யானை மயிர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7221
யானை மயிர் திருடு பற்றிய கதை. ஆட்களைக் கொல்லக்கூடிய ஒரு ஆண் யானை. மிதித்து நசுக்கியும் குத்தியும் அவன் ஒன்றிரண்டு யானைப் பாகன்களைக் கொன்றிருக்கிறான். அவனுடைய வாலிலிருந்து ஒரு மயிரைத் திருட வேண்டும். திருட வேண்டியது என்று கூறினால், அது யாருக்கும் தெரியக் கூடாது- யானைப் பாகன்களுக்கும் வாப்பாவிற்கும் உம்மாவிற்கும். அதைக் கடித்துப் பிடுங்குவதற்கு முயற்சி- ஆள் நான் தான்.
ஒரு யானை அல்ல. மூன்று யானைகள். இரண்டு பெண் யானையும் ஒரு ஆண் யானையும். அந்த ஆண் யானையின் வாலிலிருந்து ஒரு மயிர் வேண்டும். என்னுடைய சொந்த தேவைக்கு அல்ல. ராதாமணிக்காகத் தான். எக்சைஸ் இன்ஸ்பெக்டரின் மகள். அவள் என்னுடைய வகுப்பில் படித்தவள். புத்தகத்தில் வைப்பதற்கு அவள் எனக்கு மயிலிறகு தந்திருக்கிறாள். அப்போது எனக்கு யானை மயிர் என்ற ஒரு கிண்டல் பெயர் இருந்தது. நண்பர்கள் கேட்பார்கள்: "யானை மயிர், எங்கே போகிறாய்?'' இல்லா விட்டால் , "யானை மயிர், உன் கணக்கு தவறாகிவிட்டது. வட்ட பூஜ்யம்!'' யானை வாலுக்கு யானை மயிர் என்று நான் கூறியிருந்தேன். அன்று எனக்கு எட்டோ ஒன்பதோ வயதுகள் இருக்கும்.
அந்தக் காலத்தில் நாங்கள் காலையில் கண்விழிப்பதே யானைகள் மீதுதான். வாப்பா "தடி” என்று கூறப்படும் மர வியாபாரியாக இருந்தார். குடயத்தூர் மலையிலிருந்து மரங்களை வெட்டி மிதவைகளாக ஆக்கி, நதியின் வழியே கொண்டு வருவார். வீட்டிற்கு அருகில் நதியின் கரையில் இருக்கும் நிலங்களில் மரத்தடிகளை இழுத்துக் கொண்டு வந்து போடுவதற்குத்தான் யானைகள். வீட்டிற்கு அருகிலிருந்த நிலத்தில் யானைகளைக் கட்டிப் போட்டிருப்பார்கள். யானைகளுக்கு தென்னை ஓலை, பனை ஓலை ஆகியவற்றைக் கொடுப்பதற்கு நான் மேற்பார்வையாளராக இருப்பேன். அதாவது- நான் பார்த்துக் கொண்டு நின்றிருப்பேன்- யானைகளுடைய எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொள்பவன் என்பதைப்போல. கிளறி எடுக்கும் மண்கட்டியை எடுத்து யானையின் முதுகில் எறிந்து சிதறச் செய்வது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருக்கும். என்னுடைய கை அரித்துக் கொண்டிருந்தாலும், நான் அதைச் செய்ய மாட்டேன். நண்பர்களில் யாராவது யானைகளை மண் கட்டிகளை எடுத்து எறிகிறார்களா என்று பார்ப்பேன். ஒருநாள் நத்தை தாமுவிற்கு மண் கட்டியை எறிவதற்கு நான் சம்மதம் தந்தேன். அவன் ஒரு கட்டியை, ஆண் யானையின்மீது எறிந்து நொறுங்கச் செய்தான். அதற்கு அவன் எனக்கு ஒரு சிறிய மாம்பழத்தைத் தந்தான்.
யானைப் பாகன்களுக்கு ஒரு விதமான நெருங்கிய நண்பனாக நான் இருந்தேன். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து தருவேன். யானைப் பாகன்கள்தான் உலகத்திலேயே திறமைசாலிகள். அவர்கள்மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. யானைப் பாகன்களை வழிபட்டேன். எதிர்காலத்தில் ஒரு யானைப் பாகனாக வேண்டும்- அதுதான் என்னுடைய ஆசை. "யானை...!” என்று சத்தம் போட்டு மூக்கின் வழியாகக் கூறுவதற்கு நான் கற்றுக் கொண்டேன். யானையின் காதில் மாட்டி இழுக்கக்கூடிய "தோட்டி”யை நான் மினுமினுப்பு பண்ணிக் கொடுப்பேன். குச்சிகளில் இருக்கும் தூசுகளை நான் துடைத்து வைப்பேன். கையில் இருந்த ஒரு பெரிய ஈட்டியை எங்களுடைய வீட்டின் வராந்தாவில் சாய்த்து வைத்திருந்தேன். அதைத் தொடுவதற்கு யாரையும் நான் சம்மதிப்பதில்லை. யானைப் பாகன்களுக்கும் எனக்குமிடையே நெருக்கமான நட்பு இருந்தது. நல்ல இளம் வெற்றிலை, பழுத்த பாக்குக்காய், ஜாப்பாணம் புகையிலை- எல்லாவற்றையும் வீட்டிலிருந்து திருடிக் கொண்டு போய் யானைப் பாகன்களுக்குக் கொடுப்பேன். யானைப் பாகன்கள் பேசுவதை நான் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருப்பேன். ஒரு யானைப் பாகனாக ஆக வேண்டும்!
அப்படி இருக்கும்போது ராதாமணிக்கு ஒரு ஆசை. ரகசியமாக அவள் என்னிடம் சொன்னாள்:
"எனக்கு ஒரு யானை வால் வேணும். தர முடியுமா?''
எனக்கென்று சொந்தத்தில் யானை இருந்திருந்தால், ஒரு முழு யானையையே ராதாமணிக்குக் கொடுத்திருப்பேன். நான் அதை அவளிடம் கூறவும் செய்தேன். அப்போது ராதாமணி சொன்னாள்:
"முழு யானை வேண்டாம்... வெறும் ஒரு யானை வால் போதும்!''
"தருகிறேன்.'' நான் சொன்னேன். அப்துல்காதர், நத்தை தாமு ஆகியோருக்கு முன்னால் கொடுப்பதாகச் சொன்னேன். சாதாரணமாக வாப்பா, உம்மா ஆகியோருக்கு வேண்டியவர்களுக்கு யானை மயிர் வாங்கிக் கொடுப்பதுண்டு. விரலில் மோதிரமாக அணிவதற்கு. சிலர் கையின் மணிக்கட்டில் கட்டிக் கொள்வார்கள். யானை மயிருக்கு அற்புத சக்தி இருக்கிறது!
சிரமமே இல்லாமல் எனக்கு யானை வால் கிடைக்கும். யானைப் பாகன்கள் எல்லாரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆயிற்றே! எனினும், ஒரு யானை வாலை வாங்கித் தரும்படி நான் வாப்பாவிடமும் உம்மாவிடமும் கூறினேன். இருவரும் சொன்னார்கள்:
"உனக்கு இப்போது யானை வால் வேண்டாம்!''
அதை யானைப் பாகன்கள் கேட்கிற மாதிரி கூறினார்கள். அவர்கள் வேறு எண்ணத்திற்கு மாறிய விஷயம் எனக்குத் தெரியாது. நத்தை தாமுவும் அப்துல்காதரும் அவர்களிடம் என்னைப் பற்றி என்னவோ கூறினார்கள். அது மட்டுமல்ல- ஒரு சிரட்டை நிறைய இருந்த வறுத்த முந்திரிப் பருப்பை யானைப் பாகன்களுக்குத் தந்தார்கள்.
நான் யானைப் பாகன்களிடம் சொன்னேன்: "ஒரு யானை வால் வேணும்.''
யானைப் பாகன் கிண்டல் பண்ணுகிற குரலில் சொன்னான்:
"யானைக்கு இருப்பதே ஒரே ஒரு வால்தான். அதை அறுத்தால் யானை என்ன செய்யும்?''
நான் சொன்னேன்:
"எனக்கு முழு வாலும் வேண்டாம். ஒரு மயிர் போதும்.... யானை மயிர்.''
"யானை மயிர்.'' யானைப் பாகன்கள் சிரித்தார்கள்: "இது என்ன கோழியா?''
"ஒரு யானை மயிர்...'' நான் கெஞ்சினேன். யானைப் பாகன்கள் தரவில்லை. நத்தை தாமுவும் ஊனக்கால் கொண்ட அப்துல்காதரும் கேட்கும்படி யானைப் பாகன்கள் கூறினார்கள். அவர்கள் எனக்குத் தருவதாக இருந்தவைதானே! வெற்றிலை, பாக்குக்காய், இளநீர், புகையிலை, பழம், அல்வா, பேரீச்சம்பழம் ஆகியவற்றை நான் யானைப் பாகன்களுக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன் அல்லவா? அவை போதாது என்று, வாப்பா புகைக்கும் நல்ல வாசனையைக் கொண்ட தடிமனான சுருட்டையும் நான் கொண்டு வந்து தரவில்லையா? மிகப் பெரிய மனிதர்களான யானைப் பாகன்கள் இந்த அளவிற்கு நன்றி கெட்டவர்களா? நான் கேட்டது வெறும் யானை மயிரைத்தான். தரவில்லை. சரி... இருக்கட்டும். நான் யார் என்று காட்டுகிறேன்.
ஒரு யானை மயிரை நான் திருடுவேன்.
எப்படி?