மேலோங்க செரியானை நோக்கி சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு சொன்னாள்: "கன்யாகுமரிக்கு!"
செரியான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துவிட்டான். அவன் சொன்னான்: "நான் யோசிச்சதும் அதே இடம் தான். வத்சலா, உனக்கு கன்யாகுமரியை ரொம்பவும் பிடிக்குமா?"
பத்தாம் வகுப்பு படிக்கிறபோது, கன்யாகுமரிக்கு பள்ளியிலிருந்து சுற்றுலா போனதும், விவேகானந்தர் பாறையில் இருக்கும்போது கூட்டத்தில் அசோகன் என்ற உடன் படிக்கும் மாணவன் தன்னுடைய பாவாடையின் பின்பக்கத்தில் கையை நுழைத்ததையும் நினைத்துப் பார்த்த வத்சலா சொன்னாள்:
"அங்கே சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கலாம்ல. விவேகானந்தர் பாறை கூட அங்கே இருக்கு!"
"சரிதான்..."செரியான் சொன்னான்: "ஆனா, நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருப்போம்!"
"நாம ரெண்டு பேர் மட்டும்தான்னு சொல்றது அறைக்குள் மட்டும்தானே?"- வத்சலா சொன்னாள்: "கன்யாகுமரி முழுக்க எவ்வளவு ஆளுங்க இருக்காங்க!"
"நீ சொல்றது சரிதான்"- செரியான் சொன்னான்: "ஆனா, மூணு பக்கமும் கடல். நாம மட்டும் தனியா. நமக்கு அங்கே யாரையும் தெரியாது!"
"அதனால என்ன, நம்ம ரெண்டு பேரு இருந்தாலே போதும்"- என்று சொன்ன வத்சலா, செரியானுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் படுத்தாள்.
சிறிது நேரம் சென்றதும், செரியான் கன்யாகுமரியைக் கனவு காண ஆரம்பித்தான். கேரளா விருந்தினர் மாளிகையின் மொட்டை மாடியில் அவன் மட்டும் தனியே நின்றிருக்கிறான். ஆகாயத்தில் மேகங்கள் மெதுவாக நீங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு மத்தியில் நிலவும் நகர்கிறது. திடீரென்று கிழக்குப் பக்கத்திலிருந்து யாரோ தள்ளி உயர்த்திவிட்டதைப்போல சூரியன் உதயமாகி மெதுவாக மேலே உயர்கிறான். அவன் ஆச்சரியத்துடன் மேற்குத் திசையில் பார்க்கிறான். அங்கேயும் சூரியன் அதிவேகமாக உதித்து மேலே எழுந்து கொண்டிருக்கிறான். யாரோ அழைக்கும் குரலைக் கேட்டு அவன் பார்க்கிறான்- வத்சலா காற்றில் தன் கூந்தலைப் பறக்க விட்டவாறு உரத்த குரலில் அழுதவாறு அவனுக்கு நேராக கடலின் நடுவில் ஓடி வருகிறாள். அவளுக்குப் பின்னால் சூரியன் ஒரு வண்டிச் சக்கரத்தைப் போல வேகமாகப் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
செரியான் திடுக்கிட்டு உறக்கம் கலைந்து எழுந்து, விளக்கைப் போட்டான். வத்சலா அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். குறட்டைச் சத்தம் வேறு. அவளின் கன்னித்தன்மையை கன்யாகுமரியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான் அவன். அதே நேரத்தில் அவனுக்கு மிகவும் பிடித்தமான வார இதழில் பிரசுரமாகும் 'ஆரோக்கிய பகுதி' அவனின் மனதில் திடீரென்று வந்து நின்றது. கன்யாகுமரியில் கன்னித்தன்மை. அவனுக்கே வெட்கமாக இருந்தது. ஒரு நிமிடம் அவன் வத்சலாவின் மார்பகங்களைப் பார்க்க நினைத்தான். ஆனால் புடவையை மார்புப் பகுதியிலிருந்து அகற்றுவதையும், ப்ளவுஸின் பொத்தான்களை அவிழ்ப்பதையும் நினைத்துப் பார்த்தபோது, அவன் எதுவுமே செய்யாமல் வெறுமனே வத்சலாவைப் பார்த்து படுத்தவாறு கனவுகளே இல்லாமல் உறங்கத் தொடங்கினான்.
சங்ஙனாசேரி, திருவல்லா, கொட்டாரக்கரை, கிளிமானூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களைத் தாண்டி டாக்ஸி களியிக்காவிளையை அடைந்தபோது, டிரைவர் சொன்னார்: "இதுதான் கேரளா எல்லை!"