பலாத்காரம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7819
ஒருவேளை பயம் காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் சந்தர்ப்பங்கள் சரி இல்லாமல் இருக்கலாம். அவள் என்மீது கோபப்படவும் இல்லை.
ஒரு நாள் நான் அவளிடம் சொன்னேன்:
"கதவுக்குத் தாழ்ப்பாள் போடாதே... தெரியுதா?"
அவள் எதுவும் பேசாமல் போய்விட்டாள்.
ஒருவேளை, அவள் காதில் என் வார்த்தைகள் விழாமல் போயிருக்கலாம்.
நான் மீண்டும் சொன்னேன்.
ஒரு இரவு முழுவதும் அந்த கதவிற்கு வெளியே தட்டிக் கொண்டும் அழைத்துக் கொண்டும் உட்கார்ந்திருந்ததைப் பற்றி அவளிடம் நான் மிகவும் வருத்தத்துடன் சொன்னேன்.
எல்லா முயற்சிகளும் செய்தாகிவிட்டன. என்னுடைய மனதில் வெறுப்பு உண்டானது. ஒருநாள் நான் தற்கொலை செய்துவிடுவேன் என்று கூட சொன்னேன். அதைக் கேட்ட பிறகும், அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. எப்படியும் நினைத்ததை செயல்படுத்தியே ஆவது என்று நான் முடிவெடுத்தேன்.
'ஒரு நாள், எப்படியாவது நான் உன் அறையில் இருப்பேன்.'
அறையின் மூலையில் நான் மறைந்து நின்று கொண்டிருந்தேன். அவள் படுக்கையறைக்குள் நுழைந்தாள். கையில் ஒரு விளக்கு இருந்தது. என்னை அவள் பார்த்தாள். அவள் நடுங்கினாள். திடீரென்று அவள் விளக்கை ஊதி அணைத்தாள். பிறகு நுழைந்து வந்த வாசல் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டாள்.
அடடா! அவள் என் மன விருப்பப்படி நடக்கிறாள் என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. நான் மெதுவாக, அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி அவளின் அருகில் சென்றேன். என் கைகள் அவளுடைய உடம்பில் பட்டன. அவள் என்னுடைய இரண்டு கைகளையும் நன்றாகச் சேர்த்து பிடித்துக் கொண்டு என்னை அந்தக் கட்டிலில் உட்காரச் செய்தாள். அவளும் அருகில் உட்கார்ந்தாள்.
அந்த வகையில் அவளின் கைப்பிடிக்குள் சிக்கி நான் உட்கார்ந்திருந்தேன். நீண்ட நேரம் கழித்து, நான் மிகவும் மெதுவான குரலில் சொன்னேன்:
"நான் சாயங்காலத்துக்கு முன்னாடியே இந்த அறைக்குள்ளே நுழைஞ்சிட்டேன்."
ஒரு கைக்குள் என் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அவள் என் வாயை மூடினாள். அதற்குப் பிறகு யாரும் எதுவும் பேசவில்லை.
நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயாராக இருந்தேன்.
மேலும் சில மணி நேரங்கள் ஓடி முடிந்தன. அவள் என் கைகளைச் சேர்த்துப் பிடித்து வைத்திருந்தாள்.
சுற்றிலும் ஒரே அமைதி. எல்லாரும் உறங்கிவிட்டார்கள். ஒரு இரவுக் கோழி கூவியது.
அவள் மெதுவான குரலில் என் காதில் கேட்டாள்:
"இது சரியான செயலா, அண்ணே?"
அவள் சற்று கடுமையான குரலில் கேட்டதைப் போல் நான் உணர்ந்தேன். அர்த்தத்துடன் சரியான பதிலை எதிர்பார்த்து அவள் அந்தக் கேள்வியைக் கேட்டாள். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் தொடர்ந்து சொன்னாள்:
"அண்ணே, நான் இப்படி உங்களை நினைக்கல."
என் ரத்தம் குளிர ஆரம்பித்தது. அந்த இருட்டில் நான் அவளுடைய முகத்தைப் பார்த்தேன். ஒரு குடும்பத்தனமான கன்னிப் பெண்ணின் பிரகாசமான முகம்! அவள் கேட்கிறாள். அவள் தொடர்ந்தாள்.
"அண்ணே, நீங்க என்னைக் கையில் தூக்கி வச்சு விளையாடி இருக்கீங்க. என்னைக் கூடப் பிறந்த தங்கச்சியா நினைச்சு..." அவள் பாதியைக் கூறிவிட்டு நிறுத்தினாள். ஆமாம்... அவள் கூறுவது சரிதான்.
அவள் மீண்டும் சொன்னாள்:
"இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சா... அண்ணே, நினைச்சுப் பாருங்க..."
அவள் மீண்டும் என்னவெல்லாமோ கூறினாள். அவள் கர்ப்பிணி ஆகிவிட்டால் என்ன செய்வது? அவளுக்கு ஒரு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று எனக்கு விருப்பமில்லையா என்று அவள் கேட்டாள். அவள் ஒரு கணவனுக்காக, அவர்களுக்கிடையே உள்ள உறவுக்காகத் தன்னுடைய கன்னித்தன்மையை பத்திரமாகக் காப்பாற்ற வேண்டாமா? நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு காரியம் நடந்தால்- அதைப் பற்றி நான் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றாள் அவள்.
அவளுடைய எண்ணங்கள் பலித்தன. நான் சிந்தித்தேன். என் ரத்தம் உறைந்து போய்விட்டது. ஒரு வார்த்தைகூட நான் பேசவில்லை. ஆமாம்... இது ஒரு தவறான செயல்தான்.
அவள் தன்னுடைய பிடியை விலக்கி என் கைகளை சுதந்திரமாக்கிவிட்டு சொன்னாள்: "அண்ணே, இதற்கு மேலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நான் தயார்..."
நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். எனக்கு எப்படியாவது அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று இருந்தது. யாருக்காவது இது தெரிந்துவிடுமோ என்ற பயம் எனக்கு.
நான் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அவளும் அருகில் உட்கார்ந்திருந்தாள். ஏழரைக் கோழி கூவியது. இப்போது நிலவு வெளிச்சம் இருக்கும். நான் சொன்னேன்.
"கதவைத் திற... நான் போறேன்."
அவள் கேட்டாள்:
"போறீங்களா?"
"ஆமா..."
அவள் கதவைத் திறந்தாள். நான் வெளியில் இறங்கி ஓடினேன்.