Lekha Books

A+ A A-

யானை மயிர் - Page 2

yanai mayir

இரவும் பகலும் சிந்தனைதான். உயிர் உள்ள ஒரு ஆண் யானையின் வாலில் இருக்கும் மயிரை எப்படித் திருடுவது? கட்டிப் போடப் பட்டிருக்கும் யானையின் பின்னால் போய் நின்று கொண்டு மெதுவாக வாலைப் பிடித்து ஒரு மயிரைத் திருடலாம். ஆனால், திடீரென்று யானை திரும்பிக் குத்திவிட்டால்...? இறுதியில் ஒரு எளிய வழியைக் கண்டு பிடித்தேன். யானைகளும் நாங்களும் ஒன்றாகச் சேர்ந்துதான் ஆற்றில் குளிப்போம். யானைப் பாகன்களிடம் சேர்ந்து கொண்டு பெரிய கருங்கற்களால் நான் பல நேரங்களில் யானையின் உடலைத் தேய்த்திருக்கிறேன்.

அனைவரும் யானைகளும் குளிப்பது படகுகள் இருக்கும் படித்துறையில்தான். பெரிய நதி. கண்ணீரைப் போன்ற தண்ணீர். நதியில் கரையுடன் சேர்ந்திருக்கும் நீரில் மூன்று யானைகள் கிடக்கின்றன. நடுவில் இருப்பதுதான் ஆண் யானை. அவனுடைய வாலைத்தான் திருட வேண்டும்!

ஏராளமான பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவோ பேர் நீந்திக் கொண்டிருந்தார்கள். இடையில் படகிலும் மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் வாப்பாவும் இருந்தார். மாமாவும் இருந்தார். சங்கரன் குட்டியும் கிருஷ்ணனும் இருந்தார்கள். பத்மநாபன் நாயரும் அவுசேப்பு மாப்பிள்ளையும் இருந்தார்கள். நானும் நத்தை தாமுவும் வேட்டிகளைக் கழற்றி விட்டு நீருக்குள் குதித்தோம். நத்தை தாமுவை அவனுடைய தந்தை தேய்த்து அழுக்கை நீக்கி குளிப்பாட்டினார். வாப்பா என்னை முழுமையாகக் குளிக்கச் செய்தார். பிறகு நான் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று தூரத்தில் போய் மேலே வந்தேன். சுற்றிலும் பார்த்தேன். ஒரு குறையும் இல்லை. யாரும் என்னை கவனிக்கவில்லை. நல்ல தருணம். நான் தண்ணீருக்குள் மூழ்கியவாறு மெதுவாகச் சென்று ஆண் யானைக்குப் பின்னால் தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தேன்.

வாலைத் தேடி கண்டு பிடித்தேன். நல்ல உயரம். பற்களால் நீளமான ஒரு மயிரைக் கடித்து அறுத்தெடுக்கலாம். கடித்து அறுக்க முயற்சித்தேன். முடிய வில்லை. நான் கடித்து வாலை பலமாகப் பிடித்து விலக்கினேன். பலமாக இழுத்த நினைவு இருக்கிறது. பிறகு ஒரே ரகளைதான்...

வாலில் இருந்த பிடியை விட்டு நான் மேலே வந்தேன். யானை பயங்கரமாகப் பிளிறியவாறு எழுந்து திரும்பியது. என்னைப் பார்த்தது. நான் ஒரே மூழ்காக மூழ்கி விட்டேன். மரண பயத்துடன் தண்ணீருக்குள் மூழ்கியவாறு வேகவேகமாக மண்ணை மிதித்துத் தள்ளி மிதித்துத் தள்ளி.... பாய்ந்து... பாய்ந்து... சென்றேன். மூச்சு விட வேண்டும். தொண்டைக்குழி வெடிக்கப் போகிறது. எனினும், தண்ணீருக்கு மேலே வரவில்லை. இறுதியில் போய்... போய்... தண்ணீரில் இருட்டாக இருந்த பகுதியில் மேலே வந்தேன்.

நதியில் சாய்ந்து கிடந்த பருத்திக் காட்டில்... எக்சைஸ் ஸ்டேஷனுக்கு மிகவும் அருகில் நான் திரும்பிப் பார்த்தேன். யானை தும்பிக்கையை தூக்கி கொம்புகளை உயர்த்தி பயப்படக்கூடிய விதத்தில் பிளிறியது. வேறு இரண்டு யானைகளும் எழுந்து பிளிறின. மனிதர்கள் ஓடுவதும் ஆரவாரமும். நான் முழுமையான நிர்வாண கோலத்தில் இருந்தேன். கரையில் ஏறினேன். முட்கள், குண்டு குழிகள் ஆகியவற்றின் வழியாக ஓடிப் பாய்ந்து கொடிகள் படர்ந்திருந்த ஒரு பெரிய மரத்தில் வேகமாக ஏறினேன். இலைகளின் மறைவில் ஒரு கிளையில் உட்கார்ந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். கடிக்கும் எறும்பு என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தது. நான் அவற்றைத் தள்ளி விரட்டி விட்டு பயத்துடன் உட்கார்ந்திருந்தேன். நேரம் எவ்வளவு ஓடியது என்று தெரியவில்லை. யானைகளின் சத்தமும் மனிதர்களின் சத்தமும் நின்று விட்டிருந்தன. என்னுடைய உடம்பில் இருந்த தண்ணீர் முழுவதும் உலர்ந்து விட்டிருந்தது. கடிக்கும் எறும்பின் எரிச்சல் மட்டும் இருந்து கொண்டிருந்தது. நான் அதே இடத்தில் உட்கார்ந்திருக்க, வாப்பாவின் உரத்த அழைப்புச் சத்தம் கேட்டது. என் பெயரைக் கூறி அழைத்தார். நான் "வாப்பா....'' என்று அழைத்தேன். பிறகு இறங்கிச் சென்றேன். வாப்பா உடம்பில் இருந்த துண்டை எடுத்து என்னை அணியச் செய்தார். தொடர்ந்து என்னுடைய தலையைத் தடவினார். உடம்பெங்கும் கடித்து ஒட்டிக்கிடந்த எறும்புகளை எடுத்துக் கீழே போட்டார்.

நாங்கள் வீட்டிற்குச் சென்றோம். நான் உம்மாவிடம் சொன்னேன்:

"உம்மா, என் வேட்டி போய் விட்டது.''

உம்மா சொன்னாள்:

"எல்லாருடைய வேட்டிகளும் போய்விட்டன.''

யானை செய்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்கள் துணியும் கோவணமும் இல்லாமல் தட்டுத் தடுமாறி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். ஆண் யானை ஒரு பெண் யானையை மெதுவாகக் குத்திவிட்டது. யானைப் பாகன்கள் மிகவும் சிரமப்பட்டு எல்லா யானைகளையும் கொண்டு சென்று கட்டிப் போட்டிருக்கிறார்கள். ஆண் யானைக்கு அந்த நிமிடமே மதம் இல்லாமல் போய் விட்டிருக்கிறது.

அது உண்மை அல்ல. எல்லா ரகளைகளுக்கும் மூல காரணம் நான்தான். இந்த உண்மையை எப்படிக் கூறுவேன்? அறிய நேர்ந்தால், வாப்பா என்னை கட்டித் தொங்க விட்டு புகையை இடச் செய்வார். நான் சொன்னேன்:

"வாப்பா, அதற்கு மதம் பிடிக்கவில்லை.''

"பிறகு?''

"கடித்து இழுத்தேன்.''

"எதைக் கடித்து இழுத்தாய்?''

"வாப்பா! நான் யானையைக் கடித்தேன்.''

"நீ ஆண் யானையைக் கடித்தாயா?''

"ஆமாம்... நான் மூழ்கிச் சென்று அதன் ஒரு மயிரைக் கடித்து இழுக்க முயற்சித்தேன்.''

உம்மா சொன்னாள்:

"கடவுளே! அதற்கு எவ்வளவு வேதனை உண்டாகியிருக்கும்!''

வாப்பா சிரித்தார். நீண்ட நேரம் சிரித்தார். பிறகு கேட்டார்:

"உனக்கு எதற்கு யானை மயிர்?''

நான் சொன்னேன்:

"வாப்பா, உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு மனிதர் இருக்கிறாரே! அந்த எக்சைஸ் இன்ஸ்பெக்டர்...! அவருடைய மகள் ராதாமணி என்னிடம் ஒரு யானை வால் வேண்டும் என்று கேட்டாள்.''

உம்மாவிற்கு அப்போதுதான் சிரிக்கத் தோன்றியது.

"தங்க மகனே....'' உம்மா சொன்னாள்: "பெரிய ஆபத்து எதுவும் உண்டாகாமல் அல்லா காப்பாற்றினார்.'' தொடர்ந்து வாப்பாவிடம் சொன்னாள்: "ஒரு யானை மயிரை வாங்கி இவனுக்குக் கொடுங்க. இல்லாவிட்டால் இனிமேலும் அந்த அப்பிராணி ஆண் யானையை இவன் கடிப்பான்.''

"டேய்....'' வாப்பா சொன்னார்: "இருந்தாலும் நீ அதைக் கடித்தாய் அல்லவா?''

"கடிக்கவில்லை. ஒரு யானை மயிரைக் கடித்து அதைத் தனியாக எடுக்கப் பார்த்தேன்.''

"வா.... நீ இதை யாரிடமும் கூற வேண்டாம்.''

வாப்பா என்னை யானைகளுக்கு அருகில் அழைத்துக் கொண்டு சென்றார். ஒரு பெண் யானையின் உடம்பில் ஒரு சிறிய புண் இருந்தது. யானைப் பாகன்கள் அதில் எதையோ அரைத்துப் பூசி விட்டிருந்தார்கள். அதற்குப் பிறகும் இரத்தம் சற்று வந்து கொண்டிருந்தது. ஆண் யானையின் ஒரு வாலை யானைப் பாகனிடம் கூறி அறுக்கச் செய்து வாப்பா என்னிடம் தந்தார். ஆண் யானை கிண்டல் நிறைந்த பயங்கரத் தன்மையுடன் என்னையே பார்த்தது. வயிறைக் கொண்டு "படபடா” என்று ஓசை உண்டாக்கியது. அதற்கு அர்த்தம்: "நீதானேடா மடையா யானை மயிரைக் கடித்துப் பிடுங்க வந்திருந்த திருடன்?”

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel