மனைவியின் காதலன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8287
பிறகு அவள் பயத்தைத் தரக்கூடிய ஒரு சத்தத்தை உண்டாக்கினாள். சிறிது நேரம் மூச்சுவிட சிரமப்பட்டு மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு அவள் உரத்த குரலில் அழுதாள். ஒன்றோ இரண்டோ நிமிடங்கள் அது நீடித்தது. திடீரென்று உருகும் மனதின் வெப்பம் பாதித்ததைப் போல அவளுடைய கண்ணீர் வற்றிப்போய்விட்டது. துயரத்தின் அமைதியுடன் அவள் சொன்னாள் : “நாம சீக்கிரமே போகலாம்.”
“நான் தயார்” - நான் சொன்னேன்: “ஆனால், என்னுடைய வண்டியைத் தயார் பண்ணும்படி நான் உத்தரவு போடவில்லை.”
“நான் வண்டி கொண்டு வந்திருக்கிறேன்” - அவள் சொன்னாள்: “அது அந்த மனிதரின் வண்டிதான். அது அந்த மனிதரை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தது.” அவள் மீண்டும் தன்னுடைய உடல் முழுவதையும் மூடிக் கொண்டாள். நாங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.
வண்டிக்குள் இருந்த இருட்டில் எனக்கு அருகில் உட்கார்ந்திருக்கும் போது என்னுடைய கைகளை அழுத்திக்கொண்டு நொறுங்கிப் போன குரலில் அவள் சொன்னாள் : “ஒ... உங்களுக்காவது... உங்களுக்காவது என்னுடைய நிலைமை புரிந்திருக்கும்! நான் அந்த மனிதரைக் காதலித்தேன். நான் அவரை அளவுக்கு மீறிக் காதலித்தேன். கடந்த ஆறு மாதங்களாக நான் அவரை பைத்தியம் பிடிக்கிற அளவிற்கு காதலித்தேன்.”
“உங்கள் வீட்டில் யாராவது இருக்காங்களா?” - நான் கேட்டேன்.
“இல்லை. ரோஸ் என்ற வேலைக்காரியைத் தவிர வேறு யாருமில்லை. அவளுக்கு எல்லா விஷயங்களும் தெரியும்.”
நாங்கள் அவளுடைய வீட்டை அடைந்தோம். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். எந்தவொரு சத்தமும் உண்டாக்காமல், மெதுவாக வாசல் கதவைத் திறந்து நாங்கள் மாடிக்குச் சென்றோம். பிணத்திற்கு அருகில் இருக்க பயமாக இருந்த காரணத்தால், அந்த வேலைக்காரி படிகளுக்கு அருகில் ஒரு மெழுகுத் திரியை எரிய வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் அந்தப் படுக்கையறைக்குள் நுழைந்தேன். ஒரு மல்யுத்தம் நடந்து முடிந்ததைப் போல முழுமையான அலங்கோல நிலையில் அறையின் உட்பகுதி இருந்தது. தலைகீழாகக் கிடந்த படுக்கை யாரையோ எதிர்பார்த்துக் கிடந்ததைப்போல இருந்தது.
படுக்கை விரிப்பு கீழே விழுந்து கிடந்தது. அந்த மனிதர் தன்னுடைய கன்னங்களையும் நெற்றியையும் துடைக்கப் பயன்படுத்தியிருந்த ஈரமான துணிகள் அந்தச் சிறிய வாஷ்பேசினுக்கு அருகில் கிடந்தன. அதற்கு அருகில் ஒரு கண்ணாடிக் குவளை இருந்தது. வினிகரின் தாங்க முடியாத வாசனை அந்த அறையில் நிறைந்திருந்தது.
அந்த இறந்த உடல் அறைக்கு நடுவில் நீளமாகக் கிடந்தது. நான் அதற்கு அருகில் சென்று அதைத் தொட்டுப் பார்த்தேன். கண்களைத் திறந்து பார்த்தேன். கைகளைப் பிடித்துப் பார்த்தேன். பிறகு பயத்தால் மரத்துப் போய் நின்றிருந்த அந்த இரண்டு பெண்களையும் பார்த்தவாறு நான் சொன்னேன்: “இதை அந்த கட்டிலில் படுக்க வைக்க எனக்கு உதவணும்.” அந்த மனிதரை மெதுவாகக் கட்டிலில் படுக்க வைத்த பிறகு, நான் அவளுடைய இதயத் துடிப்பைப் பார்த்தேன். ஒரு பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தி அவருடைய உதடுகளைப் பரிசோதனை செய்தேன். “எல்லாம் முடிந்துவிட்டது. நாம உடனடியா இந்த மனிதருக்கு ஆடைகள் அணிவிக்க வேண்டும்” - நான் சொன்னேன். பயங்கரமான ஒரு காட்சியாக இருந்தது அது.
பெரிய ஒரு பொம்மையின் உறுப்புகளைக் கையில் எடுப்பதைப் போல நான் அவருடைய ஒவ்வொரு உறுப்பையும் கையில் எடுத்தேன். அந்தப் பெண் கொண்டுவந்த ஆடைகள் ஒவ்வொன்றையும நான் அந்த மனிதருக்கு அணிவித்தேன். அவள் அந்த மனிதரின் உள்ளாடைகள், ஸாக்ஸ், ட்ரவுசர், வெயிஸ்ட் கோட் ஆகியவற்றை அணிவித்தாள். ஆனால், சட்டையின் கைகள் அந்த மனிதருடைய மேலாடையின் கைகள் வழியாகக் கடந்து செல்ல சிரமப்பட்டன. அவருடைய பூட்ஸின் கயிறுகளைக் கட்டுவதற்காக நான் அதை பலமாகப் பிடித்தபோது, அந்தப் பெண்கள் குனிந்து நின்றுகொண்டு அதை அணிவிக்க முயற்சித்தார்கள். கால்கள் நீர் வந்து வீங்கியிருந்ததால், கயிறு இடக்கூடிய ஓட்டையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இரண்டு முனைகளும் இணைவதற்காக ஹேர் பின்னைப் பயன்படுத்தினார்கள். அந்தக் கடுமையான முயற்சி முடிந்தவுடன் நான் அவர்களிடம் சொன்னேன்: “நீங்கள் அவருடைய தலை முடியை அழகாக வாரி விடுங்க.” அந்த வேலைக்காரிப் பெண் தன்னுடைய எஜமானத்தியின் பெரிய பற்களைக் கொண்ட சீப்பையும் ப்ரஷ்ஷையும் எடுத்துக் கொண்டு வந்தாள். அந்த மனிதரின் நீளமான தலைமுடி சீப்பிற்கு அடியில் சிக்கியபோது, அதை விட்டெறிந்துவிட்டு, தன்னுடைய கையாலேயே அவருடைய தலைமுடியை... அவரைத் தழுவுவதைப்போல அவள் கோதி விட்டாள். அவள் அந்த மனிதருடைய தாடியைச் சீவி முறைப்படுத்தினாள். காதல் ஜோடிகளுக்கு மத்தியில் செய்வதைப்போல அவள் அந்த மனிதருடைய மீசையை அழகாக சுருட்டி விட்டாள்.
அடுத்த நிமிடம் அவருடைய தலைமுடியை விட்டு, அவள் தன் காதலரின் தலையைத் தன் கையில் எடுத்தாள். இனி எந்தச் சமயத்திலும் சிரிக்க முடியாத அசைவற்ற முகத்தையே அவள் ஏமாற்றத்துடன் பார்த்தாள். அவர் அந்த மனிதருடைய உடல்மீது விழுந்தாள். அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தாள். அந்த மூடிய கண்களிலும் உதடுகளிலும் அந்த முத்தங்களை ஒத்தடத்தைப்போல அவள் பதித்தாள். நெற்றியிலும் முன் தலையிலும் அதையே செய்தாள். அவளுடைய உதடுகள் அந்த மனிதருடைய காதில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. தன்னுடைய அணைப்பை மேலும் அதிகமாக்கிக் கொண்டு அவள் சொன்னாள் : “என் தங்கமே... உனக்கு இறுதிவிடை!”
அப்போது மணி பன்னிரண்டு அடித்தது. நான் அதிர்ச்சியடைந்து எழுந்தேன். பன்னிரண்டு மணி! நான் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன்: “இந்த நேரத்தில்தான் க்ளப்பை அடைப்பார்கள். வாங்க மேடம். நாம இனிமேல் கொஞ்சமும் நேரத்தை வீணாக்கக் கூடாது.”
அவள் எழுந்தபோது, நான் சொன்னேன்: “நாம் இந்த பிணத்தை வரவேற்பு அறைக்குக் கொண்டு செல்வோம்.” அதைச் செய்து முடித்ததும், அதை அங்கிருந்த ஸோஃபாவில் உட்கார வைத்தபிறகு, நான் சர விளக்குகளை எரிய வைத்தேன். அப்போது வெளிக் கதவு பலமாகத் திறந்து மூடும் சத்தம் எனக்குக் கேட்டது. “ரோஸ், ஒரு கைக்குட்டையையும் பாத்திரத்தையும் கொண்டு வா. பிறகு அந்த படுக்கையறையைச் சுத்தம் செய். கடவுளை மனசுல நினைத்துக் கொண்டு அதைச் சீக்கிரமா செய்! திரு. லெ லீவ்ரெ வர்றாரு.”