
‘‘இப்படிப்பட்ட ஒரு தானியத்தைப் பார்த்து எவ்வளவோ நாட்களாயிருச்சு !’’ அந்தக் கிழவன் சொன்னான். தொடர்ந்து அவன் அந்த விதையின் ஒரு பகுதியைப் பிரித்து வாயில் வைத்து சுவைக்க ஆரம்பித்தான். ‘‘நான் பார்த்த அதே விதைதான் இது.’’ - அந்தக் கிழவன் சொன்னான். ‘‘சொல்லுங்க, தாத்தா...’’ - மன்னன் சொன்னான் : ‘‘இந்த தானியம் எங்கோ எப்போ இருந்துச்சு ! இந்த மாதிரி விதையை நீங்க முன்னால் பணம் கொடுத்து வாங்கி இருக்கீங்களா ? இதை நீங்க உங்க வயல்ல விதைச்சு விவசாயம் பண்ணியிருக்கீங்களா ?’’ அதற்கு அந்த வயதான கிழவன், ‘‘என் காலத்துல இந்த மாதிரியான சோளம் எல்லா இடங்கள்லயும் இருந்துச்சு. நான் சின்னப்பையனா இருந்தப்போ, இந்தச் சோளத்தை நிறைய சாப்பிட்டிருக்கேன். மற்றவங்களுக்கும் இதைச் சாப்பிட கொடுத்திருக்கேன். இந்த சோளத்தைத்தான் நாங்க பொதுவா நிலத்துல விதைப்போம். அறுவடை செய்வோம்.’’ அப்போது மன்னன் கிழவனைப் பார்த்து ‘‘தாத்தா... இந்த தானியத்தை நீங்க எங்கேயிருந்தாவது வாங்கினீங்களா ? இல்லாட்டி நீங்களே அதை விதைச்சு வளர்த்தீங்களா ?’’ என்று கேட்டான். அதற்கு அந்தக் கிழவன் சிரித்தான். ‘‘என் காலத்துல காசு கொடுத்து சாப்பிடுற பொருளை விலைக்கு வாங்குறது இல்லாட்ட விக்கிறதுன்ற பாவச்செயலை அப்போ யாரும் மனசுல நினைச்சுக்கூட பார்க்கல. எங்களுக்குப் பணத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. எல்லா மனிதர்கிட்டேயும் அவங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் கைவசம் இருக்கு.’’ ‘‘பிறகு... சொல்லுங்க, தாத்தா...’’ உங்க வயல் எங்க இருந்தது ? இப்படிப்பட்ட ஒரு தானியத்தை எங்கே நீங்க விதைச்சு, வளர்த்தீங்க ?’’ அதற்கு அந்த வயதான கிழவன் சொன்னான் : ‘‘என் வயல்ன்றது கடவுளோட பூமிதான். எங்கெல்லாம் நான் உழுதேனோ, அதெல்லாம் என்னோட வயல்தான். நிலம் இலவசமா கிடைக்கிறது தான். எந்த மனிதனும் அதைச் சொந்தமா நினைக்கிறது இல்ல. உழைப்பு ஒண்ணைத்தான் மனிதன் தனக்குச் சொந்தமானதா நினைச்சான்.’’ ‘‘மேலும் இரண்டு கேள்விகளுக்கு நீங்க இப்போ பதில் சொல்லணும். முதல் கேள்வி - இப்படிப்பட்ட ஒரு தானியத்தை உற்பத்தி செய்த பூமி அதுக்குப் பின்னாடி ஏன் அதை நிறுத்திடுச்சு ? ரெண்டாவது கேள்வி - ஏன் உங்க பேரன் ரெண்டு கம்புகளின் துணையோட நடக்குறாரு ? உங்க மகன் ஒரே ஒரு கம்பை மட்டும் வைத்து நடக்குறாரு ? ஆனா, நீங்க எந்தக் கம்பின் துணையுமில்லாம நடக்கிறீங்களே ! உங்க கண் பார்வை மிகவும் நல்லா இருக்கு. உங்களுக்கு எல்லா பற்களும் வரிசையா இருக்கு. பேச்சு தெளிவா இருக்கு. நீங்க பேசுறது காதுக்கு ரொம்பவும் இனிமையா இருக்கு. இந்த அற்புதங்களுக்கு நீங்கதான் விளக்கம் சொல்லணும்...’’ அதற்கு அந்த வயதான கிழவன் சொன்னான் : ‘‘இந்த விஷயங்கள் அப்படித்தான் நடக்கும். ஏன்னா... மனிதன் தானே தன் சொந்த உழைப்புல வாழ்றதை நிறுத்திட்டான். அவன் மத்தவங்களோட உழைப்பை நம்ப ஆரம்பிச்சிட்டான். பழைய காலத்துல, கடவுளோட விதிகளின்படி மனிதர்கள் நடந்தாங்க. அவங்களுக்குச் சொந்தமானது எதுவோ, அதைத்தான் அவங்க வச்சிருந்தாங்க. மத்தவங்க உருவாக்கினது எதையும், தங்களுக்குச் சொந்தமா வச்சுக்க அவங்க விரும்பினதே இல்ல.’’
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook