மலை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6837
தாங்க முடியாத துக்கத்தை வெளிப்படுத்துற மாதிரியான ஒரு அலறல் அது. ஒண்ணு ரெண்டு தடவை அந்த அலறல் சத்தம் பெரிசா கேட்டது. கொஞ்ச நேரத்துல அது தேம்பித் தேம்பி அழுவதா மாறி கடைசியில நின்னே போச்சு. என்னோட வாய் முழுசா வறண்டு போயிருந்துச்சு. குளிரா இருந்தாக்கூட என் உடம்பு பயங்கரமா வேர்த்து ஒழுகிச்சு. என்னால நிற்க முடியல - அப்படியே முடியாம உட்கார்ந்துட்டேன். ஆகாயத்துல ஒரே மேகக் கூட்டம். நிலவு காய்ஞ்சுக்கிட்டு இருந்த வராந்தாவுல பயங்கர இருட்டா இருந்துச்சு. நான் நடுங்கிக்கிட்டே அறைக்குள்ளே போனேன். விளக்கு எங்கே இருக்குன்னு தேடினேன். கையில அது அகப்படல. கட்டிலை இருட்டுல தடவி கண்டுபிடிச்சு, அதுல போய் ஒரு பிணத்தைப்போல படுத்துக் கிட்டேன். கொஞ்சம்கூட அசையாம, மூச்சு விடுறதுக்குக்கூட தைரியம் இல்லாம, ஜன்னல் வழியா பார்க்கக்கூட திராணி இல்லாம நான் அப்படியே கிடந்தேன். ஜன்னல்ல என்னென்னவோ உருவங்கள் தெரியிற மாதிரி எனக்கு தோணுச்சு. நான் மனசுக்குள்ளே வேண்டினேன்: இனிமேல் அந்த அலறல் சத்தம் கேட்கக்கூடாது! இனி கட்டாயம் அது என் காதுல விழக்கூடாது! இனி யாரும் அழவே கூடாது!”
அப்போது அந்தத் தேம்பி அழும் சத்தம் மீண்டும் கேட்டுச்சு. மெதுவா அது உயர்ந்து ஒரு கூப்பாடு மாதிரி ஆச்சு. ஒரு ஏக்கம், ஒரு அலறல்... கடைசியில அது இரத்தத்தை உறைய வைக்கிற அழுகையா மாறுச்சு. நான் சுய உணர்வே இல்லாத ஒரு மனிதனைப்போல கொஞ்சம் கூட அசையாம கட்டில்லே கிடந்தேன். நான் மனசுக்குள்ள பிரார்த்தனை செஞ்சேன். விரல்களை வாய்க்குள்ள விட்டுக்கிட்டு போர்வையை இழுத்து இறுக்கமா என்மேல போத்திக்கிட்டேன். அந்த அழுகை மீண்டும் இருட்டுக்கு மத்தியில ஒரு நெருப்பு மாதிரி உயர்ந்து பரவி கேட்டது.
அடுத்த நிமிடம் நான் கட்டிலை விட்டு எழுந்தேன். வியர்வை வழிஞ்சிக்கிட்டு இருந்த என்னோட முகத்தை வச்சிக்கிட்டு ஜன்னலின் இருட்டு வழியா வெளியே உற்றுப் பார்த்தேன். இப்போதைக்கு பயம் கொஞ்சம் குறைஞ்சிருந்தது. நான் ஜன்னல் கம்பிகளைப் பிடிச்சிக்கிட்டு செத்துப்போன நிலாவோட பிரேதம் இருக்குற அடர்ந்த காட்டையை பார்த்தேன். எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு அந்தப் பைத்தியத்தோட வீட்ல இருந்துதான் அந்த அலறல் சத்தம் கேட்டிருக்கு. அழுதது அந்தப் பைத்தியம்தான். அவனை யாரோ கொல்ல பார்க்குறாங்க... அவன்தான் ஏங்குறது, தேம்பித் தேம்பி அழுறது எல்லாமே. பாவம்... ஒண்ணுமே முடியாத பைத்தியம். புத்தி கெட்டுப் போனவன், யாருமே இல்லாதவன். பைத்தியத்தோட அறிவு கெட்டுப்போன மனசுதான் கவலைகளின் சாட்டையடியைத் தாங்க முடியாம அப்படி கூப்பாடு போடுது. அவனோட சுய உணர்வு இல்லாத உடம்பை யாரோ போட்டு அடிக்கிறாங்க. அவனை யாரோ கொல்ல பார்க்குறாங்க. பைத்தியம்னா வேதனை இருக்காதா என்ன? நான் வாசல் கதவைத் திறந்து வெளியே இறங்கி ஓடினேன். அந்தப் பைத்தியத்தோட வீட்டை நோக்கி ஓடினேன். அவனை நான் காப்பாத்தணும். அவனுக்கு உதவி செய்யணும். இருட்ல பாதை தெரியாம நதியோட ஓசையைக் கேட்டுக்கிட்டே நான் அந்த வீட்டைத் தேடிப் போனேன். முன்பக்க கதவு மூடி இருந்துச்சு. பாசி பிடிச்சுப் போயிருந்த ஒரு பழைய கதவு. நான் அதை உடைச்சு திறந்தேன். இருட்டுல அறைக்குள்ளே போய் நின்னேன். அதுக்கு முன்னாடி பார்த்தே இராத அந்த அறையையே வெறிச்சுப் பார்த்தேன். அந்த அலறல் சத்தம் அடுத்த அறையில் இருந்து கேட்டிருக்குமா? ஆமாம்... அடுத்த அறையில் இருந்துதான். அங்கேதான் பைத்தியம் இருக்கான். அவனை நான் காப்பாற்றியே ஆகணும். பக்கத்து அறை கதவை நான் அடிச்சுத் திறந்தேன். அப்போ திடீர்னு நிலா வெளிச்சம் தெரிய ஆரம்பிச்சது. திறந்து கிடந்த ஜன்னல் வழியா நிலா வெளிச்சம் அறைக்குள்ளே வந்தது.
அறையில் யாருமே இல்ல.
நான் மட்டும் தனியா நின்னுக்கிட்டு இருந்தேன். பைத்தியத்தோட அறையில நான் மட்டுமே தனியா... அறையில பைத்தியம் இல்ல. நிலா இப்போ முழுசா மறைஞ்சிடுச்சு. யாரோ நிலாவோட முகத்தைப் பொத்திக்கிட்டாங்க. யாரோ சந்திரனோட கழுத்தை நெறிச்சுக் கொன்னுட்டாங்க.
அறையில யாருமே இல்ல.
நான் இருட்டுல அறையோட நடவுல நின்னு திறந்து கிடந்த ஜன்னலையே பார்த்தேன். எனக்கு ஒரே களைப்பா இருந்துச்சு. தனியா... நான் மட்டும் தனியா... அப்போதான் எனக்கே ஞாபகம் வந்துச்சு...
அந்த மனிதன் வெறித்த பார்வையுடன் எனக்கு அருகில் வந்து நடுங்கிக் கொண்டிருந்த குளிர்ந்துபோன கைகளால் என்னைப் பிடித்தவாறு திக்கித் திணறி சொன்னான்:
“அந்தப் பைத்தியம் இறந்து சில வருஷங்களாச்சே...”
அவன் அமைதியாக அந்த இருட்டில் அமர்ந்து அழுதான்.
இருட்டு அமைதியாக அந்த ஆளை என்னால் சரியாகக் காண முடியவில்லை. இருந்தாலும் அவனின் சிவந்துபோன கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. அவனின் கவலை நிறைந்த முகத்தை இருட்டினூடே என்னால் பார்க்க முடிந்தது. இருட்டில் ஒரு மெலிந்துபோன, வெளுத்த, தளர்ந்துபோன உருவம்... பயத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு ஜந்து!
அந்த ஆள் எழுந்தான். மலையை விட்டு இறங்கி பனிப்படலத்திற்கு மத்தியில் பாறைகளைத் தாண்டி குளிர்ச்சியடைந்து அலறி ஓடிக்கொண்டிருந்த நதியின் சத்தத்தோடு இணைந்து அவன் கரைந்தே போனான்.
நான் தட்டுத் தடுமாறி நடந்து சத்திரத்திற்கு வந்தேன். என் நண்பர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கீழே நதிக்கரையில் இருக்கும் கட்டிடத்தில் இருந்த பைத்தியம் வெளியே குதித்து ஓடிவிட்டது என்று வேலைக்காரன் சொன்னான். அவனைப் பார்க்கும் இரண்டு ஆட்கள் இங்கு அவனைத் தேடி வந்திருக்கிறார்கள். பைத்தியத்தை அடைத்து வைத்திருந்த வீட்டிற்கு அப்பால் வேறு ஏதாவது வீடு இருக்கிறதா என்று விசாரித்தற்கு வேலைக்காரன் சொன்னான்:
“இல்ல...”