விடுதலை பறவை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7208
அதுவே பேச்சுக்கிடமான ஒரு விஷயமாகிவிட்டது. உடனே அவளை வீட்டை காலி செய்யும்படி கூறிவிட்டான். அதே தெருவில் குடியிருக்கும் நாயர் வீட்டுச் சிறுவன் ஒருவன்- வீட்டின் சொந்தக்காரன். குழந்தை பிறந்த பத்தாவது நாள் பச்சிளங் குழந்தையையும், மற்ற இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள் ஸைனபா. வீட்டின் படியைவிட்டு இறங்கும்போது அவளையும் மீறி அவளுடைய விழிகள் இரண்டிலுமிருந்தும் கண்ணீர் அருவியென வழிந்தது. அதைக் கையால் துடைத்த அவள், அதற்குப் பிறகு அழவேயில்லை.
நகரம் ஒரே சத்தமும் சந்தடியுமாக இயங்கிக் கொண்டிருந்தது. மூன்று நாட்கள் சென்றன. பசியைத் தாங்க முடியாமல், ஒருநாள் அவளுடைய இரண்டு குழந்தைகளும் எங்கோ ஓடிவிட்டனர். பச்சிளங் குழந்தையை மட்டும் மார்பில் இடுக்கியவாறு ஸைனபா கடை வீதிகளில் அலைந்து திரிந்தாள். ஒரு கடையின் ஓரம்தான் அவளும் அந்தக் குழந்தையும் வசிக்கும் இடம்.
எத்தனை முறை சப்பினாலும் பால் வராமல் போகவே "கீ...கீ...' என்று இடைவிடாமல் அழுதது குழந்தை.
அப்போதும் மார்போடு அவனைச் சேர்த்து அணைத்துக் கொண்டுதானிருந்தாள் ஸைனபா. ‘‘பாபா... பாபா... என் ராசா இல்ல... மந்திரி இல்ல... பாபாபா!''
ஆனால், அவனுடைய அழுகை மட்டும் நிற்கவேயில்லை. அவனுக்குத் தேவை தாலாட்டு அல்ல, உணவு... பால்...
தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸைனபா. நேரம் மாலையாகி விட்டிருந்தது. மழை வருவதுபோல இருந்தது. வானத்தில் இங்குமங்குமாக மேகங்கள் திரள் திரளாக நகர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய உடல் குளிரால் வெடவெடத்துக் கொண்டிருந்தது. குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. ‘‘கீ...கீ...கீ...''
அவளால் என்ன செய்ய முடியும்? கடைகளிலிருந்து மின்சார விளக்குகள் ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன. செய்யது குட்டியின் தேநீர்க் கடையில் ஒரே கூட்டம். நோன்பு காலமாதலால் நோன்பு துறக்க வருபவர்களின் கூட்டம் இந்த நேரத்தில் அவன் கடையில் சற்று அதிகமாகவே இருக்கும். தங்கம்போல தகதகக்கும் தேநீர் கண்ணாடிக் குவளையில் பளபளத்துக் கொண்டிருந்தது. ஸைனபாவுக்கு நோன்பு இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவள்தான் தினமும் நோன்பு இருக்கிறாளே!
குழந்தை அப்போதும் நிறத்தவில்லை. "கீ...கீ...கீ...” என்று அது அழுது கொண்டேயிருந்தது. அவள் கால்கள் அவளையும் மீறி தேநீர்க் கடையை நோக்கி நடந்தன. ‘‘காக்கா ஒரு சாயா கொடேன். நான் நோன்பு இருக்கேன்.'' அவள் துணிந்து பொய் கூறினாள். அவளை யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை. அந்த அளவிற்குக் கூட்டம் அதிகமாக இருந்தது. வாழைக்காய் வறுவலை எடுத்து அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்த அவளுடைய வாயில் எச்சில் ஊறியது. நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. அவளும் இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ஆனால் ஒருவருடைய கவனமாவது அவள்மீது பட வேண்டுமே!
குழந்தை- மேலும் மேலும் அழுது கொண்டேயிருந்தது. அவ்வளவுதான்- அவள் மிருகமாகி விட்டாள். ‘‘தேவடியாளுக்குப் பொறந்த பசங்க. எவ்வளவு நேரமா நின்னுக்கிட்டிருக்கேன். என்னை பார்க்கிறான்களா? இவனுங்க எல்லாம் உருப்படுவானுங்களா... கட்டையில போறவன்க...'' என்று அவள் வெடித்துக் கொண்டிருந்தாள்.
ஸைனபாவின் உடம்பில் இருந்த தெம்பே போய்விட்டது. கை, கால்களிலெல்லாம் ஒரே குடைச்சல். தலைக்குள் ஏதோ மின்சாரம் பாய்வதுபோலிருந்தது. இனிமேலும் அவளால் நிற்க முடியாது என்ற நிலை உண்டாகவே "நச்’’சென்று தரையில் உட்கார்ந்தாள். அப்போதும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
‘‘கீ...கீ...கீ...''
மார்போடு அதைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டாள் ஸைனபா. தாலாட்டு பாடிப் பார்த்தாள். முதுகைத் தடவிக் கொடுத்துப் பார்த்தாள். ஊஹும்... குழந்தை இதற்கெல்லாம் மசிவதாய் இல்லை. அது வீறிட்டுக் கொண்டே இருந்தது.
‘‘கீ...கீ...கீ...''
அவளுடைய செவிகளில் அந்தக் குழந்தையின் அழுகை பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் செருகுவது போலிருந்தது. அது மேலும் மேலும் இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. ஆன்மாவின் அடித்தளம் வரை போய் அது குடைந்து கொண்டிருந்தது. வேதனை... வேதனை... நரக வேதனை... அவள் துடித்தாள். ஸைனபாவின் கண்கள் வெறித்து எதையோ நோக்கின. அவளுடைய கைவிரல்கள் குழந்தையின் மார்பைத் தடவிக் கொண்டிருந்தன. இறுதியில் அவை குழந்தையின் கழுத்தைத் தொட்டு நின்றன. அங்கேயே நின்ற அவளின் கை விரல்கள் குழந்தையின் கழுத்தை மெல்ல இறுக்கின. குழந்தை கதறியது: ‘‘கீ...கீ...கீல்...கீல்...!''
அவளுடைய விழிகள் இப்போதும் வானத்தை வெறித்துக் கொண்டுதானிருந்தன. தன் மகனை அவள் பார்க்கவில்லை. எலும்பு மட்டுமே எஞ்சி இருந்த அவளின் விரல்கள் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தன.
‘‘கீல்...கீல்...ங்..!''
அவளுடைய கை மேலும் இறுக்கியது. அந்த அழுகை நிரந்தரமாக நின்றது.
ஒரே அமைதி. வாகனங்களின் ஹாரன் சத்தத்தையும், குதிரை வண்டிகளில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளின் குளம்பொலியையும் தவிர, லைனபாவின் காதுகளில் வேறு எதுவும் கேட்கவில்லை.
வெறுமையாகிப் போன நிமிடங்கள்... பள்ளி வாசலில் ஒலித்த சங்கொலி கேட்டு, அவள் சுய உணர்விற்கு வந்தாள். அவளுடைய கை அப்போதும் குழந்தையின் கழுத்தில்தான் இருந்தது. "பிஸ்மி’’ கூடக் கூறிக் கொள்ளாமல் அந்தக் குழந்தை உலகை விட்டுப் போய்விட்டது.
இப்போது தன்னை ஒரு விடுதலை பறவைபோல் உணர்ந்தாள் ஸைனபா. தன்னையும்மீறி அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
சிறிது நேரத்தில் அவள் கலகலவென சிரிக்கத் தொடங்கினாள். சிரித்து முடித்ததும் அழுதாள். அழுது முடித்ததும் சிரித்தாள்... சிரித்து முடித்ததும்...
அவளுடைய அழுகையும் சிரிப்பும் அப்பகுதி முழுவதும் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.