கன்யாகுமரி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7590
செரியான் அதிர்ந்தவாறு கேட்டான்: "எல்லையா? அப்ப நாம கேரளத்துக்கு வெளியே போறோமா?"
"ஆமா"- டிரைவர் சொன்னார்: "இந்த இடத்தைத் தாண்டிட்டா இனி தமிழ்நாடுதான்!"
"அப்படியா?"- செரியான் மெதுவான குரலில் கேட்டான்: "அப்போ கன்யாகுமரி கேரளத்துல இல்லியா?"
சாலையையே ஆக்கிரமித்துக்கொண்டு வேகமாகப் பாய்ந்து வந்த ஒரு தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பஸ்ஸுக்கு வழிவிட்ட டிரைவர் கோபாலன் நாயர் பின்னால் திரும்பி செரியானை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார்.
வத்சலா, செரியானின் செல்லப் பெயரைச் சொல்லி அழைத்தவாறு சொன்னாள்: "பாப்பச்சா... கன்யாகுமரி தமிழ்நாட்டுலதானே இருக்கு?"
"எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு"-செரியான் சொன்னான்.
வத்சலா செரியானின் தோளில் தங்க வளையல்கள் சப்திக்கின்ற ஒரு கையைப் போட்டவாறு சொன்னாள்: "அதனால என்ன? நான் கூட இருக்கேன்ல?"
அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு வெளியே பார்த்தான். "அப்போ நாம இப்ப பார்க்குறது எல்லாம் தமிழ்நாடுதான் இல்ல...?"
கோபாலன் நாயர் ஒரு சைக்கிள்காரனைப் படுவேகமாக ஒதுக்கிவிட்டு, இன்னொரு முறை திரும்பி செரியானைப் பார்த்தார்.
தக்கலை, மார்த்தாண்டம், நாகர்கோவில், சுசீந்திரம் ஆகிய ஊர்களைக் கடந்து அவர்கள் கன்யாகுமரியை அடைந்தார்கள். அப்போது மணி ஆறு.
அறை எடுக்க கேரளா விருந்தினர் மாளிகை கவுண்டரில் நின்றபோது, செரியான் மேனேஜரிடம் கேட்டான்: "சூரியன் மறைஞ்சிடுச்சா?"
"முகவரியைச் சரியா எழுதுங்க"- மேனேஜர் சொன்னார்.
அறைக்கான முன்பணத்தை வாங்கும்போது மேனேஜர் சொன்னார்: "உங்களோட அதிர்ஷ்டம். அறை உங்களுக்குக் கிடைச்சது. காரணம்- இப்ப சீஸன். பயங்கர கூட்டம்."
வத்சலாவை ஓரக் கண்ணால் பார்த்தவாறு, அதே நேரத்தில் வத்சலாவிற்குக் கேட்கிற மாதிரி, தாழ்ந்த குரலில் அந்த ஆள் செரியானிடம் கேட்டார்: "ஹனிமூனுக்குத்தானே வந்திருக்கீங்க?" இதைக் கேட்டுவிட்டு கண்களைக் குறுக்கியவாறு அவர்களைப் பார்த்தார் மேனேஜர்.
"ஆமா.."- செரியான் சொன்னான்: "தேன் நிலவுக்கு கன்யாகுமரி நல்ல இடம்தானே?"
"நிச்சயமா"- அந்த ஆள் சொன்னார்.
"ஆனா, எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு"- செரியான் சொன்னான்.
அந்த ஆள் செரியானை உற்று பார்த்துவிட்டு கள்ளத்தனமாக ஒரு சிரிப்பை உதிர்த்தவாறு சொன்னார்: "பயப்படாதீங்க. இந்தியாவிலேயே ரொம்ப ரொம்ப நல்ல இடம் இது. தேன்நிலவுக்கு உண்மையிலேயே பொருத்தமான இடம் கன்யாகுமரிதான்!"
அவர்களுக்கு மேல் மாடியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அறையில் இருந்து ரூம் பாய் போனதும், வத்சலா கட்டிலில் விழுந்தவாறு சொன்னாள்: "ஓ... எப்படியோ நாம கன்யாகுமரிக்கு வந்து சேர்ந்துட்டோம். மனசுல ரொம்பவும் உற்சாகம் தோணுதுல்ல?"
செரியான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருந்தான்.
படுக்கையில் விரிக்கப்பட்டிருந்த வெள்ளை நிற விரிப்பைத் தட்டி செரியானை அழைத்த வத்சலா சொன்னாள். "வாங்க, பாப்பச்சா... கொஞ்ச நேரம் இங்கே படுத்தா, களைப்பெல்லாம் இருந்த இடம் தெரியாமப் போயிடும்... வாங்க!"
செரியான் ஜன்னலருகில் இருந்து திரும்பி வந்து வத்சலாவுக்குப் பக்கத்தில் வந்து நின்று குனிந்தவாறு மெதுவான குரலில் அவளிடம் சொன்னான்: "இது கன்யாகுமரி மாதிரி தெரியல. நாம வேற எங்கேயோ இருக்கோம். வத்சலா, எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு!"
வத்சலா கட்டிலைவிட்டு எழுந்து நின்று செரியானை மனக்கிலேசத்துடன் பார்த்தாள்.
செரியான் கேட்டான்: "அந்த டாக்ஸி போயிருக்குமா?"
வத்சலா கேட்டாள்: "எதுக்கு பாப்பச்சா?"
செரியான் சொன்னான்: "நாம திரும்பிப் போயிடுவோம்."
வத்சலா அவனைப் பார்த்து கேட்டாள்: "திரும்பிப் போறதா?"
"ஆமா..."-செரியான் சொன்னான்: "எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு. இது கன்யாகுமரியே இல்ல. யாரோ நம்மளை ஏமாத்தி இருக்காங்க."
திடீரென்று தமிழ்நாட்டில் பொதுவாக இல்லாத ஒன்றான பவர் கட்டால், அறையில் இருந்த பல்புகள் அணைந்தன. கன்யாகுமரியே இருட்டில் மூழ்கியது. கடலை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களின் விளக்குகள் தந்த வெளிச்சத்தில் கடற்கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் சத்தம் எழுப்பினர்.
செரியான் உரத்த குரலில் அழுதான்.
இரண்டாவது முறையாக அவன் அழுதபோது, அவனின் வாயை ஒரு கையால் மூடினாள் வத்சலா.
அவள் தன் கையை எடுத்தபோது, செரியான் வத்சலாவைக் கட்டிப் பிடித்தவாறு கேட்டான்: "நாம தற்கொலை பண்ணிக்கலாமா?"
வத்சலா தலையை ஆட்டினாள்.
இருட்டுக்கு மத்தியில் படிகளில் இறங்கி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த மேனேஜரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, அவர்கள் கைகளைக் கோர்த்தவாறு வெளியே இறங்கினார்கள்.
"பயங்கர இருட்டு, கவனமா இருக்கணும்"- மேனேஜர் சொன்னார்.
அவர்கள் கடற்கரையை நோக்கி நடந்தார்கள்.
அடுத்த நாள் காலையில் ஒரு வாலிபனின் பிணமும், ஒரு இளம் பெண்ணின் பிணமும் கரையில் ஒதுங்கின.
அதைப் பார்த்து நின்று கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில் காலையில் நடப்பதற்காக வந்த செரியானும், வத்சலாவும் இருந்தனர்.
செரியான் வத்சலாவிடம் சொன்னான்:
"பார்க்கவே ரொம்பவும் கஷ்டமா இருக்கு. இல்ல?"
வத்சலா சொன்னாள்: "ஆமா, பாப்பச்சா, நாமளும் இப்படித்தானே கிடக்குறதா இருந்தோம்!"
செரியான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
இறந்தவர்களுக்காக ஒரு சிறு பிரார்த்தனை பண்ணிய வத்சலா முதல்நாள் இரவு நடைபெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள்.
கடற்கரையில் இருந்த ஆட்கள் முழுவதுமாகப் போகும் வரை செரியானும் வத்சலாவும் மணலில் காத்திருந்தார்கள். கடற்கரை ஆட்களே இல்லாமல் அமைதியான பிறகு, வத்சலா செரியானை எழுந்திருக்கச் சொன்னாள்.
"நாம எப்படி தற்கொலை பண்றது?"-செரியான் கேட்டான்.
"நான் சொல்லித் தர்றேன்"-வத்சலா சொன்னாள்.
பிறகு நீச்சல் போட்டியிலும், பாரம் தூக்குவதிலும், மலை ஏறுவதிலும் ஆறு வருடங்கள் தொடர்ந்து மாவட்ட அளவில் சேம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் வத்சலா, செரியானைச் சுமந்தவாறு விவேகானந்தர் பாறையை நோக்கி நீந்தினாள். செரியான் கொஞ்சம் உப்பு நீரைக் குடித்தான்.
விவேகானந்தர் பாறையை அடைந்தபோது, வத்சலா தன் உடம்பில் இருந்த ஆடைகளைக் கழற்றினாள். செரியானையும் ஆடையை அவிழ்க்கும்படி சொன்னாள். தன் ப்ராவின் கொக்கியை மட்டும் வத்சலா கழற்றவில்லை.
"பாப்பச்சா... இந்தக் கொக்கியை கொஞ்சம் நீக்குங்க... சாதாரணமா தொட்டாலே அது விட்டுடும்..."
செரியான் நடுங்குகின்ற விரல்களுடன் சில நிமிடங்கள் கஷ்டப்பட்டு ப்ராவின் கொக்கிகளைக் கழற்றினான்.
அது முடிந்ததும், உப்பு நிறைந்த அலையும் நுரையும் அவர்களை முத்தமிட்டுக் கொண்டிருக்க, வத்சலா, தன் கன்னித்தன்மை குடிகொண்டிருந்த இடத்தின் மென்மையையும், காதல் மேலோங்கியிருக்கும் சூனியத்தையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த மேகங்களுக்கு மத்தியில் சந்திரன் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததை வத்சலா பார்த்தாள். விவேகானந்தர் சிலைக்கு நேராக விரலை நீட்டிய வத்சலா கேட்டாள்: "இது யார் தெரியுமா?"