Lekha Books

A+ A A-

மலைச்சரிவுகளில் - Page 2

malai charivugalil

“கனவுகள் எப்போதும் நிலையாக நின்று கொண்டிருப்பவை. மற்றவை அனைத்தும் அழியும்போதுகூட, கனவுகள் நம்முடன் கூடவே இருந்து கொண்டிருக்கின்றன. நீ குழந்தைப் பருவத்தில் இருந்து கண்ட கனவுகள் மரணத்தின் ஒவ்வொரு துண்டுகளாக இருந்தன.”

“நிறுத்துங்க!”

வெள்ளை நிறத்தில் இருந்த மேகங்கள் பஞ்சுத் துண்டுகளைப் போல மேலே எழுந்து பறந்து கொண்டிருந்தன. அவற்றின் வெளிச்சத்தில் அவனுடைய முகம் மேலும் பிரகாசமாகத் தெரிந்தது.

அவள் கண்களை இறுக மூடினாள். கண்களை மூடிக் கொண்டால், வெளிச்சம் முழுவதும் வெளியேதானே இருக்கும்! கண்ணுக்குள் கருத்த ஆகாயம் இருக்கும். வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட பறவைகள் இடையில் அவ்வப்போது மட்டும் ஆகாயத்தில் வேகமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும். ஒரு வேளை அது ஆகாயமாக இல்லாமல் இருக்கலாம். கடலாக இருக்கலாம். அப்படியென்றால் வேகமாகப் பறந்து போய்க் கொண்டிருக்கும் அந்த வெள்ளித் துண்டுகள் படகுகளாக இருக்க வேண்டும்...

“தயவு செய்து இதைக் கொஞ்சம் குடி... தயவு செய்து...”

கண்களைத் திறந்தபோது, ஒரு கையில் பொடியையும் இன்னொரு கையில் நீரையும் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த நர்ஸை அவள் பார்த்தாள். தலைப்பகுதியில் உட்கார்ந்திருந்த கணவன் சொன்னான்: “உனக்கு தலைவலி... பரவாயில்லை....”

அவன் மெதுவாக நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். வேதனை.

“வேதனை!”

“பரவாயில்லை. நாம் சீக்கிரம் வீட்டிற்குப் போவோம்.”

“நான்....”

அவள் நன்றியுடன் அவனுடைய கை விரல்களைத் தொட்டாள். “நான் இனிமேல் இந்த மாத்திரைகளைச் சாப்பிட மாட்டேன். வெறுமனே தூங்கி என்ன பிரயோஜனம்?”

“ஆனால்...”

“எனக்குப் பைத்தியம் எதுவும் இல்லை டாக்டர்.”

“யாரு சென்னாங்க பைத்தியம்னு.”

“சோர்வு காரணமாகத்தான் இவையெல்லாம்... வீட்டுக்குப் போய்விட்டால்...”

“உறக்கம் வருதுன்னு நினைக்கிறேன்.”

“இங்கே எதையோ பார்த்து பயந்துட்டீங்கன்னு நான் நினைக்கிறேன்.”

“முட்டாள்தனமா பேசாதீங்க நர்ஸ்.”

பேச்சுக்கள் குறைந்து குறைந்து இல்லாமல் போயின.

தூங்கி முடித்துக் கண் விழித்தபோது, அவள் சொன்னாள்: “நான் கனவு காணவில்லை.”

கணவன் சிரித்தான்.

“வா... நாம போவோம்.”

படிகளில் இறங்கியபோது நர்ஸ் அவளுடைய காதில் சொன்னாள்: “ஒரு தகடு எழுதி கட்டுவதற்கு மறந்துவிட வேண்டாம். உங்களுடைய ஊர்க்காரர்கள் நல்ல மந்திரவாதிகளாச்சே!”

காரில் ஏறிச் சாய்ந்து படுத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “எனக்கு கனவுகள் மீது விருப்பம் இல்லை.”

அவன் எதுவும் சொல்லவில்லை. காரை ஓட்டும்போது அதிகம் பேசுவது அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்று. அதனால் அவள் மீண்டும் சொன்னாள்: “பேபி தூக்கத்தில் ஏன் சிரிக்கிறாள்?”

அவள் சிரித்தாள். வரிசை தவறாமல் இருந்த அந்தப் பெரிய பற்கள் முன்னால் இருந்த சிறிய கண்ணாடியில் தெரிந்தன.

“நமக்கு இன்னும் குழந்தைகள் வேணும்.”

“ம்...”

“நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும்.”

“ம்...”

குழந்தைகள் நிறைந்த ஒரு வீட்டில் இருந்து, இந்த அளவிற்குப் பாசத்தில் இருந்து, சிரிப்புகளும் கிச்சுகிச்சு மூட்டும் முத்தங்களும் நிறைந்த வாழ்க்கையில் இருந்து யாரால் எடுத்துக் கொண்டு போக முடியும்? அவள் சந்தோஷத்துடன் சிரித்தாள்.

“பேய்களைத் தொந்தரவு செய்ய நம்மால் முடியுமா? அவற்றை அடிச்சு விரட்ட முடியுமா?”

“ச்சே... நான்தான் சொன்னேன்ல... அப்படியெதுவும் இல்லைன்னு.”

“நான் சும்மா கேட்டேன். எனக்கும் தெரியும் இல்லை என்று.”

“சோர்வு இருந்தால் நீ கண்களை மூடித் தூங்கு. வீடு வந்தவுடன் நான் எழுப்புகிறேன்.”

அவள் கண்களை மூடினாள். எனினும் வெளியே தெருக்களில் இருந்த வெளிச்சங்கள் அவளுடைய கண்களில் விழுந்து கொண்டு தான் இருந்தன. தூக்கம் ஒரு மூடுபனியைப்போல அவ்வப்போது வந்து தழுவிக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முந்தைய ஒருநாள் அப்போது அவளுடைய ஞாபகத்தில் வந்தது. எந்தவொரு அழகோ தனிப்பட்ட சிறப்போ இல்லாத ஒரு சாதாரண நாள். ஆனால் அதன் நினைவுகளை அவள் ஒரு மலரைப்போல முகர்ந்து பார்த்து சந்தோஷப்பட்டாள். வெயில் பரவிவிட்டிருந்த ஒரு மத்தியான வேளை. புத்த மதத்தைச் சேர்ந்தவர்ளின் ஒரு கோவிலுக்கு ஓடிக் கொண்டிருந்த காரில், முன்னால் இருந்த இருக்கையில் ஓட்டுநரின் இடப்பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். பின்னால் இருந்த இருக்கையில் தாயும் தந்தையும் உட்கார்ந்திருந்தார்கள். வெப்பத்தால் காய்ச்சல் உண்டான தெருக்கள். காரின் கண்ணாடிகளில் வெள்ளி அடையாளங்களை வரைந்து கொண்டிருந்த வெயில், கண்களில் கனமாக வந்து விழுந்த உறக்கம், ஓடிக் கொண்டிருக்கும் கார்... சந்தோஷம் அப்படித்தான் இருக்குமா? பெயர் இல்லாமல், ஒரு அறிவிப்பும் தராமல், எந்தவொரு கோஷமும் இல்லாமல் வந்து சேரும் விருந்தாளி? பெட்டிகளும் சாமான்களுமாக வாசற்படிகளைக் கடந்து, தெரு வழியாகத் திரும்பி வரும் உருவத்தைப் பார்த்து அவன் சொல்கிறான்:

“அதுதான் சந்தோஷம்.”

“நீ என்ன சொன்னே? நான் கேட்கவில்லை” - கணவன் கேட்டான்.

“நான் ஒவ்வொன்றையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.”

“எதைப் பற்றி?”

“நான் முன்பு பார்த்த ஒரு கோவிலைப் பற்றி...”

அவன் சிரித்தான்.

“அங்கு நீ அணிந்துகொண்டுபோன புடவையைப் பற்றி... அப்படித்தானே?”

அவளுடைய சிந்தனைகளும் தனக்கு எளிதில் புரியும் என்று அவன் கூறுவது அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. கண்ணாடியில் தெரியும் சிரிப்பைப் பார்த்து அவள் சொன்னாள்: “சரி... உங்களுக்கு எப்படிப் புரிந்தது?”

அவன் சிரித்தான். கார் ஒரு வளைவில் திரும்பி பெரிய தெருவை அடைந்தது. தன்னுடைய சிந்தனைகளைச் சொன்னால், அவனுக்குப் புரியுமா? அவள் நினைத்தாள். இல்லாவிட்டால் பெட்டியின் அடியில் கிடக்கும் ஒரு சந்தன உருண்டையைப்போல, தன்னுடைய நினைவுகளை அவனிடம் வெளிப்படுத்தி என்ன பிரயோஜனம்? இளம் சிவப்பு நிறத்தில் இருந்த ஒரு கோவில்... சுற்றிலும் இருந்த படிகளின்மீது சிதறிக் கிடக்கும் பல அளவுகளிலும் இருந்த செருப்புகள்... நதியின் ஓரமாக செருப்புகள் அணியாமல் வெறும் பாதங்களுடன் மெதுவாக நடந்து செல்லும் துறவிகள்.... புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் தாய்... சிரிக்கும் தந்தை. இவையெல்லாவற்றையும் சேர்த்தாலும், அவனுடைய கண்களுக்கு முன்னால் அந்த நாளை வெளிப்படுத்த அவளால் முடியவில்லை. காரணம் - அவன் இயல்பான பொறுமையற்ற தன்மையுடன் கேட்டான்: “அதற்குப் பிறகு என்ன நடந்தது?”

அதற்குப் பிறகு என்ன நடந்தது? எதுவும் நடக்கவில்லை.காட்சிகள் மேலும் மேலும் அதிகமாகத் தோன்றின. இறந்த நாட்கள் ஒவ்வொன்றும் நினைவுகளாக எஞ்சி நிற்கின்றன. நிறங்கள், குரல்கள், வாசனைகள் - எல்லாம் மறைந்துபோய் விட்டன. எனினும் அவள் இடையில் அவ்வப்போது அவற்றை ஞாபகப்படுத்திப் பார்க்கிறாள். அப்போது மரணம் ஒரு முடிவு அல்ல.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel