உலகப் புகழ் பெற்ற மூக்கு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7445
நான் தோழர் மூக்கனின் நம்பிக்கைக்குரிய செக்ரட்டரி. எனக்கு நெரடியாகவே தெரியும். தோழரின் மூக்கு ரப்பரால் ஆனதல்ல. என்னுடைய இதயத்தைப் போல தனி ஒரிஜினல். மாயமில்லை. மந்திரமில்லை. போலி இல்லை. தனி... என்னுடைய இதயத்தைப் போல. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த இக்கட்டான நேரத்தில் தோழர் மூக்கனின் பின்னால் அணி திரண்டு நின்றிருக்கும் மக்கள் முன்னேற்ற புரட்சிக் கட்சி ஜிந்தாபாத்! தோழர் மூக்கன் ஜிந்தாபாத்! தோழர் மூக்கனின் கட்சி மக்கள் முன்னேற்ற புரட்சிக் கட்சி! இன்குலாப் ஜிந்தாபாத்!”
என்ன செய்வது? மக்களுக்கு ஒரே குழப்பம். அப்போது மூக்கனின் புரட்சிக் கட்சிக்கு எதிரான புரட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பிரதம அமைச்சரையும் பற்றி வாய்க்கு வந்தபடி மோசமாகப் பேசினார்கள்.
“முட்டாள்தனமான அரசாங்கம்! ரப்பர் மூக்குக்காரனும் மக்களை ஏமாற்றியவனுமான ஒருவனுக்கு ‘நாட்டின் முக்கிய மனிதர்’ என்று பாராட்டி வைரம் பதித்தத் தங்க மெடல் கொடுத்தார்கள். இந்த மக்கள் விரோதச் செயலில் ஜனாதிபதிக்கும் பிரதம அமைச்சருக்கும் பங்கு இருக்கிறது. இந்தப் பயங்கரமான சதிச் செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதம அமைச்சரும் ராஜினாமா செய்யவேண்டும்! அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும். ரப்பர் மூக்கனைக் கொல்ல வேண்டும்!”
அதைக் கேட்டு ஜனாதிபதி கோபப்பட்டார். பிரதம அமைச்சரும் கோபப்பட்டார். ஒரு அதிகாலை வேளையில் ராணுவமும் டாங்கிகளும் அப்பிராணி மூக்கனின் வீட்டை வளைத்து, மூக்கனைக் கைது செய்துகொண்டு போயின.
அதற்குப் பிறகு சில நாட்களுக்கு மூக்கனைப் பற்றிய எந்தவொரு செய்தியும் இல்லாமலிருந்தது. மக்கள் மூக்கனை அப்படியே மறந்து விட்டார்கள். எல்லாம் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. அப்படியிருந்த சூழ்நிலையில் சாட்சாத் ஹைட்ரஜனும், அணுவும், நியூக்லியரும் வந்தன! மக்கள் மறந்து போயிருந்தபோது, ஜனாதிபதியின் சிறிய ஒரு அறிவிப்பு வந்தது.
‘மார்ச் 9-ஆம் தேரி ‘நாட்டின் முக்கிய மனிதரை’ப் பற்றி பகிரங்கமான விசாரணை நடக்கப் போகிறது. மூக்கு ஒரிஜினலா? 48 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் வந்து சேரும் விற்பன்னர்களான டாக்டர்கள் மூக்கனைப் பரிசோதனை செய்கிறார்கள். உலகத்திலுள்ள அனைத்துப் பத்திரிகைகளிலிருந்தும் செய்தியாளர்கள் வந்து சேர்கிறார்கள். வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி என்று எல்லாவித ஊடகங்களும்... இந்த விசாரணையை எல்லா நாடுகளைச் சேர்ந்தவர்களும் செய்திப்படங்கள் மூலம் காணலாம். மக்கள் அமைதியாக வந்து கூடும்படி கேட்டுக் கெள்கிறேன்!”
மக்கள் என்பது முட்டாள்களின் கூட்டம்தானே! எங்குமே பார்க்க முடியாத படுக்கூஸுகள்... புரட்சியாளர்கள்... அவர்கள் அமைதியாக வந்து சேரவில்லை. தலைநகரமான பெரிய நகரத்தில் வந்து கூடினார்கள். ஹோட்டல்கள் மீது கல்லெறிந்தார்கள். பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கு பாதிப்பு உண்டாக்கினார்கள். திரைப்பட அரங்கங்களுக்கு நெருப்பு வைத்தார்கள். மதுக் கடைகளை ஆக்கிரமித்தார்கள். வாகனங்கள்மீது கற்களை எறிந்தார்கள். காவல் நிலையங்களுக்கு நெருப்பு வைத்தார்கள். அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களுக்குப் பாதிப்பு உண்டாக்கினார்கள். பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பலர் இந்த மூக்கன் போராட்டத்தில் இரத்தத்தைச் சிந்தினர். மங்களம்... அமைதி...
மார்ச், 9-ஆம் தேதி பதினொரு மணி ஆனபோது ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் மனிதப் பெருங்கடல் கூடியிருந்தது. அப்போது ஒலிப் பெருக்கிகள் உலக மக்களிடம் கூறிக் கொண்டிருந்தது. ‘மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். வாய்களை மூடி வைத்திருக்க வேண்டும். பரிசோதனை ஆரம்பமாகி விட்டது!’
ஜனாதிபதி, பிரதம அமைச்சர், மற்ற அமைச்சர்கள் ஆகியோரின் முன்னிலையில் டாக்டர்கள் உயர்திரு மூக்கனைச் சுற்றி வளைத்து நின்றிருந்தார்கள். ஆர்வத்துடன் கோடிக்கணக்கான மக்கள்! மூச்சை அடக்கிக் கொண்டிருந்த சூழ்நிலை!
ஒரு பெரிய டாக்டர் மூக்கன் ஜியின் மூக்கின் நுனிப்பகுதியை அடைந்தார். அப்போது மூக்கன்ஜி வாயைத் திறந்தான்.
“மூக்கு ரப்பரால் ஆனது இல்ல... போலி இல்ல... தனி ஒரிஜினல்!”... டாக்டர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூறிய தீர்ப்பு!
மூக்கன் சாஹிப்பின் அழகான செக்ரட்டரிப் பெண் மூக்கன்ஜியின் திருமூக்கின் நுனியை அழுத்தி முத்தமிட்டாள்.
“தோழர் மூக்கன் ஜிந்தாபாத்!” ‘நாட்டின் முக்கிய மனிதர்’ ஜிந்தாபாத்! தோழர் மூக்கனின் மக்கள் முன்னேற்றக் கட்சி ஜந்தாபாத்! ஜனாப் மூக்கனின் மூக்கு - ஒரிஜினல் மூக்கு! ஒரிஜினல்!! ஒரிஜினல்!!!
அண்ட சராசரமே இடிந்து போகும் அளவிற்கு முழக்கம்... ஒரிஜினல்! தனி ஒரிஜினல்!!
அந்த ஆரவாரம் அடங்கிய தும் ராஷ்ட்ரபதி என்ற பிரஸிடெண்ட் இன்னொரு புதுமையான ‘டாவ்’ செயலைச் செய்தார். தோழர் மூக்கனை ‘மூக்கஸ்ரீ’ என்று அசத்தும் பட்டத்தை அளித்து பாராளுமன்றத்திற்கு நியமனம் செய்தார்.
மூக்கஸ்ரீ மூக்கன் எம்.பி.!
இரண்டு மூன்று பல்கலைக் கழகங்கள் மூக்கஸ்ரீ மூக்கன் சாஹிப்பிற்கு எம்.லிட்டும், டி.லிட்டும் அளித்து கவுரவித்தன.
மூக்கஸ்ரீ மூக்கன் - மாஸ்டர் ஆஃப் லிட்ரேச்சர்!
மூக்கஸ்ரீ மூக்கன் - டாக்டர் ஆஃப் லிட்ரேச்சர்!
என்ன இருந்தாலும் மக்கள் என்பது முட்டாள் கூட்டம் தானே! தனி படுக்கூஸுகள்! முட்டாள் கூட்டத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கம்!
மூக்கஸ்ரீ மூக்கனை அடைய முடியாமற்போன அழகி இருந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு கூட்டணி அமைத்து பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும், சொற்பொழிவு நடத்திக் கொண்டும் இருந்தார்கள். ஜனாதிபதி ராஜினாமா செய்ய வேண்டும்! பிரதம அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்! அமைச்சரவையையும் ராஜினாமா செய்ய வேண்டும்! மக்களை ஏமாற்றும் செயல்! மூக்கனின் மூக்கு ரப்பர் மூக்கு! ஒரிஜினல் அல்லவே அல்ல!
புரட்சி போகும் போக்கைப் பார்க்க வேண்டுமே!
அறிவாளிகள், தத்துவவாதிகள் - என்ன செய்வார்கள்?
அவர்களுக்கிடையே ‘உலகப் புகழ்பெற்ற மூக்கு’ விஷயத்தைப் பற்றி கருத்து வேறுபாடு உண்டாகாமல் இருக்குமா?
மங்களம் சுபம்!