மனைவியின் காதலன் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8287
அவர் படிகளில் ஏறி வரும் சத்தம் எனக்குக் கேட்டது. அவருடைய கைகள் சுவரில் தடவுவதையும் நான் உணர்ந்தேன். “வாங்க நண்பரே!” - நான் சொன்னேன். “இங்கே எங்களுக்கு நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்து விட்டது.”
பதைபதைத்துப் போன அந்தக் கணவர் உதட்டில் சுருட்டுடன் கதவுக்குப் பக்கத்தில் வந்து கேட்டார்: “என்ன விஷயம்? இதன் அர்த்தம் என்ன?”
நான் அவருக்கு அருகில் சென்று சொன்னேன்:
“என் நண்பரே, நாங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம். உங்களுடைய மனைவியும் நானும் என்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்த இந்த நண்பரும் சேர்ந்து இரவில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இந்த மனிதர் தலைசுற்றிக் கீழே விழுந்துவிட்டார். பிறகு இரண்டு மணி நேரமாக சுய உணர்வு இல்லாத நிலையிலேயே இருக்கிறார். வெளியிலிருந்து அறிமுகமில்லாதவர்கள் யாரையும் அழைக்க வேண்டாம் என்று நான் நினைத்தேன். நீங்கள் கொஞ்சம் உதவினால், நான் இந்த மனிதரை இவருடைய வீட்டில் கொண்ட போய் விட்டு விடுவேன். ”
பதைபதைப்பு அடைந்தாலும் எந்தவொரு சந்தேகமும் அடையாமல் அந்தக் கணவர், எதிர்காலத்தில் தனக்கு எந்தவொரு தொந்தரவையும் தர இயலாத தன்னுடைய எதிரியைத் தன்னுடைய கைகளால் தாங்கிப் பிடித்தார். ஒரு குதிரையை நுகத்தடியில் கட்டுவதைப்போல நான் பிணத்தின் இரண்டு கால்களுக்கு நடுவிலும் நின்று கொண்டு அதைத் தாங்கியவாறு கீழே கொண்டு வந்தேன். மனைவி எங்களுக்கு வெளிச்சத்தைக் காட்டினாள். நாங்கள் வெளியே வந்ததும், வண்டிக்காரனை சரி பண்ணுவதற்காக நான் அந்த அசைவே இல்லாத பிணத்திடம் இப்படிச் சொன்னேன்: “நட நண்பா... இது ஒரு பெரிய விஷயமில்லை. சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்னு எனக்குத் தெரியும். ஆனால், தைரியமா இருக்கணும். எல்லாம் சீக்கிரம் நல்லதுல முடியும்.” அவர் என்னுடைய கைகளிலிருந்து நழுவிப்போவதைப் பார்த்ததும் நான், அந்தப் பிணத்தின் தோளில் ஒரு கிள்ளு கொடுத்தேன். அடுத்த நிமிடம் அந்த ஆள் வண்டிக்குள் விழுந்தார். அவருடன் நானும் அந்த வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தேன்.
திகைப்பில் மூழ்கிப்போயிருந்த திரு. லீவ்ரெ என்னிடம் கேட்டார்: “இது பிரச்சினை ஆயிடுமா? அந்த அளவிற்குப் பெரிய விஷயம் என்று உங்களுக்கு தோணுகிறதா?”
தன்னுடைய உயரத்தில் இருந்த கணவரின் தோளில் கையை வைத்துக் கொண்டு அந்த வண்டிக்குள் எட்டிப் பார்த்த பெண்ணைப் பார்த்து நான் சொன்னேன்: “இல்லை.”
நான் அவருக்குக் கையை ஆட்டிவிட்டு வண்டிக்காரனிடம் வண்டியைச் செலுத்தும்படிச் சொன்னேன். பயணம் முழுவதும் அந்த மரணமடைந்த மனிதர் என் உடல்மீது விழுந்து கொண்டே இருந்தார். நான் அந்த மனிதரின் வீட்டை அடைந்தேன். வீட்டிற்கு வரும் வழியில் அவர் தலைசுற்றி கீழே விழுந்துவிட்டார் என்றும்! அவரை அறையில் கொண்டுபோய் படுக்க வைக்க வேண்டும் என்றும் நான் அவருடைய வீட்டில் இருந்தவர்களிடம் கூறினேன். மாடிக்கச் சென்று அவரை மேலும் ஒருமுறை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக நான் சொன்னேன். அந்தக் கவலையில் மூழ்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னால் நான் இன்னொரு நாடகத்தையும் நடத்தினேன். இறுதியில் அங்கிருந்தவர்களைத் திட்டாமல் இருக்க முடியாமல் நான் உறங்கச் சென்றுவிட்டேன்.”
சிரித்துக் கொண்டிருந்தாலும், டாக்டர் தான் கூறிக்கொண்டிருந்த விஷயத்தை நிறுத்தினார். மிகவும் பதைபதைத்துப் போயிருந்த அந்த இளம்பெண் கேட்டாள்: “நீங்கள் எதற்கு இந்தக் கதையை என்னிடம் சொன்னீர்கள்?”
மிகவும் அமைதியாக தலையைக் குனிந்துகொண்டு அந்த டாக்டர் சொன்னார்:
“எதிர்காலத்தில் உங்களுக்கும் இப்படிப்பட்ட ஒரு தேவை வந்தால், என்னுடைய உதவி கட்டாயம் கிடைக்கும்."