விடுதலை பறவை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7208
மூன்று நாட்களாக இடைவிடாமல் பெய்து கொண்டிருந்த மழை நகரையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அழுகிப்போன வாழை இலைகளும், குப்பைகளும், கெட்டுப்போன காய்கறிகளும் கிடந்து, சாக்கடையில் ஒரு வகையான சகிக்க முடியாத அளவிற்குத் துர்வாசனையைக் கிளப்பிக் கொண்டிருந்தன. அது தெருவோடு நிற்காமல் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து, வீட்டிலுள்ளோருக்குக் குமட்டல் வரும்படி செய்து கொண்டிருந்தது.
ஆனால், ஸைனபாவிற்கு இதுபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையில்லை. சொல்லப் போனால், அவளுக்கு இது பழகிப்போன ஒன்று. அவள் எத்தனையோ வருடங்களாக அனுபவித்து, அனுபவித்து இந்தச் சூழலைக்கூட பழகிக்கொண்டு விட்டாள். மழை பெய்யும் போதெல்லாம் அவளுக்குள் ஒருவகையான கலக்கம் ஏற்படும். மார்பைக் கைகளால் அடித்துக் கொண்டு என்னென்னவோ முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். அவளுடைய திறந்துகிடக்கும் மார்பகங்களைச் சப்பிக் கொண்டு அவளுடைய கடைசிப் பையன் கங்காருவின் குட்டியைப்போலத் தொங்கிக் கொண்டிருப்பான். பார்ப்பதற்கு அவன் ஒரு மானிடப் பிறவி என்று சொல்லவே முடியாது. ஒட்டிப்போன வயிறும், எலும்பும் தோலுமாக இருக்கும் கை, கால்களும் அவன் குழந்தைதான் என்ற வாதத்தைக்கூட மறுப்பது போல் இருக்கும். அவனும் சப்பிச் சப்பித்தான் பார்க்கிறான் ரத்தம் வருமளவிற்கு. ஆனால், பால் வந்தால்தானே?
‘‘என்னக் கடிச்சுக் குதறிடுவே போலயிருக்கே, பாவி மவன்'' என்று கூறியவாறு அவன் தொடைப் பகுதியில் ஒரு அடி கொடுத்தாள் ஸைனபா. அடியின் வேதனை தாங்க முடியாமல் அவன் கதற ஆரம்பித்துவிட்டான். அழுவதற்குக்கூட அந்தக் குழந்தைக்குச் சக்தியில்லை. ‘‘கீ...கீ...'' என்று ஏதோ பறவை கத்துவதைப்போலிருந்தது அவனது அழுகைக் குரல்.
‘‘என்ன ஸைனபா, ஒரே அழுகைச் சத்தமாயிருக்கு! என்ன, குழந்தையை அடிச்சிட்டியா?'' சிகரெட்டும் கையுமாக நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் கேட்டான்.
‘‘ஆமாம் அண்ணே... எல்லாம் என் தலைவிதி குருப்பு அண்ணே... ஒரு துண்டு பாக்கு கொடேன்.''
அதற்குப் பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. குடையை மடக்கிப் பேசாமல் நடந்தான். ஸைனபாவிற்கு ஒரு பக்கம் கோபம்; மற்றொரு பக்கம் வருத்தம். அவளுடைய வயிறு பசி தாங்காமல் எரிந்து கொண்டிருந்தது. நேற்று மாரியம்மன் கோவிலுக்கு முன்னால் கடை போட்டிருந்த கோஸாயி முதலாளி ஒரு துண்டு வேக வைத்த கப்பைக் கிழங்கு கொடுத்தார். அதற்குப் பிறகு அவள் இதுவரை எதுவுமே சாப்பிடவில்லை. அருகிலிருந்த செய்யது குட்டியின் தேநீர் கடையில், அவன் போடும் தேநீர் தங்கம்போல "தகதக’’வென்று கண்ணாடிக் குவளையில் மின்னிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு டம்ளரிலும் இருக்கும் தேநீரை ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தாள் ஸைனபா. ‘‘அந்தப் பக்கம் தள்ளி நில்லு'' என்று கத்தினான் செய்யது குட்டி. மூன்றாவது முறையாக ஏதாவது கிடைக்காதா என்று ஏக்கம் நிறைந்த கண்களுடன் கடையின் முன்னால்போய் நின்று கொண்டிருந்தாள் ஸைனபா. அவளுடைய முகத்தைக் கண்ட கடைக்காரன் சுடுநீரை எடுத்து அவள்மீது வீசியபோது, குழந்தையை மார்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு அழுதவாறு அவ்விடத்தை விட்டு ஓடத்தான் அவளால் முடிந்தது.
‘‘கீ...கீ...கீ...'' செப்புப் பாத்திரத்தின் அடிப்பகுதியைக் கைகளால் தட்டினால் ஒரு ஓசை வருமே, அதுமாதிரி இருந்தது அந்தக் குழந்தையின் அழுகை. குழந்தையின் வயிற்றை மெல்ல தடவிக் கொடுத்தாள் அந்த அன்புத் தாய். ‘‘பாபாபா... பாபாபா... பாபா... எங்கப்பன்ல... அழாதே... பாபாபா... எங்கப்பன்ல... என் ராஜால்ல... அம்மா நான் முறுக்கு வாங்கித்தர்றேன். முட்டாயி வாங்கித் தர்றேன். அழாம இருக்கணும் என் ராசா, பாபாபா... பாபாபா...'' என்று குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்குப் போராடிய அந்தத் தாய் தன்னுடைய மார்பகத்தை எடுத்து குழந்தையின் வாய்க்குள் திணித்தாள். ஏதோ வயிறே நிறைந்து விடுகிற மாதிரி குழந்தையும் மார்புப் பகுதியினுள் தலையைப் புதைத்துக் கொண்டது. அவ்வப்போது அவன் தாயைப் பார்த்தான். அவனுடைய முதுகை அன்புடன் தடவிக் கொடுத்தாள் ஸைனபா. அவனைப் பெற்றெடுக்கத்தான் அவள் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டிருக்கிறாள்! உடம்பிலுள்ள நரம்புகள் ஒவ்வொன்றும் அறுந்துவிடும் அளவிற்கு அவளுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருந்தது. உடம்பு முழுவதும் ஒரே நரக வேதனை. காலிலிருந்து தலை வரை நடுக்கம் வேறு. இதற்கு முன்பு அவளும் எத்தனையோ குழந்தைகளைப் பெற்றெடுக்கத்தான் செய்திருக்கிறாள். இந்த அளவிற்குத் துன்பம் ஒருபோதும் அவள் அனுபவித்ததில்லை. அன்று அவள் தன் கணவனின் அன்பின்கீழ் இருந்தாள். அவன் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றினான். வெள்ளை வெளே ரென்று இருக்கும் ஆடையும், தலையில் தொப்பியும், தொப்பிக்கு மேல் தலைப்பாகையும், கழுத்தில் டாலரும், நடக்கும்போது "ஙொய் ஙொய்' என்று ஓசையெழுப்பும் செருப்பும் அணிந்து அவன் தெருவில் நடந்து செல்லும்போது, கொண்டை போட்டு கையில் மடக்கிப் பிடித்த குடையுடன் நின்று கொண்டிருக்கும் ஸைனபா அவனிடம் கேட்பாள்: ‘‘என்ன, உங்களுக்கென்ன ராஜாவுக்கு! பார்க்க சுல்தான் மாதிரியில்ல இருக்கீங்க?'' உட்காருவது, நடப்பது எல்லாமே சுல்தான் மாதிரிதான். அன்று அவன் "ஸைனபா’’ என்று அழைக்கும்போது, அவனுடைய அந்தக் குரலில் தேன் வழிவது போலிருக்கும். ஆனால் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவளுடைய முக அழகே போய்விட்டது. முகத்தில் களையே இருக்காது. அவளையே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவளுடைய சுல்தானுக்கு இல்லாமல் போய்விட்டது. நாட்கள் செல்லச் செல்ல, அவனைக் காண்பதுகூட அரிதாகிவிட்டது. ‘‘நீங்க இத்தன நாளும் எங்க போயிருந்தீங்க?'' என்று அவனைக் காணும் நேரத்தில் அவள் கேட்பாள். ‘‘பேசாம நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போடி...'' என்பான் அவன். வெறுப்பு, அழுகை- இது அந்த வீட்டில் எப்போதும் குடிகொள்ள ஆரம்பித்துவிட்டது. ‘‘கடவுள் இதையெல்லாம் பொறுக்க மாட்டார்...'' என்று அழுவாள் ஸைனபா. ‘‘நாக்கை அடக்குடி மூதேவி!'' என்று கையை ஓங்குவான் அவள் கணவன். சில சமயங்களில் அவ்வாறு ஓங்கிய அவனுடைய கை அவளுடைய முதுகைப் பதம் பார்த்ததுமுண்டு. அவனுக்கு இளமையிருந்தது; கையில் பணமிருந்தது; உடம்பில் தெம்பு இருந்தது. எலும்பும் தோலுமாக இருக்கின்ற ஒரு பெண்ணைக் சுற்றிக்கொண்டு திரிய வேண்டும் என்பது அவன் தலைவிதியா என்ன? ஒரு விதத்தில் பார்க்கப்போனால் அது நியாயம்தானே? அவளைக் கண்ட போதெல்லாம் அவன் எரிந்து விழுவான். அவளை அவன் நிக்காஹ் செய்து கொண்டதுகூட எத்தனையோ எதிர்ப்புகளை மீறித்தான். சுற்றம் சூழவென்று ஒரு ஆள்கூட இல்லாமலிருந்த அவளைத் திருமணம் செய்ய பலமான எதிர்ப்பு. ஆனால் அமைதியான குணத்தைக் கொண்ட அவளைத் திருமணம் செய்தே தீருவது என்று அவன்தான் ஒரே பிடிவாதமாய் ஒற்றைக் காலில் நின்றான்.