பலாத்காரம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7820
“மாலதி, அம்மா எங்கே?’’
என்ன காரணத்தாலோ என் குரல் இலேசாக நடுங்கியதைப் போல் நான் உணர்ந்தேன். காரணமே இல்லாமல் என்னிடம் ஒரு பதைபதைப்பு உண்டானது. அங்கு மாலதி இருந்தாள். அவள் உள்ளேயிருந்த அறைக்குள் இருந்தவாறு முண்டு மாற்றிக் கொண்டிருந்தாள். நான் தளத்தில் போய் நின்றேன்.
“அண்ணே, நீங்க இப்போத்தான் வர்றீங்களா?’’
முற்றத்தில் நின்றுகொண்டு அவள் கேட்டாள்.
அவள் ஈர முண்டை மாற்றி விட்டிருந்தாள். எப்படி அவள் வெளியே வந்தாள்? எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னேன்:
“ஆமா... அம்மா எங்கே?’’
அவளுடைய கண்களில் பெண்மைத்தனத்தை வெளிப்படுத்தும் அழகான வெட்கம் முழுமையாக மலர்ந்து காணப்பட்டது. தன்னுடைய மார்பகங்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்பதையும்; தான் ஒரு ஆணை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மற்றவர்களும் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள் என்பதையும்; தான் மற்றவர்களை ஈர்க்கக்கூடிய ஒரு பொருளாக ஆகிவிட்டோம் என்பதையும் அவள் நன்கு புரிந்து கொண்டிருந்தாள். அந்தப் புரிதலை அவளுடைய கண்களில் நான் பார்த்தேன். அவள் சொன்னாள்:
“அம்மா பசுவைக் கொண்டு வர்றதுக்காக போயிருக்காங்க.’’
நான் எதுவும் பேசவில்லை. என் இதயம் படுவேகமாக அடித்துக் கொண்டிருந்தது. எனக்கே புரியாத சில உணர்ச்சிகள் அப்போது உள்ளுக்குள் கிடந்து துடித்துக் கொண்டிருந்தன. நான் ஒரு ‘விஸில்’ அடித்தேன்.
சிறிது நேரம் நான் உள்ளேயும் அவள் வெளியேயுமாக நின்றிருந்தோம். அவள் உள்ளே வருவாள் என்று நான் எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு வளர்ந்து என்னையே அறியாமல் ஒரு கேள்வி என்னுடைய வாயிலிருந்து வெளியே வந்தது.
“நீ ஏன் அங்கே நிக்கிறே?’’
அந்தக் கேள்வியே மரியாதைக் குறைவான ஒன்று என்று எனக்குத் திடீரென்று தோன்றியது. அவளை எதற்காக நான் உள்ளே வரும்படி அழைத்தேன்? அதுவும் - தாழ்ந்த குரலில், இடறிய தொண்டையுடன். நான் கையில் தூக்கிக் கொஞ்சிய பெண் அவள். நான் எப்படி அவளுடைய முகத்தைப் பார்ப்பேன்?
தெற்குப் பகுதியிலிருந்து அவள் ‘அம்மா’ என்று அழைத்தாள். நான் பலவந்தமாக ஏதாவது செய்துவிடுவேன் என்று அவள் பயந்திருக்கலாம். என்மீது அவளுக்கு எந்த அளவிற்கு உயர்ந்த மரியாதை இருந்தது! எல்லாம் இப்போது இல்லாமற் போயிருக்கும்.
நான் வெளியில் இறங்கி ஓடினேன்.
எனினும் அவளுடைய உணர்ச்சியைக் கிளர்ந்தெழச்செய்யும் உடலமைப்பு - அதை வேறொரு விதத்தில் நினைத்துப் பார்க்க முடிந்திருந்தால்...! அது முடியாது. எப்படி முடியும்? அந்த அரைஞாண் அணிந்த இடுப்பு, ஈரமான உதடுகள், எப்போதும் அவளிடம் காணப்படும் நாணம், வளர்ந்து கொண்டிருந்த உணர்ச்சியை அடக்க முயற்சித்ததன் வெளிப்பாடுதான் அந்த நாணம் என்பதாக நான் உணர்ந்தேன்.
எப்போதும் அங்கு போய் அமர்ந்திருப்பது என்பது சரியான ஒரு விஷயம் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கட்டாயம் அதனால் கெட்ட பெயர் வரும். எனினும், நான் எப்போதும் அங்கு இருந்தேன். திண்ணையின் தெற்குப் பகுதியில் ஒரு சாய்வு நாற்காலி போடப்பட்டிருக்கும். அதில் சாய்ந்தவாறு நான் படுத்திருப்பேன். அங்கு படுத்திருந்தால் சமையலறையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பார்க்கலாம். அந்த வகையில் அவளை நான் பார்த்துக் கொண்டே படுத்திருப்பேன்.
ஆனால், நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை. நான் அங்கு இருப்பதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், நான் அங்கு இருப்பதைப் பற்றிய நினைப்பு அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
எனக்கு மிக அருமையான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால், நான் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாங்கள் மட்டுமே தனியாக இருக்கக்கூடிய நேரங்கள் நிறைய கிடைத்தன. பேசாமல், அசையாமல் நான் அப்படியே வேட்கையுடன், ஒவ்வொன்றையும் நினைத்துக் கொண்டு அந்த நாற்காலியில் படுத்திருப்பேன். சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவள் என்னுடைய கண்களுக்கு முன்னால்தான் இருந்தாள். அந்த சந்தர்ப்பம் கடந்து போனவுடன், அதை வீணாக்கி விட்டோமே என்று நான் கவலைப்படுவேன்.
ஒருநாள் அதே மாதிரியான ஒரு சந்தர்ப்பம் வந்தபோது, நான் நீண்ட நேரம் சிந்தித்த பிறகு சொன்னேன்.
"கொஞ்சம் தண்ணி கொண்டு வா மாலதி."
அவள் நீருடன் அருகில் வரும்போது - நான் ஏற்கெனவே மனதில் நினைத்து வைத்திருந்தேன். இன்று எப்படியாவது காரியத்தை நிறைவேற்றிட வேண்டும்- அவள் நீருடன் என்னை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவள் பக்கத்தில வந்து, நீரை வைத்துவிட்டுப் போய் விட்டாள். நான் அதே நிலையில் உட்கார்ந்திருந்தேன்.
என்னால் இப்படி எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்க முடியவில்லை. எத்தனை நாட்கள் இப்படியே இருப்பேன்? ஒரு வேளை என்னுடைய முட்டாள்தனம் காரணமாக இது நடக்காமல் போயிருக்கலாம். எனக்கு தைரியம் இல்லை. தைரியத்துடன் அணுகினால்... ஆமாம்... அவளும் ரத்தமும் சதையும் கொண்டவள்தானே! கொதிக்கும் ரத்தமும் எலும்புச் சோறும் ஊறிக் கொண்டிருக்கும் சதையும்! இப்படி நான் தொடுவதை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் பெண் முதலில் செயல்படமாட்டாள். அடிபணிவது மட்டுமே அவளின் பழக்கமாக இருக்கும்.
ஒரு மாலை வேளையில் அங்கு யாருமில்லை. தெற்குப் பக்கத்தில் வாழை மரங்கள் இருந்த இடத்தில் அவள் தலையைக் கோதியவாறு நின்றிருந்தாள். நான் திடீரென்று அவளுக்கு முன்னாள் போய் நின்றேன். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தோம். அவள் தலையைக் குனிந்து கொண்டாள். நான் அவளின் கையைப் பிடித்தேன்.
அவள் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள். அவளுடைய கை என் பிடியில் இறுகிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் நாங்கள் நின்றிருந்தோம் என்று எனக்கே தெரியாது. நீண்ட நேரம் நின்றிருக்க வேண்டும். அவள் கையை இழுத்தாள். நான் என் பிடியை விட்டேன். அவள் போய்விட்டாள்.
நன்கு இருட்டியிருந்தது. எவ்வளவு நேரம் அவள் நின்றிருந்தாள்! நான் அடிமுட்டாளேதான்! ஒரு வேளை, முழுமையான வெறுப்புடன் அவள் போயிருப்பாளோ?
"ஓ... இந்த அண்ணனுக்கு எப்பவும் விளையாட்டுதான்...'
அவள் போய் விட்டாள். என் மனதிற்குள் முழுமையாக நிறைந்திருந்த ஆசையை அவள் ஒரு விளையாட்டாக நினைத்து விட்டாள்.
மீண்டும் சந்தர்ப்பம் பார்த்து நான் கெஞ்சுகிற குரலில் சொன்னேன்.
"நான் எவ்வளவு நாட்களாக ஆசைப்படுறேன், மாலதி"
"ஓ! அப்படியா?"
அவள் போய்விட்டாள்.
அவள் என்னுடைய வேண்டுகோள்களுக்கு நேரடியாக பதில் கூறாமல் என்னைவிட்டு விலகிப் போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய பைத்தியம் பிடிக்கச் செய்யும் அந்த நாணம் ஒவ்வொரு விஷயத்திலும் ஈர்ப்பு அதிகம் உண்டாகும் வண்ணம் வெளிப்பட்டது. அவள் என்னுடைய வேண்டுகோள்களை மறுக்கவுமில்லை.