
“மரணம் ஒரு ஆரம்பமும் அல்ல. ஒரு முடிவும் அல்ல. வாழக்கைக்கு முன்னாலும் பின்னாலும் அது பரவிக் கிடக்கிறது.”
வெளிறிப்போன முகத்தைக் கொண்ட ஒரு ஆள் அவளிடம் கூறுகிறான். அன்று ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த நிலவு வெளிச்சம் அவளுடைய படுக்கைமீது விழுந்து கிடந்தது. வெளியே வராந்தாவில் நர்ஸ்களின் பேச்சு நின்று விட்டிருந்தது. பயத்தால் அவள் தலையணையில் முகத்தை அழுத்தி வைத்துக்கொண்டாள். அப்போது அவன் சொன்னான். “நான் உன்னைக் காதலிக்கிறேன்...”
நினைவுகளை மாற்ற முயற்சித்துக்கொண்டு அவள் கணவனின் பக்கம் திரும்பினாள்: “சீக்கிரம் வீட்டை அடையணும்.”
அவன் சிரித்தான்.
“உங்களுடைய இந்தச் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. சத்தம் உண்டாக்காமல் மெதுவாக முகத்தில் பரவி, சீக்கிரமே மறையும் இந்தச் சிரிப்பு...”
அதைச் சொல்லிவிட்டு அவள் நிறுத்தினாள். ஆனால் கூறுவதற்கு மேலும் அதிக விஷயங்கள் இருந்தன. முன்பு தேனிலவு காலத்தில் கடற்கரையில், வேகமாக வந்து மோதி ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு முன்னால் நின்றுகொண்டு, தலையைப் பின்னால் திருப்பி அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது, ஒரு விடுமுறை நாளன்று மைதானத்திற்குச் சென்று சிறுபிள்ளைகளைப்போல இரண்டு பேரும் பட்டம் பறக்க விட்டு விளையாடியது, காற்றில் அவனுடைய தலைமுடி பறந்து வந்து கண்களில் விழுந்தது - கூறுவதற்கு என்னவெல்லாம் இருந்தன! ஆனால் அவள் சொன்னாள்: “நான் உங்களை மிகவும் அதிகமாகக் காதலிக்கிறேன்.”
“இப்போது?”
“இப்போதும்!”
அதைச் சொன்னபோது, அவளுடைய குரல் தடுமாறியது. முந்தின நாள்...
“இதோ வீடு நெருங்கிடுச்சு.”
வீட்டின் முன்னால் இருக்கும் தெருவிற்குள் அவர்கள் நுழைந்தார்கள். பெரிய விளக்குகளைக் கொண்டிருக்கும் ஒரு லாரி எதிரே வேகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவள் சொன்னாள்: “கவனம்... இந்த லாரி ஓட்டுபவர்கள் பைத்தியக்காரர்கள்.”
வெளிச்சமும் சத்தமும் அடுத்தடுத்து வந்தன. காரை ஒரு பக்கமாக சாய்க்கும் கணவனிடம் அவள் மீண்டும் சொன்னாள்: “கவனம்...”
அப்போதுதான் அந்த லாரியை ஓட்டிக் கொண்டிருந்த ஆளின் முகத்தை அவள் பார்த்தாள். வெளிறிய முகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த கண்கள், வியர்வை அரும்பிக் கொண்டிருந்த நெற்றி...
“அய்யோ!”
நெருப்பு ஜுவாலைகள் அணைந்து, சரீரத்தை கரியச் செய்யும் உஷ்ணம் நின்றது. அவள் கண்களைத் திறந்தாள்.
குளோரோஃபாமின் மெல்லிய இனிய வாசனை பரவி விட்டிருந்தது.
“நான் மருத்துவமனையிலா இருக்கிறேன்?”
பக்கத்தில் இருந்த ஆள் சிரித்தான். அவனுடைய கையைப் பிடித்து எழுந்து உட்கார்ந்தபோது, அவளும் சிரித்தாள். காரணம் - ஆகாயத்தில் வெள்ளி மேகங்கள் பரவிக் கொண்டிருந்தன. அருவிகள் மூடுபனி தங்கி நின்றிருந்த சரிவுகளில் வேகமாகப் பாய்ந்து விழுந்து கொண்டிருந்தன. மரணத்தைப்போல முடிவே இல்லாத ஒரு நீல நதி எங்கோ ஓடிக் கொண்டிருந்தது...
சந்தோஷம்: ஒரு அர்த்தம் இல்லாத வார்த்தை அது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook