மனைவியின் காதலன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8287
வயதான அந்த டாக்டர், இளம் பெண்ணான தன்னுடைய நோயாளியிடம் அந்த ஃபயர் ப்ளேஸின் இரு பக்கங்களிலும் அமர்ந்து கொண்டு பேசினார். வழக்கமாக பெண்களுக்கு உண்டாகக்கூடிய நோய் மட்டுமே அவளுக்கு உண்டாகியிருந்தது - திருமணமான ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் தன்னுடைய காதல் விளையாட்டுக்கள் மூலம் வரக்கூடிய வெறுப்பும் நாடித் தளர்ச்சியும் களைப்பும்தான்.
அவள் ஸோஃபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டு பேசினாள். “இல்லை டாக்டர்” - அவள் சொன்னாள்: “ஒரு பெண் தன்னுடைய கணவனுக்கு துரோகம் செய்கிற விஷயத்தை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.
ஒரு பெண் தன் கணவன் மீது அன்பு இல்லாமல் இருக்கிறாளா? கணவன் அவளுடைய விருப்பங்களுக்குச் சம்மதம் தராமல் இருக்கலாம். ஆனால், அவள் எப்படி தன்னையே இன்னொரு ஆளுக்கப் பரிசாகத் தர முடியும்? மற்றவர்களின் கண்களில் இருந்து அவள் அதை எப்படி அதை மறைக்க முடியும்? துரோகத்திற்கும் கபடத்திற்குமிடையில் இருந்துகொண்டு அவளால் எப்படிக் காதலிக்க முடியும்?”
டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “அது மிகவும் எளிதான விஷயம். ஒருமுறை தன்னுடைய மனதைத் திறந்துவிட ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், சிறிய சிறிய விஷயங்களைப் பற்றியெல்லாம் அவள் சிந்தித்துப் பார்க்க மாட்டாள். திருமணத்திற்குப் பிறகு இருக்கும் காமக் களியாட்டங்களையும் மற்ற மகிழ்ச்சியான விஷயங்களையும் கடந்து போகிற போது மட்டுமே ஒரு பெண் காதலிக்கப்படும் நிலையை அடைகிறாள் என்று நான் நினைக்கிறேன். பகல் நேரத்தில் அவளை அடித்து உதைப்பதும், இரவில் அவளை அளவுக்கும் அதிகமாகக் கொஞ்சுவதும் அனுபவிப்பதும்தான் ஒரு நல்ல ஆணுக்கு அடையாளம். திருமணம் நடக்காமல் ஒரு பெண்ணால் சரியாகக் காதலிக்க முடியாது என்பதுதான் உண்மை.
கபடத்தன்மையைப் பற்றிக் கூறுவதாக இருந்தால், எல்லா பெண்களுக்கும் வேண்டிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு சிறப்பு குணம் அது. மிகவும் சாதாரண பெண்கள் கூட அதன் அடையாளம் கொண்டவர்களே. மிகவும் ஆபத்தான ஒரு திரிசங்கு நிலையில் இருந்துகூட வெளியே வரக்கூடிய அசாதாரணமான ஆற்றல் அவர்களுக்கு உண்டு.”
நம்பிக்கை வராததைப்போல அந்தப் பெண் சொன்னாள்: “இல்லை டாக்டர். அப்படி ஒரு தடவை நடக்கும்போது மட்டுமே பெண்கள் அதைப்பற்றி புரிந்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் மதிப்பு இல்லாமல் போவது ஆண்களைவிட பெண்களுக்குத்தான்.”
டாக்டர் தன்னுடைய கைகளை உயர்த்தினார்:
“அப்படியொன்று நடந்த பிறகு நீங்கள் சொல்ல வேண்டும்! என்னைத் தேடி பரிசோதனைக்காக வரக்கூடிய பத்தினி என்று நான் நினைத்திருந்த ஒரு பெண்ணுக்கு ஒரு முறை நடந்த கதையை நான் இங்கு கூறப்போகிறேன்.”
தெற்கு திசையில் இருக்கும் ஒரு நகரத்தில்தான் அந்தச் சம்பவம் நடைபெற்றது. அந்த இரவு நேரத்தில் நான் நல்ல உறக்கத்தில் இருந்தேன். யார் அழைத்தாலும் எளிதில் கண்விழிக்க முடியாத அளவிற்கு உள்ள தூக்கம். நெருப்பு பிடித்திருப்பதை அறிவிக்கக்கூடிய மணிகள் ஒலிப்பதைக் கனவில் கேட்பதைப்போல எனக்கு இருந்தது. அடுத்த நிமிடம் நான் அதிர்ச்சியடைந்து எழுந்தேன். என்னுடைய வீட்டின் மணிச்சத்தம் தான் அது. என்னுடைய வேலைக்காரர்கள் அதற்கு பதிலாக எதுவும் செயல்படாமல் இருந்ததால், நான் என் கட்டிலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மணியைக் கழற்றி வைத்தேன். சிறிதும் தாமதிக்காமல் என்னுடைய வீட்டின் முன்பக்கக் கதவை யாரோ தட்டுவதும், நடந்து வரும் படியில் யாருடைய காலடிச் சத்தமோ ஒலிப்பதும் என் காதுகளில் விழுந்தன. அதைத் தொடர்ந்து ஒரு கடித்தத்துடன் ழாங் என்னைத் தேடி வந்தாள். கடிதத்தில் இப்படி எழுதப் பட்டிருந்தது. ‘டாக்டர் சிமியோனின் அவசரமாக வரவேண்டுமென்று மேடம் லெ லீவ்ரெ பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்.
சிறிது நேரம் சிந்தித்த பிறகு நான் சொன்னேன்: “நரம்புத் தளர்ச்சி, ஆவி, வயிற்றுக் கோளாறு... எனக்கு தாங்க முடியாத அளவிற்கு களைப்பு இருக்கிறது.” தொடர்ந்து நான் பதில் எழுதினேன். ‘டாக்டர் சிமியோனினுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், அவருடைய நண்பரான திரு. போனேயை அழைத்துக் கொள்ள வேண்டுமென்று தயவுசெய்து லெ லீவ்ரெயிடம் கூறு.’
நான் அந்தக் கடிதத்தை ஒரு உறைக்குள் இட்டு ழாங்கிடம் கொடுத்துவிட்டு, தூங்குவதற்காகப் படுத்தேன். ஆனால், சிறிது நேரம் கடந்தபோது மீண்டும் மணி ஒலிக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து ழாங் நான் இருக்கும் இடத்திற்கு வந்து சொன்னாள்: “கீழே யாரோ இருக்காங்க. உங்களிடம் அவங்க உடனே பேச வேண்டும் என்கிறார்கள். அது ஒரு ஆணா அல்லது பெண்ணா என்று என்னால் அடையாளம் தெரிஞ்சிக்க முடியவில்லை. அந்த உருவம் மேலிருந்து கீழ்வரை மூடிய நிலையில் இருக்கிறது.”
நான் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். அந்த உருவத்தை உள்ளே வரச்சொல்லும்படி என்னுடைய வேலைக்காரியிடம் சொன்னேன்.
ஒரு கருப்புநிற முகமூடி என்னுடைய அறைக்குள் வந்தது. ழாங் அறையை விட்டுப் போனபிறகு, அந்த உருவம் தன்னுடைய முகமூடியைக் கழற்றியது. மேடம் பெர்த்தா லெ லீவ்ரெதான் அது. இளம் வயதைக் கொண்ட அந்தப் பெண் அந்தப் பகுதியில் இருக்கும் மிகச் சிறந்த அழகிகளில் ஒருத்தியும் ஒரு பெரிய வர்த்தகரின் மனைவியுமாகவும் இருந்தாள்.
அவள் பயத்தால் வெளிறிப் போய்க் காணப்பட்டாள். பைத்தியம் பிடித்தவர்களின் முகத்தைப்போல அவளுடைய முகம் மிகவும் சோர்வுடன் இருந்தது. கைகள் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தன. இரண்டு முறை அவள் பேச முற்பட்டாள் என்றாலும், குரல் வெளியே வரவில்லை. ஆனால், இறுதியில் திக்கித் தடுமாறியவாறு அவள் இப்படிச் சொன்னாள்:
“சீக்கிரமா வரணும் டாக்டர். என்னுடைய... என்னுடைய காதலர் என்னுடைய அறையில் இறந்து கிடக்கிறார். அதிகமாக உணர்ச்சி வசப்பட்டதால் அவருக்கு மூச்சுவிட முடியாமல் போய்விட்டது.” - அவள் தொடர்ந்து சொன்னாள்: “என்னுடைய கணவர் - வெகு சீக்கிரம் க்ளப்பில் இருந்து வீட்டிற்கு வந்துவிடுவார்.” ஒரு இரவு உடை மட்டுமே அணிந்திருக்கிறேன் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நான் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தேன். வெகு சீக்கிரமே நான் ஆடைகளை எடுத்து அணிந்தேன். தொடர்ந்து அவளிடம் கேட்டேன்: “சிறிது நேரத்திற்கு முன்னால் நீங்கள் இங்கே வந்திருந்தீங்களா?”
பயத்தால் ஒரு கல்லைப்போல நடுங்கிக் கொண்டு அவள் சொன்னாள் : “இல்லை. என்னுடைய வேலைக்காரி அது. அவளுக்கு அது தெரியும்.” சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்: “நான் அந்த மனிதருக்கு அருகில்தான் இருந்தேன்.”