மலை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6837
“சொல்லு...” - அவன் ஒரு ரகசியத்தைக் கேட்பதைப் போல மெதுவான குரலில் என்னிடம் கேட்டான்: “பயம் மனதைத் தின்னு கொண்டிருக்கிற ஒரு மனிதன் வாழ்க்கையில என்ன செய்யணும்?”
நான் சிறப்பாக எதுவும் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை.
“சரி... என்ன நடந்துச்சு?” - நான் கேட்டேன்.
சூரியன் முழுமையாக மறைந்து விட்டிருந்தான். பனிப்படலம் எல்லா இடங்களிலும் போர்த்தி விட்டிருந்தது. கீழே பனிப்படலத்திற்கு மேலே கண்ணால் பார்க்க முடியாத நதியின் ஓசை கேட்டது. மலை முகட்டில் இருண்டு போயிருந்த குளிர்ச்சியான சூழலில் நாங்கள் இருவரும் இரண்டு சிலைகளைப் போல உட்கார்ந்திருந்தோம். நான் ஒரு பாறையில் உட்கார்ந்தவாறு அந்த ஆளிடம் சொன்னேன்:
“நான் யாருக்கும் அறிவுரை சொல்றது இல்லை. வேணும்னா என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லலாம். நான் நீங்க சொல்றதைக் கேட்க தயாரா இருக்கேன்... உட்காருங்க...”
அந்த மனிதன் உட்கார்ந்தான். தன்னுடைய சிவப்பேறிப் போயிருந்த கண்களால் என்னையே சிறிது நேரம் அவன் உற்றுப் பார்த்தான். கிளை விட்டு படர்ந்து காற்றில் ஆடும் வேர்கள் தொங்கிக் கொண்டிருக்கும் கோவில் ஆல மரத்தைப் போல சிவந்து படர்ந்த நரம்புகள் அந்த மனிதனின் வெள்ளைப் படலத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தன. அவற்றுக்குப் பின்னால் கம்பிகளுக்கு இடையே பார்ப்பது மாதிரி பயம் என்னை எட்டிப் பார்த்தது. அவனின் கன்னங்களில் அச்சத்தால் உண்டான பாதிப்பு வெளிறிப் போய் தெரிந்தது. அவன் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தான்.
அவன் மீண்டும் சிறிது நேரத்திற்கு முன் நாடக பாணியில் பேசியது மாதிரியே சொன்னான்: “என் மனசுல ஏகப்பட்ட கவலைகள். என்கிட்ட இருக்குற பயத்துக்கும் அளவே இல்லை. பயம் அணுக்களைப் போல என் உடம்பைக் கொஞ்சம் கொஞ்சமா கடிச்சி தின்னுக்கிட்டு இருக்கு. நான் சுவாசிக்கிற காற்றில் பயத்தோட மணம் கலந்திருக்கு. நான் குடிக்கிற தண்ணியில கூட அது கலந்திருக்கு. நான் சாப்பிடுற உணவுலயும் அது இரண்டறக் கலந்திருக்கு. பயத்தோட உயிரில்லாத எலும்புக்கூடு சதா நேரமும் என் மனசோட அறைகளில் தொங்கிக்கிட்டே இருக்கு. எனக்கு உதவி செய்ய முடியுமா? தனியா போக எனக்கு பயமா இருக்கு. பயம் என்னை விடாம துரத்திக்கிட்டு இருக்கு...”
“அப்படி எது உங்களை விடாம பயப்பட வைக்குது?” - நான் கேட்டேன்.
“ஒரு பிசாசு... ஒரு பிசாசு... பயத்தைத் தர்ற ஒரு பிசாசு. கண்ணால பார்க்க முடியாத, அழுவுற, சத்தம் போட்டு கத்துற ஒரு பிசாசு. நான் அறைக்குள்ள இருந்து அதைக் கேட்டு கேட்டு எனக்கே என்னவோ மாதிரி ஆயிடுச்சு. அங்கே... கீழே... நதிக்கரையிலேதான் என்னோட வீடு இருக்கு. நானும் ரெண்டு வேலைக்காரங்களும் மட்டும் இருக்கோம்!”
“சத்திரத்துல இருந்து கொஞ்ச தூரம் கீழே போனா நதிக்கரையில இருக்குற அந்தப் பழைய வீடா?”
அவன் மேலும் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பிறகு என் பக்கமாய் தலையைக் குனிந்தவாறு சொன்னான்: “இல்ல... இல்ல... அதையும் தாண்டி... அதையும் தாண்டி இருக்குது என் வீடு. அங்கேதான் பைத்தியக்காரன்... அங்கேதான்...” - சொல்லிவிட்டு அவன் நடுங்க ஆரம்பித்தான். எனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அவன் மிகவும் பயந்து போயிருப்பதை என்னால் உணர முடிந்தது.
“ராத்திரி நேரம் வந்தா என்னால தூங்கவே முடியல...” - அவன் சொன்னான்: “இருட்டுல இருந்து ஞாபகங்கள் இறங்கி வந்து உருவங்களணிஞ்சு என் கட்டிலைச் சுற்றிலும் நின்னுக்கிட்டு இருக்கு. எல்லாம் சேர்ந்து என்னை பயமுறுத்துது. என்னை ஒரேயடியா தொந்தரவு செய்யுது. மூச்சுவிட முடியாமப் பண்ணுது. குளிர்ந்துபோன சங்கிலியால என்னைக் கட்டிப் போடப் பார்க்குது. என்னால ஒழுங்கா தூங்க முடியல. தூக்கம் வராம நான் விளக்கை கொளுத்துறேன். விளக்கு வெளிச்சத்தைப் பார்த்ததும் அதுக்கு ஒரே பயம். வெளிச்சத்துல அது என்னை ஒண்ணுமே செய்றது இல்ல. அதுனால விளக்கை எரிய வச்சிக்கிட்டு நான் மட்டும் தனியா வராந்தாவுல உட்கார்ந்திடுறேன். காற்று பலமா வீசி மரங்களை ஆட வைக்கிறதையும் கருங்கல்லின் மேல் நதி வேகமா பாய்ஞ்சு ஓடுறதையும் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். நான் மட்டும் தனியாதான் உட்கார்ந்திருக்கேன். எனக்கு எந்தவித பயமும் இல்லை...”
அந்த மனிதன் அந்த வீட்டில் தனியாக இரண்டு வேலைக்காரர்களுடன் என்ன செய்கிறான் என்பதை அவனிடம் கேட்கவில்லை. அந்த வீட்டை நான் பார்த்ததில்லை. நான் அந்த பகுதிக்கே இதுவரை போனதில்லை. நான் அவனைத் தடுக்கவில்லை.
“நிலவு காய்ந்து கொண்டிருக்கும் இரவு நேரம்தான் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. என் மனசு அப்போ மட்டும்தான் ரொம்பவும் அமைதியா இருக்கும். நிலா வெளிச்சத்தில நான் முற்றத்துல மெதுவா நடப்பேன். நேற்று கூட நான் தூக்கம் வராம வராந்தாவுல படுத்துக் கிடந்தேன். நிலா வெளிச்சத்தில அசைகிற மரங்கள் வராந்தாவில நிழல்கள் உண்டாக்குவதும் அழிப்பதுமாய் இருந்தன. என் மனசு ரொம்பவும் அமைதியா இருந்துச்சு. ஒரே அமைதி. எந்தவிதமான சலனத்துக்கும் அங்கே இடமில்ல. மனசுல சிந்தனைன்ற ஒண்ணு இல்லாமலே நின்னுடுச்சு. ஒரே சூன்யம். திடீர்னு என்னவோ சத்தம் கேட்டது மாதிரி இருந்துச்சு. நான் காதுகளைத் தீட்டிக்கிட்டு கேட்டேன். யாரோ அழுறதைப்போல இருந்துச்சு. அவ்வளவுதான் - நான் எழுந்து நின்னேன். காட்டுல யாரு அழுறது? நான் ஒரு தூணைப்பிடிச்சு நின்னுக்கிட்டு திரும்பவும் கேட்டேன். சந்திரனை மேகம் முழுமையா மறைச்சிருந்தது. நிலா வெளிச்சம் ரொம்பவும் மங்கலா இருந்துச்சு. அந்த மங்கலான நிலவொளியில மரங்கள் அசைவது இலேசா தெரிஞ்சது. காற்று சின்னதா வீச, இலைகள் அசைஞ்சது. இலைகளோட அசைவு சத்தம் காதுல கேட்டது. நான் பாதையில ஒரு காலை வச்சு நடக்க ஆரம்பிச்சப்போ - ஒரு அலறல் சத்தம் கேக்குது. அவ்வளவுதான் - நான் திடுக்கிட்டுப்போய் வராந்தாவுல வந்து நின்னேன். என் உடம்பு கிடுகிடுன்னு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. சுவத்துல சாய்ஞ்சு நின்னு சுற்றிலும் நான் வெறிச்சுப் பார்த்தேன். ஏதாவது சத்தம் வருதான்னு காதைக் கூர்மையாக்கிட்டு கேட்டேன். என்னோட இதயம் டக்டக்னு அடிக்கிறது மட்டும் காதுல கேட்டது. நதி ஓடுற சத்தம் கூட கேட்கல. அந்த அலறல் சத்தம் திரும்பவும் கேட்டது. இப்போ அந்தச் சத்தத்துல ஒரு ஏக்கத்தோட சாயல் தெரிஞ்சது.