மலை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6837
உயர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கருங்கால் கூட்டத்திற்கு நடுவில் காவேரி ஒரு வளைந்து போகும் பாம்பைப் போல சீறியவாறு நுரையுடன் பாய்ந்து பாறைகள் மேல் மோதிச் சிதறி படுவேகமாக ஓடும் ஒரு இடம் இருக்கிறது. கருங்கல் பாறைமேல் வேகமாக ஏறி கீழ்நோக்கி காவிரி அலறியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. சத்தம் உண்டாக்கும் கருங்கல் கத்தி முனைகளுக்கு நடுவில் வளைந்தும் நெளிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் ஒரு நீளமான வெண்மை நிற வாளைப் போல பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நதி சிறிது தூரம் சென்ற பிறகு பரந்து ஓடவும் செய்யும்.
அப்போது அதன் ஆரவாரமெல்லாம் முற்றிலும் அடங்கிப்போய் படு அமைதியாக அது இருக்கும். மாலை நேர ஆர்ப்பாட்டங்களும், இரவு நேரத்தின் சாந்தமான சூழ்நிலையும் குடிகொண்டிருக்கும் கரைகளுக்கு நடுவே அது ஓடிச்சென்று கடலைப்போய் அடையும். நான் ஒரு மலை உச்சியில் இருக்கும் ஒரு பாறை மீது அமர்ந்திருக்கிறேன். இங்கே அமர்ந்திருந்தால் என்னால் எல்லா விஷயங்களையும் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்க முடியும். கால் பாதத்தில் இருப்பதைப்போல பாறைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் வெண்மை நிற நதியையும், மாலை நேரத்தின் வரவால் உண்டாகும் நிற மாற்றத்தையும் என்னால் இங்கிருந்து தெளிவாகக் காண முடிகிறது. இரண்டு மூன்று நாட்களாகவே இங்கு வருவதாகச் சொன்ன நண்பர்களை எதிர்பார்த்து நான் மலையடிவாரத்தில் இருக்கும் சத்திரத்திலேயே தங்கியிருந்தேன். மரங்களுக்கு நடுவில் மறைந்துபோய் காணப்படும் ஒரு வெள்ளை நிற கட்டிடம்தான் அந்தச் சத்திரம். அங்கு எப்போதும் ஒரு வேலைக்காரன் இருப்பான். ஒவ்வொரு நாளும் நதியில் மீன்பிடித்து சாப்பிடலாம். குளிர் காற்று வீசும் இரவுகள். பிறகு என்ன வேண்டும்? என் மீது அன்பு செலுத்தியவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அன்பு காட்டாமல் இருப்பவர்களை நினைத்துப் பார்த்தேன். அன்பு செலுத்த தகுதி இருக்கிறது என்று நினைத்து திருப்திபட்டுக் கொண்டேன். நன்றாக உறங்குவேன். பகல் முழுக்க உட்கார்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். மாலை நேரம் வந்துவிட்டால் காவிரியின் முடிவற்ற ஆரவாரத்தையும், மேகங்களின் நிற மாற்றத்தையும் இருட்டில் கலந்து காணாமல் போகும் மலைகளையும் பார்த்தவாறு நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பேன்.
தனிமை.
கீழே உயர்ந்து கம்பீரமாக நின்றிருக்கும் மலைகளுக்கு நடுவில் ஒரு வெள்ளை நிற சத்திரம்.
காட்டுக்கு மத்தியில் ஒரு வாளை உயர்த்தியிருப்பதைப்போல பாய்ந்தோடும் நதி.
வண்டிகள் ஓடும் பாதையைச் சேர்வது என்றால், இடையில் இருக்கின்ற காட்டின் வழியே பத்து மைல் தூரம் கட்டாயம் நடந்தாக வேண்டும். நான் அங்கு வந்தபிறகு சத்திரத்தில் இருக்கும் வேலைக்காரனைத் தவிர, வேறு யாரையும் பார்த்ததே இல்லை. சத்திரத்தைத் தவிர அங்கு வேறு எந்தவொரு கட்டிடமும் இருப்பதாகவும் தெரியவில்லை. அன்றொரு நாள் மாலையில் பாறைகளைத் தாண்டி கீழே நதி ஓடிக்கொண்டிருக்கும் ஓசையைக் கேட்டவாறு நான் சாவதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது நதிக்கரையில் அந்தப் பழைய வீட்டை நான் பார்த்தேன். மேல் பூச்சு முற்றிலும் இல்லாமற் போய், பாசி படர்ந்த சுவர்களையும் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்திருக்கும் முற்றத்தையும் கொண்ட வீடு. நான் மிகவும் களைத்துப் போய் இருந்தேன். சற்று தூரத்தில் நின்றவாறு அந்த வீட்டையே ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, நான் திரும்பிப் போக ஆரம்பித்தேன். யாரோ ஒரு பைத்தியக்காரனை அவனுடைய சொந்தக்காரர்கள் அங்கே கொண்டு வந்து தங்க வைப்பார்கள் என்று அந்த வீட்டைப் பற்றி விசாரித்தபோது, வேலைக்காரன் சொன்னான். இப்போதும் அனேகமாக அந்தப் பைத்தியக்காரன் அந்த வீட்டில் இருக்க வேண்டும். காட்டின் அமைதிச் சூழ்நிலையும், கருங்கற்கள் மீது ஏறி பாய்ந்து கொண்டிருக்கும் நதியும் பைத்தியம் பிடித்திருக்கும் ஒரு மனதிற்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.
நண்பர்கள் இன்னும் வரவில்லை.
குளிரில் இலேசாக நடுங்கியவாறு ஒரு மாலை நேரத்தில் மலையின் உச்சியில் உட்கார்ந்திருந்தபோது, நான் அந்த மனிதனைப் பார்த்தேன்.
அப்போது ஆறு மணி இருக்கும். சூரியன் இன்னும் மறையவில்லை. கீழே நதிக்கு மேலே பனிப்படலம் போர்த்தி விட்டிருந்தது. நல்ல குளிர். மலைகளுக்குப் பின்னால் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வரும் ஆரவார ஒலிகளும், முரசு சத்தமும், பயங்கர அமைதியுடன் இருக்கும் மலைகளைத் தாண்டி காற்றில் தவழ்ந்து வந்து ஒலிக்கிறது. இருட்டு மூடி இருக்கும் நெருப்பைச் சுற்றிலும் நின்று உடுக்கை அடித்துக் கொண்டிருக்கும் உருவங்களை மனதிற்குள் நினைத்துப் பார்க்கிறேன். காய்ந்துபோன இலைகள் நெருப்பில் எரிகிற வாசனை... குளிரில் அமைதியாக இருக்கும் மாலை நேரம்... பின்னால் கல்லில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கவே, நான் திரும்பிப் பார்த்தேன். அந்த ஆள் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். சிறிது தூரத்தில் வருகிறபோதே அவன் என்னை உற்றுப் பார்த்தான். மெலிந்துபோய் காணப்பட்ட உடம்பில் தொங்கிக் கொண்டிருந்த கசங்கிப்போன வெள்ளை நிற ஆடைகள். அந்த மனிதனின் முகத்தில் கோபத்தின் அல்லது கவலையின் நிழல் படிந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.
“உங்களின் இடத்தை நான் பிடித்துக் கொண்டேனா என்ன?” - நான் மரியாதையான குரலில் கேட்டேன்.
அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
அவன் என்னை நோக்கி மெதுவாக நடந்து அருகில் வந்து நின்று சொன்னான்: “இல்ல... இல்ல...” ஒரு நிமிடம் கழித்து சொன்னான்: “என் அமைதியை யாரோ திருடிட்டாங்க...”
அதைக் கேட்டு, எனக்கு உரத்த குரலில் சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இதென்னடா புது கதையாக இருக்கிறது! நாடகத்தில் போல நடிக்கிறானா என்ன?
“என்ன?” - நான் அந்த ஆளைப் பார்த்து கேட்டேன். வெறுமனே தமாஷுக்காக ஏதோ சொல்கிறானோ என்று நினைத்தேன். அப்போதுதான் நான் அவனின் முகத்தையே சரியாகப் பார்த்தேன். கவலையின் நிழல்கள் அல்ல... ஆழமான பதிவுகளே அங்கு இருப்பதை என்னால் காண முடிந்தது. அந்த முகத்தில் பயத்தின் சாயல்களைக் கூட பார்க்க முடிந்தது. கவலையால் அவன் முகம் துவண்டு போயிருந்தது.
அவன் என் தோள்களைப் பிடித்து பற்றியவாறு சொன்னான்: “என்னால இந்த உலகத்துல வாழ முடியல...”
நான் அவன் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் முகத்தில் நான் கண்ட கவலையின் ரேகைகள் என் மனதில் மிகவும் வாட்டத்தை உருவாக்கிவிட்டிருந்தன.