மலைச்சரிவுகளில்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6881
அவள் பெட்டியில் பொருட்களை அடுக்கி வைக்கும்போதுதான் அவன் வந்தான். மின்சார வெளிச்சம் நிறைந்த அந்த அறையில் அந்தச் சமயத்தில் அவன் வருவான் என்று அவள் சிறிதும் எதிர்பாக்கவில்லை. எனினும், ஓசை உண்டாக்காமல் திடீரென்று அவன் வந்துவிட்டான்.
“பெட்டியை ஏன் தயார் பண்ணிக்கிட்டு இருக்கே?”
அவள் பயத்துடன் தலையை உயர்த்திப் பார்த்தாள். வெளிறிப்போய் காணப்பட்ட அந்த முகத்தில் கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கண்ணாடியைப்போல இருந்த அந்த சரீரம், எப்போதும் வியர்த்துக் கொண்டிருந்த அந்த நெற்றி, கனமான துணியால் இடுப்பில் கட்டப்பட்ட அந்த கட்டு - இவற்றில் எதையும் பார்க்காமல் இருப்பதற்காக அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். குளோரோஃபாமின் மெல்லிய வாசனை அந்த அறையில் பரவிக் கொண்டிருந்தது.
“என்னை விட்டுப் போறியா?”
அப்போதும் அவள் எதுவும் கூறவில்லை. பயம் அவளுடைய நெஞ்சில் ஒரு பறவையைப் போல சிறகடித்துக் கொண்டிருந்தது. எட்டு இரவுகள் சிறிதுகூட தூக்கமும் ஓய்வும் இல்லாமல் அவளுடைய கண்கள் வேதனையால் மரத்துப்போய், முற்றிலும் உயரற்றவையாக ஆகிவிட்டிருந்தன. எவ்வளவு முயற்சி செய்தும், அவளால் கண்களை மூட முடியவில்லை.
“சொல்லு... என்னை விட்டுப் போறியா?”
அவள் பெட்டியை மூடிவிட்டு, அதன்மீது தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு அழுதாள். கண்ணீர்த் துளிகள் தொடர்ந்து வழிந்து கொண்டிருக்கவில்லை. ஓசை உண்டாகவில்லை. சோர்வு அவள்மீது கனமான ஒரு போர்வையைப்போல விழுந்து கிடந்தது. குளோரோஃபாமின் வாசனையை அவள் மீண்டும் உணர்ந்தாள்.
“நீ போயிட்டா, நான் என்ன செய்றது?”
அவள் தலையை உயர்த்தினாள். அவனுடைய வெளிறிய நெற்றியில் நீர்த்துளிகள் அரும்பி நின்றிருந்தன. இரக்கம் நிறைந்த ஒரு அலை அவளுக்குள் எழுந்தது. எனினும், அவள் எதுவும் கூறவில்லை. சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தின் பெண்டுலம் ஆடவில்லை. அதுவும் இறந்துவிட்டதோ? - அவள் நினைத்தாள். இவையெல்லாம்கூட அவனைப்போல இறந்துபோய் விட்டனவோ? வெள்ளைநிறச் சுவர்களைக் கொண்ட அந்த மருத்துவமனை, அவ்வப்போது அந்த அறையைத் தேடி ஓடிவரும் நர்ஸ்கள், அந்தப் பெரிய கடிகாரம்- எல்லாம் இறந்து முடிந்தாகிவிட்டனவா? என்னதான் நடந்தது?
கதவை யாரோ தள்ளித் திறந்தார்கள்.
“புறப்பட்டாச்சா?”
அவளுடைய கணவன் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான். அவனுடைய கனமான கை அவளுடைய தோள்மீது வந்து விழுந்தது. அவள் அறையின் மூலையைப் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. நிம்மதியாக அவள் கணவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
“ஏன் அழறே? இங்கேயிருந்து போனால் எல்லாம் சரியாயிடும். இவ்வளவு நாட்கள் உன்னை இங்கே இருக்க வைத்திருக்க வேண்டியதில்லை. ஆபரேஷன் முடிந்த மறுநாளே அழைச்சிட்டுப் போயிருக்கலாம்”- கணவன். அவளைச் சமாதானப்பத்தும்போது கூறக்கூடியவற்றை மென்மையான குரலில் சொன்னான்.
அவள் முணுமுணுத்தாள்: “எனக்கு பயமா இருக்கு.”
“பயபப்டுறதுக்கு என்ன இருக்கு? நீ தேவையில்லாமல் ஒவ்வொன்றையும் கற்பனை பண்ணி பயந்துக்கிட்டு இருக்கே. நான் சொல்றதை நம்பு. இங்கு அப்படிப்பட்ட ஒரு ஆள் இல்லை. பேய்களை குழந்தைகள் மட்டும்தான் நம்புவாங்க. களைப்பின் காரணமாக உனக்கு ஒவ்வொன்றும் தோணுது.”
“ஆனால்...”
“என்ன ஆனால்? இதெல்லாம் வீட்டுக்குப் போயிட்டா மாறிடும். மீண்டும் நீ பழைய ஆளா ஆயிடுவே. உன்னை பார்க்குறப்பபோ பேபிக்கு உண்டாகுற சந்தோஷத்தை நினைச்சுப் பாரு...”
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் பேபி, பச்சை நிற ஜன்னல் திரைச்சீலைகள் இருக்கும் படுக்கையறை, காசித் தும்பைச் செடிகள் வரிசையாக வளர்ந்திருக்கும் தோட்டம், கணவனும் தானும் ஒன்றாக உணவு சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருக்கும் போது வாலை ஆட்டிக்கொண்டு வரும் நாய்க்குட்டி... இவை எல்லாவற்றையும் அவள் மீண்டும் பார்க்கப் போகிறாள். மீண்டும் அவள் சந்தோஷத்தில் மூழ்கி இருக்கப் போகிறாள்.
குளிர்ந்து மரத்துப் போயிருக்கும் மலைச்சரிவுகளில் அலைந்து திரிகின்ற பேய்களையும், முழு கவலைகளையும் விட்டுவிட்டு அவள் மீண்டும் பழைய மாதிரி ஆகப் போகிறாள்.
அவள் மெதுவாகச் சிரித்தாள்.
“தைரியமா இரு. இரண்டு மணி நேரத்திற்குள் நாம் வீட்டுக்குப் போயிடலாம். நான் இப்பவே...”
அவனுடைய பேச்சு குறைந்து குறைந்து இல்லாமல் போனது. காரணம்- அவளுடைய காதில் வேறொரு சத்தம் கேட்டது. அதிகரித்து அதிகரித்து வரும் ஒரு இரைச்சல். ஒரு இயந்திரத்தின் இரைச்சலாக இருக்கலாம். இல்லாவிட்டால் கடலின் இரைச்சலாக இருக்க வேண்டும். அது மேலும் மேலும் அதிகமாகி அவளுடைய காதுகளைத் தகர்த்து மேலும் சத்தமாகக் கேட்டது.
“அய்யோ!”
சத்தம் நின்றது. அவள் குளிர்ந்த மணல் இருந்த கடல் பகுதியில் மல்லாக்கப் படுத்திருந்தாள். தாங்க முடியாத அளவிற்குக் களைப்பு. எலும்புகள் ஒவ்வொன்றும் ஒடிந்துவிட்டதைப்போல இருந்தன. கடல்நீர் மேல்நோக்கி மெதுவாக ஏறிக் கொண்டிருந்தது. அவளுடைய தலைமுடி நனைந்து கொண்டிருந்தது. எனினும் மொத்தத்தில் ஒரு சுகம். ஆகாயம் எவ்வளவோ தூரத்தில்... உலகம் முழுவதும் அவளுக்குச் சொந்தமானவை. இதுதான் ஓய்வு...
நீல மலைகளின் சரிவுகள் வழியாக வெளிறிப்போன ஒரு உருவம் நடந்து வந்து கொண்டிருந்தது. குளிர்ச்சியான விரல்கள் தொட்டபோது அவள் கேட்டாள்: “நீங்க என்னை ஏன் இங்கே அழைச்சிட்டு வந்தீங்க?”
அவர்களைச் சுற்றிலும் நிறங்கள் மாறிக் கொண்டிருந்தன. அருகில் நின்றுகொண்டிருந்த மலைச்சிகரங்களுக்கு நடுவில் சிறுசிறு மேகங்கள் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தன. அருவிகள் மூடுபனி மூடியிருந்த சரிவுகளில் பாய்ந்து கொண்டிருந்தன.
“உனக்கு எதை விட்டுப் போகிறோம் என்று இந்த அளவிற்குத் தயக்கம்?”
அர்த்தமில்லாத பொழுதுபோக்குகளைக் கூறி சிரித்துக் கொண்டிருக்கும் சில சாயங்கால வேளைகளில், படுத்து கால்களை ஆட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய குழந்தை, இரவு நேரங்களில் தன்மீது ஓய்வு எடுக்கும் ஒரு கனமான நேரங்களில் கை, சந்தோஷம்... என்ன கூறுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.
“இங்கு எல்லாம் குளிர்ந்து போய் இருக்கின்றன. எல்லாம்...”
அவனுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்தன.
அவள் மீண்டும் சொன்னாள்: “எனக்குக் கவலை நிறைந்த பயம்.”
“எனக்குக் கவலையை மட்டுமே தர முடியும். கவலை என்பது மரணமடைந்த ஒரு உணர்வு. சந்தோஷம் மரணமடையும் போதுதானே கவலை வருகிறது? நான் உனக்கு...”
“நிறுத்துங்க...” - அவள் கண்களை மூட முயற்சித்தாள். இவையெல்லாம் கனவுகளாக இருந்தால் எப்படி இருக்கும்? தான் தாய்க்கு அருகில் கட்டிலில் தலையணையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருக்க வேண்டும்... கண் விழிக்கும்போது குத்த வரும் காட்டு எருமைகளும் இல்லை. காலடியில் ஊர்ந்து செல்லும் பாம்புகளும் இல்லை. குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் பைத்தியக் காரனும் இல்லை. எதுவும் இல்லை. “இது ஒரு கனவாகத்தான் இருக்க வேண்டும்.”